Published:Updated:

`ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ..!' - மனைவியின் இறுதி அஞ்சலியில் கதறிய சென்னை ஐஐடி பேராசிரியர்

எஸ்.மகேஷ்

சென்னை கொட்டிவாக்கத்தில் பூட்டிய வீட்டுக்குள்ளேயே படுத்த படுக்கையாக இருந்த மனைவியோடு வாழ்ந்த சென்னை பேராசிரியர் ராஜகோபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

kalyani
kalyani

சென்னை கொட்டிவாக்கம் சாமிநாதன்நகர், 4 வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜகோபால் (75). சென்னை ஐஐடியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி கல்யாணி (68). இவர் உடல் நலம் சரியில்லாமல் வீட்டிலேயே படுத்தபடுக்கையானார். கவனிக்க யாரும் இல்லாததால் கல்யாணியின் உடல் அழுகியது. இதுகுறித்து கேள்விப்பட்டதும் உறவுகள் அறக்கட்டளையின் நிறுவனர் காலித் அகமது மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் கல்யாணியின் சடலத்தை மீட்டனர். அவரின் சடலம் நேற்றிரவு பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

`இருட்டில் ஒரு விளக்கு; திறந்தால் துர்நாற்றம்!' - சென்னை ஐஐடி பேராசிரியரின் 11 ஆண்டு  துயரக்கதை
rajagopal house
rajagopal house

கவனிக்க யாரும் இல்லாததால் முதுமையான ராஜகோபால், கல்யாணி தம்பதியினர் சொல்ல முடியாத வேதனைக்குரிய வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். ராஜகோபால், கல்யாணி ஆகியோரின் பின்னணி தகவல்கள் கண்ணீரை வரவழைக்கின்றன. ராஜகோபால் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று விசாரித்தோம்.

சென்னையைச் சேர்ந்த ராஜகோபால், கல்யாணி, அவரின் மகள் ஆகியோர் சந்தோஷமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளனர். மகளின் திடீர் மரணம் ராஜகோபாலையும் கல்யாணியையும் அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. மகளின் நினைவுகள் இருவரையும் வாட்டியுள்ளது. இந்தச் சமயத்தில் ராஜகோபாலின் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்கள் அவரை தனிமைப்படுத்தியது. கையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தும் அவருக்கு மனநிம்மதியில்லை.

rajagopal house
rajagopal house

மனைவி மட்டுமே வாழ்க்கை என ராஜகோபால் வாழ்ந்துள்ளார். உறவினர்கள், ஏன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என யாரிடமும் பேசுவதைத் தவிர்த்துள்ளார் ராஜகோபால். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவருக்கு முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது. ராஜகோபாலைக் கவனித்து வந்த கல்யாணியும் ஓராண்டுக்கு முன் படுத்தபடுக்கையாகிவிட்டார். தன்னால் முடிந்தவரை கல்யாணியை ராஜகோபால் கவனித்து வந்துள்ளார். கல்யாணியின் இறுதிக்காலத்தில் அவரை குழந்தையாகவே பார்த்துள்ளார்.

கல்யாணி இறப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு வரை அவருக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். வீட்டை பூட்டிவிட்டு வெளியில் செல்லும் ராஜகோபால், ஹோட்டலில் இருந்து உணவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார். சாப்பிட்டும் சாப்பிடாமல் வாழ்நாளைக் கடத்திவந்துள்ளார். மனைவியின் அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தபடி கல்யாணியைப் பார்ப்பது மட்டுமே ராஜகோபாலுக்குப் பிடித்த விஷயம்.

kalyani
kalyani

மனைவி உயிரோடு இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள அவரின் கால்களை அழுத்திப் பிடிப்பார். அப்போது கல்யாணியின் உடல் மட்டும் லேசாக அசையும். அதன் பிறகு அவரின் வாயில் வாங்கி வந்த ஜூஸைக் கொடுத்துள்ளார் ராஜகோபால். இந்தச் சமயத்தில் நேற்றுமுன்தினம் கல்யாணியின் கால்களை ராஜகோபால் பிடித்து அழுத்தியும் எந்தவித அசைவும் இல்லை. இதனால்தான் பக்கத்து வீட்டினரின் உதவியை அவர் நாடியுள்ளார். அதன்பிறகுதான் கல்யாணி இறந்த தகவல் வெளியில் தெரியவந்துள்ளது.

மனைவி இறந்த துக்கத்தை ராஜகோபாலால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராயப்பேட்டை பிணவறை முன் கண்ணீர் மல்க அவர் காத்திருந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு கல்யாணியின் சடலம் ராஜகோபாலிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவர் மனைவியின் முகத்தைப் பார்த்தபடி அமைதியாக இருந்துள்ளார். இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ராஜகோபால், கல்யாணி ஆகியோரின் உறவினர்கள் வந்தனர். அவர்கள் ராஜகோபாலுக்கு ஆறுதல் கூறினர்.

rajagopal home
rajagopal home

இரவில் கல்யாணியின் சடலம் தகனம் செய்ய பெசன்ட் நகர் மயானத்தில் ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, கல்யாணியின் முகத்தைப் பார்த்த ராஜகோபால், `ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...' என்ற பாடலைப் பாடினார். `கல்யாணி, ஒரு குழந்தை. அவளை இதுவரை பார்த்துக்கொண்டேன்' என்று கண்ணீர்மல்க ராஜகோபால் கூறியுள்ளார். அதைக் கேட்டவர்களின் கண்களிலும் கண்ணீர்த் துளிகள். ராஜகோபாலின் உறவினர்கள், `எப்போதாவது இமெயிலில் தகவல்களை அனுப்புவார். ஆனால், அதற்குப் பதில் அனுப்பினால் அடுத்த மெயில் வராது. ராஜகோபாலின் மகள் இறந்த தகவல்கூட எங்களில் பலருக்குத் தெரியாது' என்று கூறினர்.

ராஜகோபாலின் வீட்டுக்குள் சென்றவர்கள் நம்மிடம் சில தகவல்களைத் தெரிவித்தனர். ராஜகோபால் வசித்த வீடு, சுத்தம் செய்யாமல் தூசிகள் படிந்து குப்பைக் காடாகக் காட்சியளித்தது. கிச்சன் முழுவதும் கறுப்பாக இருந்தது. கல்யாணியைச் சுற்றி சேலைகள் குவிந்து கிடந்தன. மேலும் அந்த அறையின் தூர்நாற்றம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வீசாமலிருக்க பினாயிலைக் கொட்டி வைத்துள்ளார் ராஜகோபால். இதனால் ஒரு அறையில் காலி பினாயில் பாட்டிகள் கிடந்தன. அந்த வீட்டை உறவுகள் அறக்கட்டளையினர் சுத்தம் செய்ய முயற்சிகள் எடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கும் ராஜகோபால் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

rajagopal home
rajagopal home

ராஜகோபால் குறித்து மனநல ஆலோசகர் ஹேமமாலினி லட்சுமி நரசிம்மனிடம் பேசினோம். ``சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்த ராஜகோபாலின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களே இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் ஓய்வு பெற்ற பிறகு, மனிதர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்படும். ராஜகோபால், பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ராஜகோபால் ஓய்வு பெற்ற பிறகு, வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்திருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும். மகள் மரணம், மனைவிக்கு உடல் நலம் பாதிப்பு போன்ற சூழலோடு தனிமையும் அவரை பெரியளவில் பாதித்திருக்க வாய்ப்புள்ளது.

சமூகத்தோடு தொடர்பு இல்லாததால்தான் ராஜகோபாலின் மனதில் ஒருவித பயம் ஏற்பட்டு யாரையும் நம்பாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. முதுமையில் மனிதர்கள் பச்சிளம் குழந்தைகளாக மாறிவிடுவர். அவர்களின் தேவைகளைக்கூட மற்றவர்கள்தான் பூர்த்தி செய்ய வேண்டும். கல்யாணி படுத்தபடுக்கையாக இருந்த சமயத்தில் முதுமை காரணமாக ராஜகோபாலால் அவரை சரியாகக் கவனிக்க முடியாமல் இருந்திருக்கலாம். மகள் மரணத்துக்குப் பிறகு, மனைவியுடன் அவர் பேசிக்கொண்டிருந்திருப்பார். தற்போது மனைவி மரணத்துக்குப் பிறகு இந்தப் பாதிப்பு அதிகரிக்கும். இதனால், அவருக்கு அரவணைப்போடுகூடிய ஆறுதல் தேவை'' என்றார்.

Psychologist  Hemamalini Lakshminarasimhan
Psychologist Hemamalini Lakshminarasimhan

இறுதி அஞ்சலி முடிந்ததும் உறவினர்கள் ராஜகோபாலைத் தங்களின் வீடுகளுக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜகோபால், மனைவியோடு வாழ்ந்த வீட்டுக்கு வந்தார். வீட்டை பூட்டிக்கொண்டு மீண்டும் அதே நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஆனால், அவரின் அருகில் கல்யாணி இல்லை.