Published:Updated:

ஊரடங்கு நீடித்தால் விவசாயிகள், தொழிலாளிகள், கடை வைத்திருப்பவர்கள் நிலை என்ன? #WhatAfterMay3

வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின், தொழிலாளர்களின் வயிற்றுப் பிழப்புக்கு வழி செய்ய வேண்டும், இல்லையே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களின் பணிகளை மீண்டும் தொடங்க அரசு அனுமதியளிக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 20-க்கு மேல் சில தளர்வுகளைச் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்த பின்னரும் கூட, ``தமிழகத்தில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை'' என அதிரடியாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி முதல் நான்கு நாள்கள் தமிழகத்தின் சென்னை போன்ற பெருநகரங்களில், அத்திவாசியப் பொருள்கள் வாங்கவும் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும், மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்குமோ என்கிற அச்சம் மக்கள் மனத்தில் எழுந்துள்ளது. எந்த வருமானமும் இல்லாமல், ஏற்கெனவே ஒரு மாத காலத்தைச் சமாளிப்பதற்கே மிகவும் திண்டாடிப் போய்விட்டார்கள் தமிழக மக்கள். அரசு கொடுத்த உதவித் தொகையும், மளிகைப் பொருள்களும் கைக்கும், வாய்க்கும் பத்தாத கதையாகிவிட்டது. வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் ஒரு மாதம் வாடகை வாங்கக் கூடாது என்கிற முதல்வரின் அறிவிப்பும், ஒரு சதவிகிதம் கூட நிறைவேறியதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்கள், மாதச் சம்பளம் வாங்குபவர்களில் என குறிப்பிட்ட சிலரால் மட்டுமே ஓரளவுக்கு இந்த ஊரடங்கைச் சமாளிக்க முடிந்தது. கட்டட வேலை, எலெக்ட்ரிக்கல் வேலை, பெயின்ட் வேலை என தினக்கூலிகளாக வேலை பார்ப்பவர்களாலும், சலூன் கடை, எலெக்ட்ரிக்கல் கடை போன்ற சிறு கடைகளை நடத்தி வந்தவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அதேபோல, தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் அங்கு பணி செய்து வந்த தொழிலாளர்களும் என்ன செய்வதெனத் தெரியாமல் விழி பிதுங்கிப் போய் நிற்கிறார்கள்.

ஊரடங்கு
ஊரடங்கு

கொரோனா பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சரிதான், அதேசமயம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின், தொழிலாளர்களின் வயிற்றுப் பிழப்புக்கு வழி செய்ய வேண்டும், இல்லையே சில கட்டுப்பாடுகளுடன் அவர்களின் பணிகளைச் செய்ய மீண்டும் அரசு அனுமதியளிக்க வேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

கிராமப்புறங்களில் விவசாயிகள், மூலதனம் போட்ட பொருள்கள் எல்லாம் அழிந்துவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் போட்ட பூ, பழம் போன்ற பொருள்களின் சாகுபடி எல்லாம் வீணாகிவிட்டன. கோடிக்கணக்கான மக்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டது.
கே.பாலகிருஷ்ணன், மாநிலச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது,

``மிகவும் நெருக்கமாக மக்கள் வாழக்கூடிய நம் நாட்டில் ஊரடங்கு, சமூக விலகல் போன்ற கட்டுப்பாடுகள் அவசியம்தான். அதேவேளை பரிசோதனைகளை, மருத்துவ நடவடிக்கைகளை வேகப்படுத்தாமல் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போவது சரியல்ல. அதனால், மக்கள் அடையும் சமூகப் பொருளாதாரப் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதும் முறையல்ல. பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கே இந்த மாதம் சம்பளம் வருமா என்று தெரியவில்லை. சிறு குறு தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கும் சம்பளம் கிடைக்கும் என்பதில் எந்த உத்தரவாதம் இல்லை. மாதச்சம்பளம் வாங்கும் இவர்களுக்கே இந்த நிலை என்றால், அன்றாடம் வேலை பார்த்துக் குடும்பம் நடத்தும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமை இன்னும் மோசம். 1,000 ரூபாய் உதவித் தொகையும், நிவாரணப் பொருள்களும் மக்களுக்குப் போதவில்லை. மே மாத அரிசியை முன்பே வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்தது அரசு. எனில், மே மாதம் ரேஷன் பொருள்கள் கொடுப்பார்களா, மாட்டார்களா எனவும் தெரியவில்லை. ஒருவேளைச் சோற்றுக்கு மக்கள் கையேந்தும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

கிராமப் புறங்களில் விவசாய வேலைகள், கிராமப்புற தொழில்கள், தொழிற்சாலைகள் ஆகியவை இயங்கும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கை வாபஸ் பெறலாம். குறைவான பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில், பாதிப்பு உள்ள குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் லாக் செய்யலாம். ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் மாநகரங்களை, நகரங்களை மட்டும் முழுமையான ஊரடங்கைத் தொடரலாம். இவற்றையெல்லாம் விட, ஒரு குடும்ப அட்டைக்கு 7,000 ரூபாய் உதவித் தொகை வழங்கினால் மட்டுமே தமிழக மக்களால் ஓரளவுக்கு இந்த பொருளாதாரப் பிரச்னையைச் சமாளிக்கமுடியும்'' என்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், ``மளிகைக்கடை, காய்கறிக்கடை, பழக்கடைகளை மட்டுமல்லாமல் மற்ற கடைகளையும் சுழற்சி முறையில் திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும்'' என்று கோரிக்கையை முன்வைத்திருக்கிறது வணிகர் சங்கப் பேரமைப்பு.

இது குறித்து வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நம்மிடம் பேசும்போது,

``ஊரடங்கு காலத்தில், மளிகை, பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மட்டும் அரசு அனுமதியளித்திருக்கிறது. ஆனால், அது மட்டுமா மக்களின் அத்தியாவசியத் தேவை. வீட்டில் சின்ன லைட் சேதம் ஆனாலோ, அன்றாடம் பயன்பாட்டில் இருக்கும் வேறு ஏதேனும் பொருள்களில் பாதிப்பு ஏற்பட்டாலோ அதைச் சரி செய்ய, அதற்குரிய பொருள்கள் வாங்குவதற்கான எலெக்ட்ரிக்கல் கடை, ஹார்டுவேர்ஸ், எலெக்ட்ரானிக் பொருள்கள் விற்கும் கடைகள் ஆகியவை இல்லை. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள். ஏற்கெனவே ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, இது போன்ற அத்தியாவசியத் தேவைக்கான பொருள்கள் கிடைக்காமல் போவது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. நுகர்வோர் மட்டுமல்ல, இது போன்ற சிறிய கடைகளை நடத்தி வருபவர்களும் இந்த ஒருமாத கால ஊரடங்கால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

விக்கிரமராஜா
விக்கிரமராஜா

மே 3-ம் தேதியோடு ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட வேண்டும். ஒருவேளை நீட்டிக்கப்பட்டால், சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். உதாரணமாக முதல் நாள், மளிகைக்கடை, காய்கறிக்கடை திறக்கப்பட்டால், அடுத்தநாள் வேறு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்யும் பட்சத்தில் எந்தத் தொழிலும் முழுமையாக முடக்கத்துக்கு ஆளாகாது. மக்களுக்கும் தங்களுக்குத் தேவையான பொருள்கள் எளிதாகக் கிடக்கும். இன்னும் ஒரு மாத காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும்கூட பெரிய பாதிப்பு எதுவும் மக்களுக்கும் இருக்காது, கடை நடத்துபவர்களுக்கும் இருக்காது.

கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, இந்த மாதச் சம்பளமே கைக்காசில் இருந்துதான் பெரும்பாலான கடைகளில் கொடுத்து வருகிறார்கள். மே மாதமும் கடைகள் அடைத்துக் கிடந்தால் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே கையில் காசு இருக்காது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும். சிறு தொழில்கள் செய்துவருபவர்களுக்கு அவர்கள் வீட்டுக்கு அன்றாடத் தேவைகளுக்குச் செலவு செய்யவே கையில் தற்போது காசு இல்லை. அரசு கொடுத்த நிவாரணமும் போதவில்லை. வியாபாரிகளுக்கென மத்திய மாநில அரசுகள் எந்த நிவாரண உதவியும் அளிக்கவில்லை.
விக்கிரமராஜா, தலைவர், வணிகர் சங்கப் பேரமைப்பு.

அதேபோல, கடைகளை தொடர்ந்து மூடி வைத்திருந்தால், கடையில் உள்ள பொருள்கள் பழுதடைய, சேதமடைய அதிக வாய்ப்பிருக்கிறது. பல கடைகளில் எலித் தொல்லைகளும் தூசும் அதிகம். இதையெல்லாம் கணக்கில்கொண்டு, சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். அரசு சொல்கிற சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், மாஸ்க் கையுறை அணிந்து வேலை செய்தல், கை கழுவுதல், ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்துதல் போன்ற விஷயங்களை கண்டிப்பாக ஒவ்வொரு கடையிலும் கடைப்பிடிப்போம்.

தமிழகத்தில் மொத்தம் 37 லட்சம் கடைகள் இருக்கின்றன. அதில், டீக்கடை, ஜெராக்ஸ் கடை, சலூன் கடை, ஸ்டூடியோ போன்ற அன்றாட வருமானத்தை நம்பியிருக்கும் கடைகள் கிட்டத்தட்ட 17 லட்சம் கடைகள். அவர்களின் குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் நிவாரண உதவியும் ஒருமாத மளிகைப் பொருள்களும் வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்கிறார்.

பொன்.குமார்
பொன்.குமார்

இது ஒருபுறமிருக்க, ``தமிழகத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெருவாரியான மக்கள் நம்பியிருப்பது கட்டுமானத் தொழிலைத்தான். விவசாயிகளுக்காவது நூறு நாள் வேலைத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எதுவும் இல்லை. இதே நிலை நீடித்தால் கட்டுமானத் தொழிலாளிகள் தெருவுக்குத்தான் வர வேண்டும்'' எனக் குமுறுகிறார், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார்.

மேலும், அவர் பேசும்போது,

``கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் மொத்தம் 33 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதில் பதிவைப் புதுப்பித்தவர்கள் 12 லட்சம் பேர். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து, ஒவ்வொருவருக்கும் 2,000 ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை, பதிவைப் புதுப்பித்தவர்களுக்கு மட்டுமே கொடுப்போம் என அரசு அறிவித்துள்ளது. இது கொரோனாவைவிட கொடுமையான போக்கு. விபத்து ஏற்படும்போது; திருமண உதவிக்கு; பிள்ளைகளின் கல்வி உதவிக்கு என நல வாரியத்தின் பலன்களைப் பெறுவதற்கு பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும் என்று சொல்வது பரவாயில்லை. ஆனால், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் விதிகள் பேசிக்கொண்டிருப்பது சரியாக இருக்காது.

கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் 3,700 கோடி ரூபாய் இருக்கிறது. அதில் இருந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாய் வழங்க வேண்டும். அது, அரசாங்கத்தின் பணமும் இல்லை. தமிழகத்தில் ஒவ்வொரு கட்டடம் கட்டும்போது, தொழிலாளர் நலனுக்காக மொத்த மதிப்பீட்டில் ஒரு சதவிகிதம் வரியாக வசூலிக்கப்படுகிறது. அந்தப் பணம்தான் வாரியத்தில் வைப்பு நிதியாக இருக்கிறது. தொழிலாளியின் பணத்தை அவன் சிரமப்படும்போது பயன்படுத்தாமல் வேறு எப்போது பயன்படுத்தப் போகிறது இந்த அரசாங்கம்.
பொன்.குமார், தலைவர், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் கட்சி.

கட்டடத் தொழிலாளிகள், இந்த 40 நாள்களை அரசு கொடுத்த உதவித்தொகையின் மூலமும், கடன் வாங்கியும் ஓரளவுக்குச் சமாளித்துவிட்டார்கள். ஆனால், ஊரடங்கு தொடர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், சரியான வழிமுறைகளோடும் மருத்துவ அறிவுறைகளோடும் மீண்டும் கட்டுமானத் தொழில்களைத் தொடங்க அனுமதிக்க வேண்டும். அரசு ஒரு குழு அமைத்து அதைக் கண்காணிக்கலாம். இதன் மூலம் பல லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைவார்கள். கட்டுமான வேலையில் கூட்டம் கூட வேண்டிய அவசியம் இல்லை. மிகப்பெரிய கட்டட வேலைகளில்தான் நூற்றுக்கணக்கானோர் வேலை செய்வார்கள். பெரும்பாலான இடங்களில் 4 பேர் 5 பேர்தான். அவர்களும் ஒன்றாக நின்று வேலை பார்க்கவேண்டிய அவசியமும் இருக்காது.

அதேபோல, கிராமப்புறங்களில் கட்டுமான வேலைகள், எலெக்ட்ரிக்கல், பிளம்பர் வேலைகள் பார்க்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த வேலைகளைச் செய்வதற்கான பொருள்கள் வாங்குவதற்கு கடைகள் இல்லை. அதனால், அந்தக் கடைகளைத் திறப்பதற்கு அரசு அனுமதியளிக்க வேண்டும். கட்டுமானத் துறை இயங்க ஆரம்பித்தால்தான் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். அதனால் அரசு உடனடியாக இந்த வேலையைச் செய்ய முன்வர வேண்டும்

கட்டுமானம்
கட்டுமானம்

அதேபோல, வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்யும் தொழிலாளிகள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அவர்களை அரசு செலவில் அவர்களின் ஊர்களுக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும், அதேபோல, பிற மாநிலங்களில் தவிக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளையும், லாரி ஓட்டுநர்களையும் உடனடியாக தமிழகத்துக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய முன்வர வேண்டும்

அதுமட்டுமல்ல, தமிழகத்தில் சவரத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் என 17 வகையான அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் இருக்கின்றன. அதில் பதிவு செய்திருப்பவர்கள் கிட்டத்தட்ட 75 லட்சம் பேர் இருப்பார்கள். பதிவு செய்யாதவர்களாக 3 கோடி பேர் இருக்கிறார்கள். பதிவு செய்திருப்பவர்களுக்கு மட்டுமே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட உதவிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது சரியல்ல. அரசு இந்த முடிவை மாற்றிக்கொண்டு அவர்களுக்கும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்'' என்கிறார் அவர்.

`ஜூன், ஜூலை மாதத்தில் பாதிப்பு உச்சத்தைத் தொடும்..!’ -முதல்வர்கள் கூட்டத்தில் என்ன பேசினார் மோடி?

மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,

``கண்டிப்பாக ஊரடங்கு தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். காரணம், வெறும் ஐந்து சதவிகித மக்கள் மட்டுமே வெளியில் செல்லும்போதே சென்னையில் மட்டும் 500 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதேநேரம் தொழிற்சாலைகளை இயங்குவதற்கு முதல்வர் தொழில் அதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பகுதி நேரமாக இயங்குவதற்கான நடவடிக்கை எடுப்பார் என்றே தெரிகிறது.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

அதேபோல, காய்கறிக்கடை, மளிகைக்கடை போல மற்ற கடைகளையும் குறிப்பிட்ட நேர நிர்ணயம் செய்து திறக்கலாமா எனவும் ஆலோசனை செய்துவருகிறார். கொரோனா பாதிப்பு குறைவான உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை விலக்கலாம் எனவும் திட்டமிட்டு வருகிறார். அவசரப்பட்டு எந்தவித முடிவும் இந்த விஷயத்தில் எடுக்க முடியாது. அதனால், படிப்படியான நடவடிக்கைகளை முதல்வர் நிச்சயம் எடுப்பார். அதற்கான ஆலோசனைகளைத்தான் மேற்கொண்டு வருகிறார்'' என்கிறார் கோவை செல்வராஜ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு