Published:Updated:

`நான் உட்கார்ந்த இடம் உனக்கு கேக்குதா?'- சேலம் ஊராட்சித் தலைவிக்கு மன்ற உறுப்பினரால் நேர்ந்த கொடுமை

மோகன்
மோகன்

பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். மோகன் 5-வது வார்டு உறுப்பினராக இருப்பதால, அவரும் அலுவலத்துக்கு வந்தார். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பதிவுசெய்ய முடியாத வார்த்தைகளால் திட்டினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தாரமங்கலத்தை அடுத்த கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர், அம்சவள்ளி. இவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அதே பஞ்சாயத்தில் 5-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் மோகன். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர்.

இவர், தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவியை சாதி பெயரைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. இதில், பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவி காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

அம்சவள்ளி
அம்சவள்ளி

கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவி அம்சவள்ளியிடம் பேசினோம். ''கடந்த முறை கோணகாபாடி பஞ்சாயத்துத் தலைவராக நிரஞ்சனா இருந்தார். ஆனால், அவருடைய கணவர் மோகன் தான் தலைவராகச் செயல்பட்டார். இந்த முறை தனிப் பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்டது. மோகன், அவருடைய தோட்டத்தில் வேலை செய்யும் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணை தலைவருக்கு நிறுத்தினார். அவரை எதிர்த்து நான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

6.1.2020-ல் தலைவராகப் பதவியேற்று இரண்டு நாள்களுக்குப் பிறகு பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். மோகன், 5-வது வார்டு உறுப்பினராக இருப்பதால் அவரும் அலுவலத்திற்கு வந்தார். நான் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பதிவுசெய்ய முடியாத வார்த்தைகளால் திட்டினார். ''(சாதிப் பெயரைச் சொல்லி அழைத்து) நான் உக்கார்ந்த இடம் உனக்கு கேக்குதா?'' என்று அடிக்க ஓடி வந்ததால் பயந்து, வீட்டுக்கு வந்துவிட்டேன். என் கணவரிடம் சொல்லி இரவெல்லாம் அழுதேன். அவர் என்னை ஆறுதல் சொல்லித் தேற்றினார்.

முதல்வர்
முதல்வர்

என்னைப் பார்க்கும் நேரமெல்லாம் சாதி பெயரைச் சொல்லி திட்டுவதும், என்னைக் கொன்னுட்டு விரைவில் இடைத்தேர்தல் நடத்துவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த இக்கட்டான கொரோனா காலத்தில், இலங்கை அகதிகள் முகாமில் வாழக்கூடிய மக்கள் குடிநீர் இல்லாமல் தவிப்பதாக கலெக்டர் அலுவலகத்திற்குப் புகார் கூறி இருக்கிறார்கள். கலெக்டரின் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்னைக் கூப்பிட்டு, அவர்களுக்கு பைப் லைன் போட்டுக்கொடுக்கச் சொன்னார்.

நானோ, 'பைப் லைன் 5-வது வார்டிலிருந்து குழிபறித்து இணைப்புக் கொடுக்க வேண்டும். அந்த வார்டு உறுப்பினர் மோகன் இதற்கு அனுமதிக்க மாட்டார். என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டி அடித்துவிடுவார்' என்றேன்.

'நீ பஞ்சாயத்துத் தலைவி. உன்னை யாரும் திட்டவோ, அடிக்கவோ முடியாது. உன்னிடம் பிரச்னை செய்தால், எனக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடு' என்றார் பி.டி.ஓ.

ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ஈழ மக்கள் தண்ணீர் இன்றி தவிப்பதை அறிந்து நான், என்னுடைய கணவர், பஞ்சாயத்து துணைத் தலைவர், செயலாளர், ஆபரேட்டர் என எல்லோரும் சென்று ஜே.சி.பி இயந்திரத்தின்மூலம் குழி தோண்டினோம். அந்த இடத்திற்கு மோகன் வந்து பணி செய்யவிடாமல் தடுத்து பகிரங்கமாக என் சாதி பெயரைச் சொல்லித் திட்டினார். நான் கூனிக் குறுகிப்போனேன். உடனே வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து மோகனிடம் பேசி, பிரச்னை செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

மோகன்
மோகன்

பத்து போலீஸார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் என எல்லோரும் இருக்கும்போதே வார்த்தைக்கு ஒருமுறை என் சாதி பெயரைச் சொல்லி அசிங்க அசிங்கமாகத் திட்டினார். உடன் இருந்தவர்கள் ஒருவர்கூட அவர் பேசுவதைத் தடுக்கவில்லை. மோகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர். அவர் மகன் திருமணத்தை எடப்பாடி பழனிசாமி நடத்திவைத்தார். முதல்வரின் உறவினர் என்பதால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க அச்சப்படுகிறது. நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் முதல்வர் வீட்டு முன்பு தீ குளிப்பேன்'' என்றார் கொந்தளிப்புடன்.

இதுபற்றி மோகனிடம் கேட்டதற்கு, ''தலைவர் இருக்கையில் அவர் புருஷன் வந்து அமர்ந்தால் திட்டாமல் எப்படி இருக்க முடியும்? நான் (பட்டியலின சாதிப் பெயரைச் சொல்லி) அந்த சாதியில் பிறக்கவில்லை என்று சொல்லுவது என்னுடைய உரிமை. இதில் எங்கு சாதி வந்தது. இலங்கை அகதிகள் முகாமிற்கு தங்கு தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தேவையில்லாமல் பிரச்னை செய்வதற்காக பைப் லைன் போடுகிறார்கள். அதனால் திட்டினேன்'' என்றார்.

இதுபற்றி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிகரிடம் கேட்டபோது, `` இவ்வழக்கை முழுமையாக விசாரித்து மோகன் என்பவர் பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு