Published:Updated:

நீலகிரி: பொக்லைன் இயந்திரத்துக்குப் போர்வை; மலையைக் குடையும் காட்டேஜ் நிர்வாகம்! - பின்னணி என்ன?

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்
News
போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

குன்னூர் தாலுகா, அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நெடிகாடு பகுதியில் கட்டப்பட்டுவரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்கு சாலை அமைப்பதற்காக மினி பொக்லைன் இயந்திரத்தை பிளாஸ்டிக் போர்வைகொண்டு மூடி மறைத்து, மலையைக் குடைந்து சாலை அமைத்துவருகின்றனர்.

நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி பல்லுயிர்ப் பெருக்க மண்டலம், தென்னிந்தியாவின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இருந்துவருகிறது. அரியவகை விலங்குகள், பறவைகள் தாவரங்கள் போன்றவற்றின் கடைசிப் புகலிடமாக விளங்கிவரக்கூடிய இந்த மலைத்தொடர்களில் அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கம், வளர்ச்சிப் பணிகள், காடழிப்பு, பெருகிவரும் கட்டுமானங்கள் போன்ற பல காரணிகளால் சூழலியலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்
போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

அதிலும் குறிப்பாக நீலகிரி மலையில் கட்டுப்பாடுகள் இன்றி இரவு பகலாக மலைகளைக் குடைந்து வந்த ஜே.சி.பி மற்றும் பொக்லைன் இயந்திரங்களால் நில அமைப்பியலில் மாற்றம் செய்யப்பட்டு பெரிய அளவிலான நிலச்சரிவு, மண் அரிப்பு அபாயம் ஆகியவை ஏற்பட்டுவந்தன. இதைக் கருத்தில்கொண்டே நீலகிரியின் முன்னாள் ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா, ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரங்களை இயக்கத் தடைவிதித்தார். அனுமதி வழங்கும் முறைகளையும் கடுமையாக்கினார். இருப்பினும் சொகுசு விடுதிகளுக்காக மலைகளில் தனியார் சாலைகள் அமைக்க சட்டவிரோதமாகப் பல இடங்களில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் இயக்கப்பட்டுவந்தன. மேலும், மினி பொக்லைன் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றைக்கொண்டு மலைகளைக் குடைந்துவருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்துக்கு உட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி நெடிகாடு பகுதியில் கட்டப்பட்டுவரும் தனியார் தங்கும் விடுதி ஒன்றுக்குச் சாலை அமைப்பதற்காக மினி பொக்லைன் இயந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், உள்ளூர் மக்களின் பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது பிளாஸ்டிக் தார்பாலினைக்கொண்டு போர்வையைப்போல போர்த்தி மறைத்து, இயக்கிவந்தனர். இந்தச் செயல் சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கொதிப்படையச் செய்திருக்கிறது.

போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்
போர்வை போர்த்தி இயக்கப்படும் பொக்லைன்

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஊட்டி ஜனார்த்தனன், "நீலகிரியின் இயற்கையைப் பாதுகாக்க அரசு பல தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்தாலும், அவற்றை மீறுவதற்கும் பேராசைகொண்ட சில அரசு அதிகாரிகளே தனியாருக்குச் சாதகமாக இருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகளிடம் பணம் கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம்தான் இந்தச் செயல்‌. தனியாருக்கு ஆதரவாகச் செயல்பட்டு இயற்கையை சீரழிக்கும் செயலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள்மீது நடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டும்" என்றார் கொதிப்புடன்.

இந்த விவகாரம் குறித்து நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினியிடம் பேசினோம். "ஒருசில இடங்களில் மினி பொக்லைன் இயந்திரத்தை இயக்க அனுமதி கொடுத்திருக்கிறோம். குறிப்பிட்ட அந்தப் பகுதிக்கு அனுமதி இருக்கிறதா என ஆய்வு செய்துவருகிறோம். விதிமீறல் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.