Published:Updated:

``போராட்ட குணம்மிக்க என் தம்பியை இழந்துவிட்டேன்!''- கண்கலங்கிய ஸ்டான் ஸ்வாமியின் அண்ணன் இருதயசாமி

ஸ்டான் ஸ்வாமி
ஸ்டான் ஸ்வாமி

பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தார் ஸ்டான் ஸ்வாமி.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள விரகாலூர் கிராமத்தில் வசித்தவர் லூர்துசாமி - கிப்பேரிம்மாள் தம்பதி. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகள். இவர்களில், ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி. இவர் 1937-ம் ஆண்டு ஏப்-26-ம் தேதி பிறந்தார். 20-ம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். 1957-ம் ஆண்டு, மே மாதம் 30-ம் தேதி ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி துறவியாக மாறியதோடு பாதிரியாராகவும் ஆனார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.ஏ வரலாறு பட்டம் பெற்றார். பாதிரியார் படிப்பு படிப்பதற்காக 14 வருடங்கள் திண்டுக்கல், மணிலா, பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். இதன் பின்னர் 15 வருடங்கள் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி என்ற தனது பெயரை ஸ்டான் ஸ்வாமி என மாற்றிக்கொண்டு பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவந்தார்.

அவரது வீடு
அவரது வீடு

புனே பீமா-கோரேகாவ் வன்முறை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசை நோக்கிப் பல கேள்விகளை பலரும் எழுப்பிவருகின்றனர்.

இது குறித்து லால்குடியில் வசித்துவரும் ஸ்டான் ஸ்வாமியின் மூத்த அண்ணன் இருதயசாமி பேசுகையில்,

மூத்த அண்ணன் இருதயசாமி, அவரது குடும்பத்தினர்
மூத்த அண்ணன் இருதயசாமி, அவரது குடும்பத்தினர்


”இருபது வயதில் வீட்டைவிட்டுச் சென்றவர். வருடத்துக்கு ஒரு முறை இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார். அதுவும் வேறு சில பிரச்னைகளுக்காக திருச்சி வரும்போது அப்படியே வீட்டுக்கு வந்துட்டு போவார். இப்படித்தான் இருந்தது எங்களுக்கும் அவருக்கும் உண்டான தொடர்பு.

அண்ணன் இருதயசாமி
அண்ணன் இருதயசாமி

குடும்பத்தைப்பற்றிக் கவலைப்பாடாமல் கண்ணுக்கே தெரியாத இடத்தில் என் தம்பி கஷ்டப்படுகிறாரே என்று நினைத்து எங்களது குடும்பமே வேதனைப்பட்டது, ஆனாலும், அவரால் ஒரு சமூகத்துக்கு நீதி கிடைக்கிறதே என்று நாங்கள் பெருமைப்படுவோம். அப்படிப் போராட்டகுணம்மிக்க என் தம்பியை இன்று நாங்கள் இழந்துவிட்டோம். கடைசியாக அவரின் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லையே என்று நினைக்கும்போது எங்கள் மனம் படாதபாடுபடுகிறது" என்று கண்கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு