Published:Updated:

ஊரடங்கில் சுற்றித் திரிந்தவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றும் தாசில்தார்! - பதறும் அருப்புக்கோட்டை மக்கள்

ஆம்புலன்ஸில் ஏறச் சொல்லும்  தாசில்தார் ரவிச்சந்திரன்
ஆம்புலன்ஸில் ஏறச் சொல்லும் தாசில்தார் ரவிச்சந்திரன்

அருப்புக்கோட்டையில் ஊரடங்கை மீறி சாலைகளில் வெளியே சுற்றித் திரிந்தவர்களை, மாஸ்க் அணியாமல் சென்றவர்களை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். இதனால், ஆம்புலன்ஸைக் கண்டாலே பதறியடித்து ஓடுகின்றனர் ஊர் மக்கள்.

தற்போதைய தளர்வுகளில்லா முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகள், சேவைகளுக்காகச் செல்பவர்கள் தவிர மற்றவர்கள் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கை மீறி வருவோரை போலீஸார், வருவாய்த்துறையினர் எச்சரித்தும், அபராதம் விதித்தும், சில நேரங்களில் வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.

வலுக்கட்டாயமாக ஏற்றப்படும் மக்கள்
வலுக்கட்டாயமாக ஏற்றப்படும் மக்கள்

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஊரடங்கினை மீறி சாலைகளில் பைக்குகளில் செல்வோரை நிறுத்தி அவர்களிடம் காரணம் கேட்கிறார் அருப்புக்கோட்டை தாலுகா தாசில்தார் ரவிச்சந்திரன். அதில், அவசியமில்லாமல் சுற்றித் திரிந்தவர்கள், மாஸ்க் அணியாமல் சென்றவர்களை வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வருகிறார். இதனால், ஆம்புலன்ஸைக் கண்டாலே மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டவர்கள் சிலரிடம் பேசினோம், “அத்தியாவசியத் தேவையான ஆவின் பால் கடை, மெடிக்கல் ஸ்டோருக்குப் போகலாம்னு அரசே சொல்லியிருக்கு. ஆனா, தாசில்தார் ரவிச்சந்திரன் ரோடுல போற வர்றவங்களை நிப்பாட்டி காரணமே கேட்காம ஓரமா நிற்கச் சொல்றார். பத்து பேரு வரைக்கும் ஆட்கள் சேர்ந்ததும், ஓரமா நிப்பாட்டியிருக்குற ஆம்புலன்ஸை வரச் சொல்லி வலுக்கட்டாயமா ஆம்புலன்ஸுக்குள்ள ஏத்துறாரு. இதுல, மாஸ்க் போடாதவங்களும் ஏத்தப்படுறாங்க. வயசானவங்களும் ஏத்தப்படுறாங்க. சமூக இடைவெளின்னு சொல்றாங்க. ஒத்த ஆம்புலன்ஸுக்குள்ள பத்து பேர் வரை அடைச்சா என்ன ஆகும்? இதனால கொரோனா பரவாதா? அந்த ஆம்புலன்ஸ் தனியார் டிரஸ்ட்டைச் சேர்ந்தது.

புலம்பும் மக்கள்
புலம்பும் மக்கள்

ஆபத்துக் காலத்துல மருத்துவ சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு சீக்கிரமாப் போகணும்னுதான் அந்த ஆம்புலன்ஸை இந்தக் கொரோனா காலகட்டத்துலயும் இலவச சேவைக்காக கொடுக்கப்பட்டிருக்கு. இந்த சூழ்நிலையில ரோடுல போறவங்களை ஆம்புலன்ஸுல ஏத்தி ரவுண்டு அடிப்பதற்காக பயன்படுத்தினா எப்படி? ஆம்புலன்ஸைப் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் ஏற்படுது இயல்பு. ஆம்புலன்ஸிற்குள் ஏற்றப்பட்டதால் எங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு” என்றனர்.

அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் பேசினோம், “முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும், கொரோனா தொற்றின் பாதிப்பை உணராமல் அநாவசியமாக மக்கள் வெளியில் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பலமுறை எச்சரிக்கை செய்தும் கேட்டபாடில்லை. மக்களிடம் ஒரு பயத்தை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கபப்ட்டவர்களின் பாதிப்புகளை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார்கள்” என்று மட்டும் சொன்னார். இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், மக்கள் மேம்பாட்டுக் கழகத்தின் அமைப்பாளருமான அதிசயகுமாரிடம் பேசினோம், ”கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் அரசு முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தாசில்தார் ரவிச்சந்திரன்
தாசில்தார் ரவிச்சந்திரன்

அதை மீறி, அவசியமில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை எச்சரித்து அவர்களிடமிருந்து அபராதம் விதிக்கலாம். தேவைப்பட்டால் வாகனத்தைப் பறிமுதல் செய்யலாம். வழக்குகூடப் பதிவு செய்யலாம். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அதை செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு அரசு அதிகாரியே அத்தொற்று ஏற்பட வழிவகுக்கும் வகையில் ஆம்புலன்ஸில் ஏற்றுவது என்பது தவறானது. பெரும் தொற்று நோய்ப் பரவல் சட்டத்தின் மீது அரசு அவர் மீது நடவடிக்கையே எடுக்கலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு