கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நேற்று நள்ளிரவு மாணவி ஒருவருக்கு மாணவர் ஒருவர் தாலி கட்டும் அதிர்ச்சி வீடியோ வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், சிதம்பரம் பேருந்து நிலையம் காந்தி சிலைக்கு அருகிலுள்ள சிறிய பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவி ஒருவர் சீருடையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் மாணவர் ஒருவரும் அமர்ந்திருக்கிறார். அவர்களை வீடியோ எடுக்கும் சிலர், ”கட்டுய்யா… கட்டுய்யா…” என்று சொல்ல, அந்த மாணவர் தனது பாக்கெட்டிலிருந்து மஞ்சள் கட்டப்பட்டிருந்த தாலிக்கயிற்றை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்டுகிறார். அப்போது அந்த மாணவரின் நண்பர்கள் அவர்கள் மீது பூக்களைத் தூவி ஆசீர்வதிக்கிறார்கள்.
இது விபரீதம் என்று உணராத அந்த மாணவி சிரிக்கிறார். இந்த வீடியோ குறித்து விசாரணை செய்ததில், அந்த மாணவி அரசுப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவருகிறார் என்பதும், அவருக்குத் தாலி கட்டிய அந்த மாணவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவருவதும் உறுதியாகியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சமபந்தப்பட்ட மாணவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. அந்த விசாரணையின்போது, தாங்கள் இருவரும் காதலிப்பதாக போலீஸாரிடம் தெரிவித்திருக்கின்றனர் அந்த மாணவர்கள். மேலும், அந்த மாணவியின் தோழிதான் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.