Published:Updated:

குமரி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா! -தனிமைப்படுத்தப்படும் காவல் நிலையங்கள், கடைகள்

 கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இன்ஸ்பெக்டர் சென்றுவந்த கோட்டாறு காவல் நிலையம் மற்றும் மணவாளக்குறிச்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் சென்னை விமான நிலையத்தில் வேலை செய்தவர், டெல்லி சென்று வந்தவர்கள் என ஐந்துபேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்னர் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் 16 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றனர். அவர்கள் 16 பேரும் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் சென்னையிலிருந்து குமரி திரும்பியவர்களால் மீண்டும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்து வந்துள்ளது. இதைத் தொடர்ந்து சளி பரிசோதனை செய்துகொண்டார். டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என வந்ததைத் தொடர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தனிமை வார்டில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.

காவல் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது.
காவல் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இன்ஸ்பெக்டர் வசித்த வீட்டின் மேல் மாடியில் குடியிருந்தவர்களுக்கும் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்பெக்டர் சென்றுவந்த கோட்டாறு காவல் நிலையம் மற்றும் மணவாளக்குறிச்சி காவல் நிலையங்களில் உள்ள காவலர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவையும் நடத்தப்பட்டுள்ளன. இன்ஸ்பெக்டர் விசாரணைக்காகவும், பொருள்கள் வாங்கவும் சென்றுவந்த ஐந்து கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

`ஊரடங்கு காலத்தில் அதிகரித்த உடும்பு வேட்டை!' -குமரி வனத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த 6 பேர்

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என கண்டறியமுடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அந்த இன்ஸ்பெக்டர் ஆரல்வாய்மொழி செக்போஸ்ட் பகுதியில் ஒருவரை அழைத்துவரச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டர் தவிர மேலும் மூன்று பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து பேருந்து மூலம் கன்னியாகுமரி மாவட்டம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவருடன் பயணம் செய்த 35 பேரையும் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, பேருந்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே
குமரி கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 62 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 97 பேர் கொரோனா குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 705 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து குமரிக்கு வந்த 9,374 பேர் வீட்டுத் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு