தாங்கள் பயன்படுத்திவரும் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி நேற்று இரவிலிருந்து பட்டியலின மக்கள், சுடுகாட்டில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர். இன்று அவர்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில், அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட நெரூர் தென்பாகம் கிராமத்திலுள்ள வேடிச்சிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் வசித்துவருகிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் சுடுகாட்டுக்குரிய பாதையை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவரும் தனி நபர்களிடமிருந்து பாதையை மீட்டுத்தரக் கோரி நேற்று இரவு சுடுகாட்டில் குடியேறி போராட்டத்தை நடத்திவந்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 10:30 மணி அளவில் சம்பவ இடத்தில் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பொதுமக்கள் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி, அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டக்களத்தில் இருந்த வேடிச்சிபாளையம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து மகன் வேலுசாமி (வயது 43) என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி, போராட்டத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வேலுச்சாமியின் உடல் கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடர்ந்து, உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உடலை அனுப்பிவைத்தனர். இதனால், அங்கு எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நெரூர் தென்பாகம் கிராமத்திலுள்ள வேடிச்சிபாளையம் பகுதியில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அவர்களின் பேச்சுவார்த்தையில், `சுடுகாட்டுப் பாதை பிரச்னையை உடனே தீர்த்துவைப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தைத் தள்ளிவைத்துள்ளனர். சுடுகாட்டுப் பாதையை மீட்க வலியுறுத்தி போராட்டம் செய்த இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.