Published:Updated:

`100 வீடுகள் அடங்கிய 12,203 பகுதிகள்!’ - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா தடுப்புப் பணிகள்

சீனா - கொரோனா வைரஸ்
சீனா - கொரோனா வைரஸ் ( AP )

டெல்லி மாநாட்டுக்கு நேரடியாகச் சென்று வந்த 554 பேருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளைச் சுற்றியுள்ள 22 லட்சம் வீடுகளில் வசிக்கும் 36 லட்சம் மக்களிடம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். இதில் அறிகுறி உள்ள 410 பேர் கண்டறியப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் வரை சென்னையில் 149 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 22 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணா நகரில் 15 பேர், தண்டையார்பேட்டையில் 12 பேரும், தேனாம்பேட்டையில் 11 பேரும், பெருங்குடியில் 5 பேரும்,

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ்
விகடன்

திருவொற்றியூர், வளரசவாக்கம், அடையாறு மண்டலத்தில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும், மற்ற இடங்களைச் சேர்ந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் வசித்த இடத்திலிருந்த 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்குச் சோதனை செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதன்படி 15 மண்டலங்களில் இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்தும் 100 வீடுகள் அடங்கிய பகுதியாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 12,203 பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை ஆய்வுசெய்ய 10,566 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 22 லட்சத்து 87,852 வீடுகளில் உள்ள 37,11,531 பொதுமக்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் காய்ச்சல், இருமல், சளி உள்ள 701 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 291 பேர் குணம் அடைந்துள்ளனர். மீதம் உள்ள 410 பேர் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 59,918 பேர். அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 213 பேர். இதுவரை கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,677 பேர்” என்று தெரிவித்ததோடு, டெல்லி மாநாட்டுக்கு நேரடியாகச் சென்றுவந்த 554 பேருக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு