Published:Updated:

நித்யானந்தா ஆசிரமம்: "இங்கிருந்து என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்"-மகனிடம் கேட்ட தாய்;பின்னணி என்ன?

 வாக்குவாதம்
வாக்குவாதம்

நித்யானந்தாவின் பெண் சீடர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், நித்யானந்தாவின் சீடர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள அய்யம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமசாமி (62). விவசாயி. இவர், அதே பகுதியில் மளிகைக் கடை வைத்து நடத்திவருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52). இவர், நித்யானந்தாவின் மீதுள்ள பக்தியில், அவரின் தீவிர பக்தையாக மாறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால், அத்தாயி கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரிலுள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கேயே தங்கியிருக்கிறார். அவர் ஆசிரமத்துக்குச் செல்வதற்கு முன்பு அவரது பெயரில் இருந்த வீடு, கடையை அடமானம்வைத்து வங்கி ஒன்றில் ரூ. 6,40,000 கடன் பெற்றிருக்கிறார்.

விரட்டியடிக்கப்பட்ட பெண் பக்தைகள் வந்த கார்
விரட்டியடிக்கப்பட்ட பெண் பக்தைகள் வந்த கார்
நாமக்கல்: போர்டில் `ஸ்பா மசாஜ்’; உள்ளே பாலியல் தொழில்! - அதிரடிகாட்டிய போலீஸார்

அந்தப் பணத்தை ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.அத்தாயி வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், அவரது வீடு ஜப்திக்கு வந்திருக்கிறது. இதனால், குடும்பத்தினர் கடனை செலுத்த முடிவு செய்தனர். ஆனால், வங்கி நிர்வாகத்தினர் அத்தாயி கையெழுத்திட்டால்தான் கடனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அவர்கள் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்த அத்தாயியைப் பலமுறை அழைத்தும், அவர் திரும்பி வரவில்லை. மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்தாருடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பெண் பக்தை
பெண் பக்தை

இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக மகன் பழனிசாமி, பழனிசாமியின் மகள் சஸ்மிதா ஆகியோருடன் அத்தாயி செல்போனில் பேசிவந்திருக்கிறார். அதோடு, ஆசிரமத்தில் தன்னை வெளியேவிட மறுப்பதாகவும், `நீங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவர் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. இந்தச் சூழலில், நேற்று காலை 11 மணிக்கு பெங்களூரிலிருந்து ஒரு காரில் நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்களுடன், அத்தாயி அய்யம்பாளையத்துக்கு வந்தார். நித்யானந்தாவின் சீடர்கள் தங்கள் ஊருக்குள் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்த அத்தாயியின் உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். அவர்கள், நித்யானந்தாவின் சீடர்கள் வந்த காரைச் சூழ்ந்து கொண்டு, 'அத்தாயியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், நித்யானந்தாவின் பெண் சீடர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அத்தாயியை பொதுமக்கள் ஆம்னி வேன் ஒன்றில் ஏற்றி, குடும்பத்தினருடன் அனுப்பிவைத்தனர்.

`கைலாசாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதியில்லை' - நித்தியானந்தா தடாலடி!

இதற்கு நித்யானந்தா ஆசிரம பெண் சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். இதனால், பயந்துபோன அந்த இரண்டு பெண் சீடர்களும், அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். ராசிபுரம் அருகே பெண்ணைக் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுத்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள சமூக ஆர்வலர்கள் சிலர், ``பட்டணம், வடுகம், புதுப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் சிலர் பெங்களூரிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை நினைத்து அவர்களுடைய குடும்பத்தினர் தினம் தினம் அல்லாடி வருகிறார்கள்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு