வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்துள்ள அத்தியூர் ஊராட்சியிலிருக்கின்ற குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை, பள்ளகொல்லை ஆகிய மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் மலையிலுள்ள செல்லியம்மன் மற்றும் தஞ்சியம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். திருவிழாவை நடத்துவதற்கு முன்பு சில வினோதமான சடங்குகளையும் அவர்கள் செய்கிறார்கள். அதன்படி, ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவை நடத்தி முடித்த பின்பு, அடுத்த ஓராண்டுக்குள் மலை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உள்ளூரிலோ, வெளியூரிலோ இறந்துபோயிருந்தால், அடுத்த திருவிழாவை நடத்துவதற்கு முன்பு இறந்தவர்களின் ஆவியை அவரவர் வீட்டுக்கு அழைத்துவரும் சடங்குகளை ஊர்கூடி நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சடங்குகளை முடித்த பின்புதான் திருவிழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமாம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவை நடத்துவதற்கான முடிவுகளை எடுப்பதற்காக கடந்த 21-ம் தேதி கோயில் அருகே திரண்டு பொங்கல் வைத்து மலை கிராம மக்கள் வழிபட்டனர். தொடர்ந்து, அன்றிரவே குறிகேட்டு மறுநாள் மாலை பெண்கள் கும்மியடித்தும், சாமி வந்து ஆடியபடியும் இறந்தவர்களின் ஆவியை கூவிக் கூவி வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வினோத நிகழ்ச்சியை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிகழ்ச்சியின்போது, கடந்த ஆண்டில் இறந்தவர்கள் ஆவிகளாக அவர்களுடன் வருவதாகவும் நம்புகிறார்கள். மேள தாளங்களுடன் கரகம் எடுத்து, சீர்வரிசைப் பொருள்களுடன் ஊர்வலமாக இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களுடன் ஆவிகளும் வருவதாக நம்பும் குடும்பத்தினர், ஆனந்தக் கண்ணீருடன் வீட்டுக்குள் அவர்களை வரவேற்றனர். இதையடுத்து, மலையிலேயே ஆடுகள், கோழிகளை பலியிட்டு சிறப்பு விருந்து வைத்தனர்.

தொடர்ந்து, மீண்டும் குறிகேட்டு விழா எடுப்பதற்கான நாள் குறிக்கப்படவிருக்கிறது. இதில், அத்தியூர் ஊராட்சி மன்றத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மலை வாழ் மக்கள் நடத்திய இந்த வினோத நிகழ்வு குறித்து, அத்தியூர் ஊராட்சி மன்றத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, ‘‘எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்து இந்த வழக்கத்தைப் பின்பற்றிவருகிறோம். கடந்த ஆண்டு திருவிழாவை நடத்தி முடித்த பின்பு மலைக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்திருக்கிறார்கள். வீட்டிலேயே இறந்துவிட்டால் கணக்கில்லை. மலைநாட்டுக்கு கீழே இறப்பவர்களுக்காகத்தான் இந்த சடங்குகளை செய்கிறோம். இறந்தவர்களின் ஆவிகளை வீட்டுக்கு அழைத்து செல்வதால், ஊரும் அவர்களின் வீடும் நல்லாயிருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை’’ என்றார்.