Published:Updated:

'பாரத மாதா குறித்த சர்ச்சைப் பேச்சு' ; இந்து இயக்கங்கள் எதிர்ப்பு; வருத்தம் தெரிவித்த பாதிரியார்!

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, `தமிழகத்தில் தி.மு.க வெற்றிபெற்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரான சேகர் பாபு, தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களி்ல் சர்ச்சையை ஏற்படுத்தின.

அருமனையில் நடந்த போராட்டத்தில்...
அருமனையில் நடந்த போராட்டத்தில்...

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுகளை வாங்கி வெற்றிபெற்று விட்டு எம்.எல்.ஏ-க்கள் இந்து கோயில்கள்தோறும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்துக்கள் உங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனப் பேசியதுடன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஓட்டுக்கு இரண்டாயிரம் வீதம் கொடுத்து கிறிஸ்தவ நாடார் ஓட்டை வாங்கி வெற்றிபெற்றதாகவும் பேசியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் குறித்தும் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பாரத மாதா பற்றி அவர் கூறிய கருத்துகளும் பெரும் சர்ச்சைக்குள்ளாகின.

இந்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பரவிவருகிறது. மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மத மோதலைத் தூண்டும்விதமாகப் பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பா.ஜ.க மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் சுமார் 30 புகார்களை அளித்துள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல இடங்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளித்த பா.ஜ.க-வினர்
காவல் நிலையத்தில் புகார் அளித்த பா.ஜ.க-வினர்

இது குறித்து பனவிளை சர்ச் பங்குதந்தையும், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகருமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிடம் பேசினோம். ``அந்த வீடியோ எடிட் செய்து போடப்பட்டிருக்கிறது. யாருடைய மத உணர்வும் புண்படும்படி பேசவில்லை. அப்படிப் புண்பட்டிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறோம். இனி எதிர்காலத்தில் இப்படி இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு