Published:Updated:

கள்ளக்குறிச்சி: கலவரம் நடந்த தனியார் பள்ளி; 4 மாதங்களுக்குப் பிறகு நேரடி வகுப்புகள் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி
News
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி கணியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின.

கள்ளக்குறிச்சி: கலவரம் நடந்த தனியார் பள்ளி; 4 மாதங்களுக்குப் பிறகு நேரடி வகுப்புகள் தொடக்கம்!

கள்ளக்குறிச்சி கணியாமூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கின.

Published:Updated:
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி
News
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவருகிறது அந்தத் தனியார் உயர்நிலைப்பள்ளி. ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான அந்தப் பள்ளியில் சுமார் 3,500 மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். வேப்பூரை அடுத்திருக்கும் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், ஜூலை 13-ம் தேதி காலை 5:30 மணிக்கு மயங்கியநிலையில், மாணவியைக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பள்ளி நிர்வாகம், விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து அவர் குதித்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது.

4 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள்
4 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்கள்

அப்போது மாணவியைவ் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பேருந்துகள் எரிக்கப்பட்டு, பள்ளியும் அடித்து நொறுக்கப்பட்டது. அதையடுத்து அந்தப் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது. அதையடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டது. அத்துடன் பெற்றோர்கள் விரும்பினால் தங்கள் பிள்ளைகளை வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டதால், பெரும்பாலான மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிகளில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நேரடியாகக் கள ஆய்வு செய்து அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைத்தனர். அதையடுத்து பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டுவிட்டதாலும், அரசு அமைத்த குழுவும் ஆய்வை முடித்துவிட்டதாலும் பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது பள்ளி நிர்வாகம். நவம்பர் மாதம் நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளின்படி பள்ளியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

அப்போது 9 முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடி வகுப்புகளைத் தொடங்கலாம் என்று அனுமதியளித்த நீதிபதி, அப்போதைய நிலைமையைப் பொறுத்து மற்ற வகுப்புகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், ”பள்ளி செயல்படவிருப்பதால் காவல்துறை அங்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறைக்குப் பள்ளி நிர்வாகம் மனு கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கான செலவுகளை பள்ளி நிர்வாகம்தான் ஏற்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார். அதனால் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க சீருடையிலும், சாதாரண உடையிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.