Published:Updated:

`அரசு மருத்துவர்களைப் பாதுகாக்க பிரத்யேக ஏற்பாடு!' - தஞ்சையில் கவனம் ஈர்த்த ஐ.ஏ.எஸ் அதிகாரி

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பிரத்யேக வழிகாட்டுதல்
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பிரத்யேக வழிகாட்டுதல்

``தஞ்சை மட்டுமல்ல, திருவாரூர், நாகப்பட்டினம் மருத்துவமனைகளிலும் இவை நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு கண்டிப்பாக கண்கூடான பலன் தெரியும்” என்கிறார் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க, இவர்களது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளார், தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக் கண்காணிப்பு அதிகாரி எம்.எஸ்.சண்முகம் ஐ,ஏ.எஸ்.

உபகரணங்கள் வழங்குதல்
உபகரணங்கள் வழங்குதல்

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 19,984 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டால் போதும். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது சாத்தியமில்லை. தங்களது சேவையின் அவசியம் உணர்ந்து இவர்கள் கடமையாற்றுவதால், நோயாளிகளிடமிருந்து இவர்களால் விலகியிருக்க இயலாது. இதனால் இவர்கள் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில்தான் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக் கண்காணிப்புக்கான சிறப்பு அதிகாரியான எம்.எஸ்.சண்முகம் இதுதொடர்பாக சில சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். மருத்துவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க, நேச்சுரோபதி துறையைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள், ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள், யோகக்கலை நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு, சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இதன் தொடக்க விழாவில் பேசிய தஞ்சை மண்டல கொரோனா தடுப்புக் கண்காணிப்பு அதிகாரி எம்.எஸ்.சண்முகம் ``கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள, மாஸ்க், கிளவுஸ் மட்டும் போதாது. உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டால்தான், கொரோனா பாதிப்பிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும். நோய் எதிர்ப்பாற்றல்மிக்க உடலை, கொரோனா வைரஸ் பாதிக்காது என மருத்துவ ஆய்வுகள் உறுதிசெய்கின்றன.

நுரையீரலின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், இதனுடைய நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதற்கும், நான்குவிதமான பிரத்யேக யோகாசனம் உள்ளன. இவற்றை கற்றுத்தர ஏற்பாடு செய்துள்ளோம். எலுமிச்சை சாற்றில் அதிமதுரம், இஞ்சி, வாசனை பட்டைத்தூள், பெருநெல்லி இவற்றை முறைப்படி கலந்து குடிப்பதன் மூலமாகவும், ஆடாதொடை லேகியம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் உள்ளிட்டவைகளை அருந்துவதன் மூலமும் தங்களது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்த முடியும்.

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பிரத்யேக வழிகாட்டுதல்
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பிரத்யேக வழிகாட்டுதல்

இவற்றை தினமும் உங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், கொரோனா பாசிட்டிவ்வாக இருந்து நெகட்டிவ்வாக மாறியவர்களுக்கும் இந்த சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இந்நிகழ்வின்போது வழங்கப்பட்ட, நோய் எதிர்ப்பாற்றலுக்கான பாரம்பர்ய மருந்துகளை அலோபதி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்தோடு அருந்தினர். இவரது முயற்சிக்குப் பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

``தஞ்சை மட்டுமல்லாமல், திருவாரூர், நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகளிலும் இவை நடைமுறைப்படுத்தப்படும். இதற்கு கண்டிப்பாக கண்கூடான பலன் தெரியும்” என எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு