Published:Updated:

`அரசு மருத்துவமனையில்தான் பிரசவம்னு உறுதியா இருந்தாங்க மனைவி!' - தர்மலாஸ்ரீ ஐ.ஏ.எஸ்-ன் கணவர்

தர்மலாஸ்ரீ
தர்மலாஸ்ரீ

சேலத்தைச் சேர்ந்த தர்மலாஸ்ரீ, சேலம் அரசு மருத்துவமனையில் தனக்குப் பிரசவம் பார்த்து அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

`` `அரசு அதிகாரியான நானே அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தலைன்னா பொதுமக்களுக்கு எப்படி அரசு எந்திரங்களின் மேல நம்பிக்கை வரும்?' என்ற என் மனைவியின் இந்தக் கேள்விதான் எங்களை அரசு மருத்துவமனைய நோக்கி நகர வச்சது.

என் மனைவி என்கிட்ட, `எனக்கு அரசு மருத்துவமனையில பிரசவம் பார்க்கலாம்'னு சொன்னப்போ எனக்கும் அதுதான் சரினு பட்டது. அதை நடைமுறைப்படுத்திட்டோம். இப்போ அம்மாவும் பொண்ணும் நலமா இருக்காங்க" - பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பேசத் தொடங்குகிறார் தாமரைக்கண்ணன்.

தர்மலஸ்ரீ - தாமரைக்கண்ணன்
தர்மலஸ்ரீ - தாமரைக்கண்ணன்

2019-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்ற தர்மலாஶ்ரீ, தற்போது கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் உதவி ஆட்சியர். அவரின் கணவர் தாமரைக் கண்ணன். சேலத்தைச் சேர்ந்த தர்மலாஸ்ரீ, தனக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்து அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கையை மக்களிடம் அதிகப்படுத்தி இருக்கிறார். தர்மலாஶ்ரீ பிரசவ ஓய்வில் இருக்க, தாமரைக் கண்ணனிடம் பேசினோம்.

எப்படி தோணுச்சு இந்த யோசனை..?

``எங்களுக்கு சொந்த ஊரு சேலம்தான். தர்மலாஸ்ரீ ஆலப்புழாவுல உதவி கலெக்டரா இருக்காங்க. மருத்துவரான நான் சென்னையில இருக்கேன். தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மேல எனக்கும் என் மனைவிக்கும் பெரிய நம்பிக்கை உண்டு. தனியார் மருத்துவமனைகளைவிட தரமான மருத்துவக் கருவிகளும் சோதனைக் கூடங்களும் அரசு மருத்துவமனைகளில் இருக்கு.

Vikatan

தர்மலா, கர்ப்பகாலத்தில் ஆலப்புழாவிலதான் ரெகுலர் செக்கப் பண்ணிட்டு இருந்தாங்க. டெலிவரியை சேலத்துல பார்த்துக்கலாம்னு என் மனைவி முடிவு பண்ணினப்போ, அந்த அரசு மருத்துவமனையை நாங்க போய் பார்த்தோம்.

சேலம் அரசு மருத்துவமனையில 24*7 அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் இருக்காங்க. ஆய்வுக்கூடங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவுன்னு எல்லாமே சிறப்பா செயல்படுது. ஒரு டாக்டரா எனக்கு அது ரொம்பவே திருப்தியா இருந்துச்சு.

`பொதுமக்கள்கிட்ட அரசின் சாதனைகள ஓர் அரசு அதிகாரியா கொண்டுபோய் சேர்க்கிறது என்னோட கடமை. அதுல முக்கியமானது, சுகாதாரத்துறை. நானே அரசு மருத்துவமனையைத் தவிர்க்கிறது அறமற்ற செயலா இருக்காதா?'னு கேட்ட என் மனைவி, நம்பிக்கையோட போய் சேலம் அரசு மருத்துவமனையில அட்மிட் ஆனாங்க'' என்றார்.

 டாக்டர் சுபா
டாக்டர் சுபா

சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு துறைத் தலைவர் டாக்டர் சுபாவிடம் பேசினோம். ``இங்கே ஜூலை மாதம் மட்டும் 1,072 குழந்தைகள் பிறந்திருக்காங்க. சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் தனபால்னு எல்லோரது வழிகாட்டுதலும் இதற்கு முக்கியக் காரணம். தர்மலாஸ்ரீ போன்ற அரசு அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளைத் தேடி வரும்போது, அது பொதுமக்களுக்கு நம்பிக்கையாகவும் விழிப்புணர்வாகவும் அமையுது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு மிகவும் சிறந்து விளங்கக்கூடிய ஒன்றா இருக்கு. அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ வசதினு முன்னோடியா திகழுது. மக்கள்கிட்ட அரசு மருத்துவமனை மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து அதிகப்படுத்தணும்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு