Published:Updated:

`செக்யூரிட்டிகள், சி.சி.டி.வி கேமரா எல்லாம் எதற்கு?’ -நள்ளிரவில் அடைக்கப்பட்ட ஐ.ஐ.டி நுழைவுவாயில்

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கேட்டினை மூடப்பட்டது மாணவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டி மாணவர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் மாணவ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை ஐ.ஐ.டி-யில் படித்து வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டன்தால் பங்கேற்றார்.

விசா விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக எழுந்த புகாரையடுத்து ஜேக்கப் லிண்டன்தால் இந்தியாவில் தங்கி படிப்பதற்கான அனுமதியைக் குடியுரிமைத் துறை ரத்து செய்துவிட்டது.

இதையடுத்து, ஜெர்மன் மாணவரை ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டது நிர்வாகம். மாணவர் ஜேக்கப் ஜெர்மன் திரும்பிவிட்டார். இந்த விவகாரம் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில் சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் கேட்டினை நேற்று இரவு நிர்வாகம் அடைத்துவிட்டது.

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள கிருஷ்ணா மாணவர் விடுதி-க்கு அருகில் உள்ள கேட்டினை அடைக்கும் பணியில் ஊழியர்கள் நேற்றிரவு ஈடுபட்டனர். எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் இந்தக் கேட்டினை அடைக்கும் பணி நடந்ததால் மாணவர்கள் அங்கு கூடிவிட்டனர். கிருஷ்ணா கேட் பகுதி ஐஐடியில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும் மிகவும் அருகில் உள்ளது. மாணவர்கள் வெளியில் சென்று வருவதற்கு மிகவும் உதவியாக இருந்துள்ளது.

அவசரத் தேவைகளுக்கு வெளியில் செல்ல வேண்டுமென்றால் இந்தப் பகுதி வழியாக எளிதில் சென்றுவரலாம். இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி ஐ.ஐ.டி நிர்வாகம் கேட்டினை அடைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. இது மாணவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சிலரிடம் பேசினோம், ``இந்த வளாகத்தில் இருக்கும் கிருஷ்ணா கேட்தான் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். இந்தப்பகுதியில் தான் நிறைய கடைகள் உள்ளன. ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்றாலும் எதாவது சாப்பிட வேண்டும் என்றாலும் இந்த கேட் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற பகுதிகளில் உள்ள நுழைவு வாயில்கள் எல்லாம் தூரமாக இருக்கும். நேற்று இரவு செங்கல், பலகைகள் உள்ளிட்ட பொருள்களுடன் சிலர் வந்திருந்தனர்.

அடைக்கப்பட்ட நுழைவு வாயில்
அடைக்கப்பட்ட நுழைவு வாயில்

கேட்டை அடைக்கும் தகவலைக் கேள்விப்பட்டதும், மாணவர்கள் சிலர் அங்கு விரைந்தனர். இதனால், பணிகளைப் பாதியில் நிறுத்திவிட்டு பொருள்களை எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு ஊழியர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். தொடர்ந்து, இன்று காலை மீண்டும் வந்து கேட்டினை அடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். கேட் அடைப்பது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் நிர்வாகம் தரப்பிலிருந்து தெரியப்படுத்தவில்லை. நள்ளிரவில் வந்து கேட்டினை அடைக்க வேண்டிய அவசியம் என்ன?

`CAA-வுக்கு எதிராக சென்னை ஐஐடி-யின் ஜெர்மன் மாணவர்!’- நாட்டைவிட்டு வெளியேறச் சொன்ன அதிகாரிகள்

பாதுகாப்பு காரணமாக கிருஷ்ணா கேட் பகுதி அடைக்கப்படுவதாக மாணவ பிரதிநிதிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சி மாணவர்கள் இந்த கேட் அமைந்துள்ள பகுதிக்கு அருகில்தான் வாடகைக்கு ரூம் எடுத்துத் தங்கியுள்ளனர். இந்த வழியாகச் சென்றால் டிபார்மென்ட்களுக்கு எளிதில் சென்று வரலாம். இன்னும் சில நாள்களில் செமஸ்டர் தேர்வு வரவுள்ளது. இந்த நிலையில் கேட்டினை அடைத்துள்ளனர்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

இந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு செக்யூரிட்டிகள் இருக்கிறார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐ.ஐ.டி வளாகத்துக்கு வெளியே 24 மணி நேரமும் போலீஸ் ரோந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறி மூட வேண்டிய அவசியம் என்ன.

இன்று விடுமுறை தினம் என்பதால் ஐஐடி நிர்வாகத்தில் உள்ளவர்களைச் சந்திக்க முடியவில்லை. இந்த கேட் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளதா.. இல்லை நிரந்தரமாக மூட உள்ளனரா எனவும் தெரியவில்லை” என்கின்றனர் வேதனையுடன்.

கிருஷ்ணா கேட் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில், `பாதுகாப்பு காரணமாக கேட் மூடப்படுவதாகவும் வேளச்சேரி, தரமணி பகுதியில் உள்ள கேட்டினைப் பயன்படுத்துங்கள். சிரமத்துக்கு வருந்துகிறோம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.