Published:Updated:

`மக்களைக் காப்பாத்த முடியும்னா, அது பெரிய சந்தோஷம்!' - கலெக்டரைத் தேடிவந்த 9-ம் வகுப்பு மாணவன்

இசக்கிராஜ்
இசக்கிராஜ்

`என்னோட மருந்தால், பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாத்த முடியும்னா அது மிகப்பெரிய சந்தோஷம் சார்'.

சீனாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால், 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலக அளவில் கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில், `கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன்’ என திருப்பூரைச் சேர்ந்த 9-வது படிக்கும் மாணவன், மருந்து பாட்டிலுடன் கலெக்டரைத் தேடிவந்த சம்பவம் நடந்திருக்கிறது.

மருந்துடன் கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிராஜ்
மருந்துடன் கலெக்டர் அலுவலகத்தில் இசக்கிராஜ்

திருப்பூர், ஷெரீஃப் காலனி பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் - தங்கம் தம்பதியரின் மகன் இசக்கிராஜ் (14). திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அப்போது, `கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளேன். இதை கலெக்டரிடம் கொடுத்து ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய வந்திருக்கிறேன்’ என கையில் மருந்து பாட்டிலுடன் கலெக்டரைச் சந்திக்க வந்திருந்தார்.

சிறுவன் இசக்கிராஜிடம் பேசினோம்.``கொரோனா வைரஸால் சீனாவில் எத்தனையோ பேர் உயிரிழந்திருக்காங்க. பலரும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதை என்னால தாங்கிக்கவே முடியலை. எத்தனையோ நோய்க்கு வெளிநாட்டுல இருந்து மருந்து வருது. அவங்களோட பிரச்னைக்கு நாம மருந்து கண்டுபுடிச்சா நல்லதுதானே சார். அதனாலதான் என் பாட்டிகிட்ட ஐடியா கேட்டு கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபுடிச்சிருக்கேன்.

கொரோனா வைரஸ் வாய் வழியாகப் பரவி, சுவாசிக்க முடியாமல் செய்து, உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் என்றும் சொல்கின்றனர். அதையடுத்து மருந்து கண்டுபிடிப்பதற்காக என்னுடைய பாட்டி சொர்ணத்திடம் ஐடியா கேட்டேன். `நோயினு ஒண்ணு இருந்தா, அதுக்கு மருந்துன்னு ஒண்ணு கண்டிப்பா இருக்கும். அதைக் கண்டுபிடிக்கிறதுதான் திறமையே'ன்னு பாட்டி சொன்னாங்க. இங்கிலீஷ் மருந்து இருந்திருந்தா, இறந்த அத்தனை பேரையும் காப்பாத்தியிருக்கலாமேன்'னு, நம்ம மூலிகைகளைத் தேடினேன். மூலிகைச் செடி, மருத்துவம் சம்பந்தமான புத்தகத்தை ஏற்கெனவே படிச்சிருக்கேன்.

கொரோனா
கொரோனா
`6 நாள் தனிமை; இரண்டு முறை மட்டுமே உணவு!'- கொரோனா வைரஸால் மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை, சஞ்சீவி வேர் மற்றும் வெட்டிவேர் போன்ற 11 வகை மூலிகைகளை ஒருநாள் முழுக்க வெயிலில் காய வச்சேன். மறுநாள், அதை நீரில் கொதிக்கவைத்து, இறக்கி வடிகட்டி சேகரித்தேன். கொரோனாவுக்கான மருந்து தயாரானது. இந்த மூலிகைச் சாற்றை சாப்பிட்டால், வெள்ளையணுக்கள் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, நோய் பரவலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்படுத்தும்.

16 வயசுல ராக்கெட்டை பத்தி படிச்சு, எவ்வளவோ சாதனை செஞ்ச ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தான் சார் என்னோட ரோல் மாடல். அவரை மாதிரி ஏதாவது செய்யணும்னு எனக்கு ஆசை. நாளைக்கு என்னோட மருந்தை எடுத்துக்கிட்டு கோயமுத்தூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுசெய்யப் போறேன். என் மருந்தால, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாத்த முடியும்னு இருந்தா, அது பெரிய சந்தோஷம் சார்” என்றார்.

`48 மணிநேரத்தில் சீரானது !’- கொரோனா நோயாளியைக் குணமாக்கியதாக அறிவித்த தாய்லாந்து மருத்துவர்கள்

மாணவர் கண்டுபிடித்த மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிர்ப்பு மருந்துதான் என்பது அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. மக்கள் மீதான அன்பால் சிறுவன் எடுத்த இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு