Published:Updated:

``நாங்கள் ஏன் இஸ்லாத்தைத் தழுவினோம்'' - கோவையில் மதம் மாறிய மக்கள் சொல்வது என்ன?

கோவை மாவட்டம் முழுவதும் 3,000 பட்டியலின மக்கள் இந்து மதத்தில் இருந்து, இஸ்லாம் மதத்துக்கு மாற முடிவு செய்து, முதல்கட்டமாக 430 பேர் மாறியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகினர். தொழிலதிபர் சிவசுப்பிரமணியம் என்பவர் தன் வீட்டைச் சுற்றி கட்டிய சுவரில் ஒரு பகுதிதான், பட்டியலினத்தைச் சேர்ந்த 17 பேரின் உயிரைப் பறித்தது.

மேட்டுப்பாளையம் விபத்து
மேட்டுப்பாளையம் விபத்து

`எங்களைத் தீண்டாமல் இருப்பதற்காக, சிவசுப்பிரமணியம் கட்டிய தீண்டாமைச் சுவர் இது' என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். முறையின்றி, அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இந்தச் சுவர் குறித்து ஏ.டி காலனி பட்டியலின மக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நாடு முழுவதும் பேரதிர்ச்சியைக் கிளப்பிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கோவை மாவட்டம் முழுவதும் 3,000 பட்டியலின மக்கள் இந்து மதத்திலிருந்து, இஸ்லாம் மதத்துக்கு மாற இருப்பதாக தமிழ்ப் புலிகள் கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையம் விபத்து
மேட்டுப்பாளையம் விபத்து

இந்நிலையில், தற்போது முதல்கட்டமாக 430 பேர் இந்து மதத்தில் இருந்து, இஸ்லாமுக்கு மாறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்ப் புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், ஏற்கெனவே இஸ்லாத்துக்கு மாறியவருமான இளவேனில், ``தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து புகாரளித்தாலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அரசாங்கம் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. அதனால்தான், அம்பேத்கர் சொன்னபடி, `இந்து மதத்திலிருந்து விடுதலை பெறுவது’ என்று முடிவெடுத்தோம்.

இளவேனில்
இளவேனில்

முதல்கட்டமாக சட்டபூர்வமாக 430 பேர் இஸ்லாத்துக்கு மாறியுள்ளனர். எங்களது அறிவிப்புக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இஸ்லாத்துக்கு மாறி வருகின்றனர். இனி அவர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியும். சாதிய இழிவுகள் இல்லாமல், விடுதலை பெற்ற மக்களாக புதுவாழ்க்கையை வாழ்வார்கள்” என்றார்.

மார்க்ஸ் என்கிற முகமது அபுபக்கர், ``மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் விழுந்து 17 பேர் இறந்துபோனார்கள். ஆனால், போலீஸார் அந்தச் சுவரை கட்டிய சிவசுப்பிரமணியம் என்பவரை கைது செய்யாமல், அந்த மக்களுக்கு நீதி கேட்டுப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனைக் கைது செய்து சாதிய வன்முறை நடத்தினர். இதுவே ஆதிக்க சாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவரை காவல்துறை இப்படி நடத்துமா?

மார்க்ஸ் என்கிற அபுபக்கர்
மார்க்ஸ் என்கிற அபுபக்கர்

17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியம் விடுதலையாகி, பல நாள்கள் கழித்துத்தான் நாகை திருவள்ளுவன் விடுதலையானார். இந்து மதத்தில் இருந்தவரை, பல்வேறு தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்தோம். தற்போது இஸ்லாத்துக்கு மாறிய பிறகு, அனைத்து மக்களிடமும் சரிக்கு சமமாக ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிட முடிகிறது” என்றார்.

சரத்குமார் என்கிற அப்துல்லா, ``இந்து மதத்தைச் சேர்ந்த யாரும் எங்களைக் காப்பாற்றவில்லை. உயிரிழந்த 17 பேரும் இந்துக்கள் தான். அப்போது எந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள்? `இந்துக்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் நான் குரல் கொடுப்பேன்’ என்று சொன்ன அர்ஜூன் சம்பத், அப்போது எங்கே போனார். உயிரிழந்தபோது, எங்களுக்காகப் போராடியவர்கள் இஸ்லாம் நண்பர்கள்தான்.

அப்துல்லா
அப்துல்லா

இஸ்லாமில் எங்களை அனைவரும் தோழனாகப் பார்க்கிறார்கள். வீட்டுக்கு அழைக்கிறார்கள். கட்டித் தழுவுகிறார்கள். இந்து மதத்தில் எந்தக் கோயிலுக்கும் செல்ல முடியாது. ஆனால், இஸ்லாத்தில் அனைத்துப் பள்ளிவாசல்களுக்குள்ளும் போக முடிகிறது. பணக்காரன், ஏழை எல்லோரும் சரிசமமாக தொழுகை செய்கிறோம். இந்து மதத்தில் இது முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறியது தொடர்பாக பிரமாண பத்திரம் எழுதப்பட்டுள்ளது. அதில், மதமாற்ற உறுதிமொழி என்று பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

``நான் பிரமாணதாரர்.. நான் பிறப்பால் இந்து மதம் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன். எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்து மதக்கோட்பாடுகளையும் சட்ட திட்டங்களையும் கடைப்பிடித்து வருகிறோம். எனக்கு இந்து மதத்தின் மீது எந்த விதமான வெறுப்போ கிடையாது.

பிரமாண பத்திரம்
பிரமாண பத்திரம்

எனக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு, அதன் பால் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டேன். அதன் சட்ட திட்டங்களையும், இஸ்லாம் கோட்பாடுகளையும் நன்கு அறிந்துகொண்டும், புரிந்துகொண்டும் இஸ்லாம் மதத்தை தழுவ முடிவு செய்துள்ளேன். இது யாருடைய வழிகாட்டுதலாலும் ஏற்பட்டதல்ல.

நான் இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்ற முடிவு செய்து நானே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன். இறைவன் ஒருவனே என உறுதிகொண்டு, இறைவனின் கடைசி இறைத் தூதர் முகமது நபி என்பதை மனப்பூர்வமாக நம்பி ஏற்றுக்கொண்டு இஸ்லாத்தை தழுவிக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

பிரமாண பத்திரம்
பிரமாண பத்திரம்

அதனுடன் இந்து மதத்தில் இருந்தபோது அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, இஸ்லாத்தில் மாற்றிய பெயரையும் குறிப்பிட்டு இதன் மூலம் ஏற்படும் அனைத்து விதமான சட்டப் பிரச்னைகளையும் தாங்களே எதிர்கொள்வதாக உறுதியளித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு