நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்தை ஒட்டியுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் சட்டவிரோதமாக, தற்காலிக தங்கும் குடில்கள் அமைத்து பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலாப்பயணிகளைத் தங்கவைக்கும் விபரீதச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இது குறித்து நமது ஜூனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். பணத்துக்காக ஆபத்தை உணராமலும், எந்த அனுமதியும் இல்லாமலும் சிலர் சுற்றுலாப்பயணிகளை இது போன்ற சட்டவிரோதக் குடில்களில் தங்கவைப்பதையும், வனத்துக்குள் நடைப்பயணம் அழைத்துச் செல்வதையும் தடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர் புகார்கள் குவிந்தன. அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கோத்தகிரி ஆடுபெட்டு, ஜக்கனாரை, கேத்ரின் அருவி ஆகிய இடங்களில் உரிய அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறித் தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து உடனடியாக அகற்றினர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சட்டவிரோத தங்கும் குடில்கள் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், "கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த அனுமதியும் பெறாமல் அமைக்கப்பட்டிருந்த சுற்றுலாப்பயணிகளுக்கான 14 தங்கும் குடில்கள் மற்றும் கழிவறைகளை அகற்றியிருக்கிறோம். இது போன்ற விதிமீறல்களைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம்.

அதேபோல் சுற்றுலாப்பயணிகளை ஆபத்தான காட்டுக்குள் அழைத்துச் செல்லும் நபர்கள் மீதும் வனத்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலாப்பயணிகளும் இது போன்ற இடங்களில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.