Published:Updated:

பள்ளி மாணவர் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி; தவறுதலாகச் செலுத்திய வங்கி நிர்வாகம்!

பீகாரில் இரண்டு மாணவர்களின் வங்கிக் கணக்கில் வங்கி நிர்வாகம் தவறுதலாக ரூ.900 கோடியை செலுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பீகாரில், மாநில அரசு மாணவர்களுக்குத் தேவையான பேக், புத்தகங்கள், சீருடைகள் வாங்க சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவருகிறது. பீகார் மாநிலத்திலுள்ள கத்திகார் மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு மாணவர்கள், தங்களது வங்கிக் கணக்குக்கு அரசு செலுத்திய பணம் வந்திருக்கிறதா என்பதைப் பார்க்க தங்களது பெற்றோருடன் அங்குள்ள இன்டர்நெட் சென்டருக்குச் சென்றனர். அவர்கள் வங்கிக் கணக்கைப் பார்த்தபோது இரண்டு பேருக்கும் மயக்கமே வந்துவிட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் ஆசிஸ் என்ற மாணவனின் வங்கிக் கணக்கில் 6.2 கோடியும், குருசரன் என்ற மற்றொரு மாணவனின் வங்கிக் கணக்கில் 900 கோடியும் வரவு வைக்கப்பட்டிருந்தது.

`சித்தார்த்தா வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2,000 கோடி எங்கே?!' -பீதியைக் கிளப்பும் விசாரணை அறிக்கை
வங்கியில் குவிந்த மக்கள்
வங்கியில் குவிந்த மக்கள்

பீகார் கிராமின் வங்கி இந்தப் பணத்தை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தது. உடனே இது குறித்த செய்தி கிராமம் முழுக்கப் பரவியது. கிராம மக்கள் அனைவரும் தங்களது வங்கி பாஸ்புக்கை எடுத்துக்கொண்டு தங்களது வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டிருக்கிறதா என்று பார்க்க படையெடுத்தனர். ஒரே நேரத்தில் அதிகமானோர் வங்கிக்கு வந்து தங்களது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டபோதுதான் வங்கி அதிகாரிகளுக்கு விஷயம் தெரியவந்தது. உடனே மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு 900 கோடி செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் மனோஜ் குப்தா கூறுகையில்,``செய்தி கேள்விப்பட்டு காலையிலேயே வங்கியைத் திறந்து சரிபார்த்துக்கொண்டிருக்கிறோம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கிறது. தவறுதலாகப் பணம் சென்ற வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கவிடாமல் செய்துகொண்டிருக்கிறோம் என்றார். மாவட்ட நீதிபதி உதயன் மிஸ்ரா இது குறித்துக் கூறுகையில், ``மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இருப்பதுபோல் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. வங்கியிடமிருந்து இந்தத் தவறு குறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன்" என்றார். இரண்டு நாள்களுக்கு முன்பு இதே வங்கிதான் பீகாரைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.5.5 லட்சத்தைச் செலுத்தியது. அந்தப் பணத்தை சம்பந்தப்பட்ட நபர் எடுத்துச் செலவு செய்துவிட்டார். வங்கி அதிகாரிகள் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டதற்கு, பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொல்லியிருக்கிறார். அதில் முதல் தவணையை எனக்கு அனுப்பியிருக்கிறார். பணத்தைத் திருப்பித் தர முடியாது என்று தெரிவித்துவிட்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு