Published:Updated:

`நிலாவில் தண்ணீரைக் கண்டுபிடித்தால்..!’ - இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ கோரிக்கை!

மலையரசு

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், சந்திரயான் 2 பயணத்துக்காக வித்தியாசமான கோரிக்கையுடன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளது.

சந்திராயன் 2
சந்திராயன் 2

சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த உலகின் கண்களும் இந்தியாவின் மேல் திரும்பியுள்ளது. இன்னும் 47 நாள்களில் இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென்பகுதியில் சந்திரயான்2 கால் பதிக்கவுள்ளது. 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சந்திரயான் 2 தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

சந்திராயன் 2
சந்திராயன் 2

சந்திரயானின் வெற்றிக்கு பல்வேறு நாடுகளும், பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துகள் தெரிவித்தவண்ணம் உள்ளனர். நாசாவும் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், சந்திரயான் 2 பயணத்துக்காக வித்தியாசமான கோரிக்கையுடன் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளது. ட்விட்டர் பக்கத்தில், ``நிலவை நோக்கிய சந்திரயான் 2 பயணத்தை வெற்றிகரமானதாக மாற்றியுள்ள இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். எங்கள் நகரத்துக்கு புதிய நீர் வளங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

நிலாவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தால், யாருக்கு முதலில் போன் செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்" என காமெடியாகப் பதிவிட்டுள்ளது. சமீபகாலமாக, சென்னையில் வறட்சி நிலவிவருகிறது. இதனால், தண்ணீரின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து மெட்ரோ குடிநீர் வாரியம் தீர்த்துவருகிறது. இன்று, இரண்டாவது முறை ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம்
சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம்

இதனை எல்லாம் மையப்படுத்திதான் இப்படி ஒரு ட்வீட்டை மெட்ரோ பதிவுசெய்துள்ளது. இதற்கு எதிர்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. இருக்கும் நீர்நிலைகளை ஒழுங்காகப் பாதுகாத்து பராமரித்திருந்தால் சென்னைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று கமென்ட் அடித்துவருகின்றனர். அதே வேளையில், சென்னை மெட்ரோவின் நகைச்சுவைப் பதிவையும் சிலர் பாராட்டிவருகின்றனர்.