Published:Updated:

கரூர்:முதல் இறுதிப் பயணம்; மயானப் பாதைக்கான போராட்டத்தில் உயிரிழந்த பட்டியலினத்தவர்!-நடந்தது என்ன?

வேலுச்சாமி உடல் நல்லடக்கம்
வேலுச்சாமி உடல் நல்லடக்கம்

``எதற்காப் போராடினாரோ அந்தப் பிரச்னை முடிந்து, முதல் உடலாக அந்தப் பாதையில் பயணித்து, வேலுச்சாமி இறுதிப் பயணம் மேற்கொண்டது எங்க துக்கத்தை அதிகப்படுத்தியது. 'எங்களுக்கு சுதந்திரம் கிடைச்சுருக்கு'னு உள்ளுக்குள் நிம்மதியா இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கரூரில் சுதந்திர தினத்தில், தங்களது மயானத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு பலியானவர் சடலத்தை, போராடி வென்றெடுத்த பாதையில் அவரது உறவினர்கள் தூக்கிச் சென்று நல்லடக்கம் செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக, பட்டியலின மக்களுக்குரிய அந்தப் பாதையின் ஆக்கிரமிப்பை அகற்றி, மண்ணைக் கொண்டு சாலைபோடச் செய்ததோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு உதவிகளைச் செய்த, கரூர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மயானப் பாதை
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட மயானப் பாதை
கரூர்: சுடுகாட்டுப் பிரச்னை; விடிய விடிய போராட்டம்!- பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெரூர் தென்பாகம் கிராமத்திலுள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்கள் வசித்துவருகிறார்கள். தங்களுக்குச் சொந்தமான சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துவருவதாகவும், பாதையை மீட்டுத்தரக் கோரியும் கடந்த ஆகஸ்ட் 15 -ம் தேதி இரவு சுடுகாட்டில் குடியேறி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரண்டாவது நாளாக மறுநாளும் போராட்டத்தைத் தொடர்ந்த பட்டியலின மக்கள், பேச்சுவார்த்தை நடத்த வந்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட மயானப் பாதை
ஆக்கிரமிக்கப்பட்ட மயானப் பாதை

அப்போது, எதிர்பாராதவிதமாக சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த, அதே பகுதியைச் சேர்ந்த பெயின்ட்டர் வேலுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், `ஒரு உயிரையும் இழந்துட்டோம். பாதையை மீட்டுத்தரும் வரை இடத்தைவிட்டு நகர மாட்டோம்' என்று உறுதிகாட்டினர். இதனால், சம்பவ இடத்துக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுமக்களிடம் பேசிய ஆட்சியர், `நடைபெற்ற சம்பவத்துக்கும், மயான சாலை ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஆன தாமதத்துக்கும் பொதுமக்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். பாதையை இன்று இரவுக்குள் மீட்டுத் தருகிறேன். அதனால், இப்போது போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்று சொன்னார். அதற்கு பொதுமக்கள் அசைந்து கொடுத்தனர். அருகிலிருந்த அதிகாரிகளிடம் ஆட்சியர், பாதையை உடனடியாக அமைத்துக் கொடுக்க உத்தரவிட்டார். மறுபுறம், கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த வேலுச்சாமியின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

வேலுச்சாமியின் உடல்
வேலுச்சாமியின் உடல்

அங்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலுச்சாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, பல்வேறு பட்டியலின அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆறுதல் தெரிவிப்பதற்காகக் கூடினர். இதனால், அங்கே அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேநேரம், மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, சுடுகாட்டில் பாதை அமைக்கும் பணி ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு விரைவாக நடைபெற்றது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அதோடு, இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் கொண்டுவரப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுடுகாட்டுப் பாதையில் கொட்டப்பட்டு, சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்றது. அதேபோல், அன்று மாலை 4 மணி அளவில் வேலுச்சாமியின் பிரேத பரிசோதனை நிறைவடைந்து, போராட்டம் நடைபெற்ற வேடிச்சிபாளையம் மயானத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. மேலும், தொடர்ந்து பாதை அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில், வேலுச்சாமியின் உடலை அடக்கம் அடக்கம் செய்ய அதிகாரிகள் முயன்றபோது, பொதுமக்கள், `சாலையை முழுமையாக அமைத்த பிறகுதான், போராட்டத்தில் உயிர்நீத்த வேலுச்சாமியின் உடலை அடக்கம் செய்வோம்' என அதிகாரிகளிடம் கூறினர். வேலுச்சாமியின் உடலுக்குச் சடங்குகள், பல்வேறு தரப்பினரின் அஞ்சலி என சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

வேலுச்சாமி இறுதி ஊர்வலம்
வேலுச்சாமி இறுதி ஊர்வலம்

இதற்கிடையில், முழுமையாகச் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைய, உறவினர்கள், பொதுமக்கள் முன்னிலையில், வேலுச்சாமியின் உடல் இரவு 7 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சந்தியா, மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில், கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், வாங்கல் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் சுமார் 7 மணி வரை இருந்து, சுடுகாட்டுப் பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியதால், மயானப் பாதை துரிதகதியில் அமைக்கப்பட்டது. மயானப் பாதை அமைப்பதற்குத் தேவையான நிலத்தைச் சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அரசுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டதையடுத்து, அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

ஈரோடு: `பிளீச்சிங் பவுடர் ரூ.5 லட்சம்; சாக்கடை டு சுடுகாடு ஊழல்!’ - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் புகார்

இதற்கிடையில், போராட்டத்தின்போது உயிரிழந்த வேலுச்சாமியின் குடும்பத்துக்கு, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, ஈமச் சடங்கு நிதி ரூ.22,500 மற்றும் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் ஆகிய உதவிகளைச் செய்தார். அதோடு, வேலுச்சாமியின் மனைவி மணிமேகலைக்கு, ஆதரவற்றோர் விதவைச் சான்று மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.1,000 பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை வழங்கினார். மேலும், உயிரிழந்த வேலுச்சாமியின் மூத்த மகன் சந்தோஷ் (வயது 19) பத்தாம் வகுப்பு படித்திருக்கிறார். மற்றொரு மகன் சாரதி (வயது 13) எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். 'இருவருக்கும் கல்வி மேற்படிப்புக்கான உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும்' என மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார். இந்தநிலையில், ஆக்கிரமிப்பில் இருந்த மயானப் பாதை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மக்கள்,

 ஆட்சியர் உதவி
ஆட்சியர் உதவி

``மயானப் பாதை இல்லாம, நாங்க இறந்த உடல்களைக் கொண்டு போய் அடக்கம் பண்ண வழியில்லாம அல்லாடிக்கிட்டிருந்தோம். அதற்காகத்தான், 'செத்த பிறகும் எங்களுக்குச் சுடுகாட்டுக்குப் போக சுதந்திரம் இல்லை'னு சுதந்திர தினத்தில் போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தில்தான், வேலுச்சாமி தன்னோட உயிரைவிட்டார். எதற்காகப் போராடினாரோ அந்தப் பிரச்னை முடிந்து, முதல் உடலாக அந்தப் பாதையில் பயணித்து, வேலுச்சாமி இறுதிப் பயணம் மேற்கொண்டது எங்க துக்கத்தை அதிகப்படுத்தியது. இன்னொருபக்கம், 'எங்களுக்குச் சுதந்திரம் கிடைச்சுருக்கு'னு உள்ளுக்குள் நிம்மதியா இருந்தது. இந்தப் பிரச்னையை உடனே தீர்த்ததோடு, போராட்டக் களத்தில் இறந்த வேலுச்சாமியின் குடும்பத்துக்கு பல உதவிகளை ஆட்சியர் செய்தது, எங்களை உணர்ச்சியில் நெஞ்சம் விம்மவெச்சுடுச்சு" என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு