Published:Updated:

`விகடன் செய்தியால் உயிர் பிழைக்கும் 5,000 மரக்கன்றுகள்!' - உற்சாகத்தில் கடவூர் மக்கள்

5,000 மரக்கன்றுகளை காப்பாற்றும் பணி
5,000 மரக்கன்றுகளை காப்பாற்றும் பணி ( நா.ராஜமுருகன் )

`தாங்கள் செய்த முறைகேட்டை மறைக்க, `வறட்சி; தண்ணீர் பற்றாக்குறை' என்று காரணம் காட்டி, 5,000 மரக்கன்றுகளையும் கருகவிட்டாங்க. ஆனால், தண்ணீர் பிரச்னையெல்லாம் இல்லை’ என்கிறார் பாலசுப்ரமணி.

நடந்திருக்கும் முறைகேட்டை மறைப்பதற்காக, கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, கருகவிட்டு அழிக்கப் பார்த்த 5,000 மரக்கன்றுகள், விகடன் இணையதளத்தில் வெளிவந்த செய்தியால், உயிர் பிழைத்திருக்கின்றன என, கடவூர் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட போது...
5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட போது...
நா.ராஜமுருகன்
ஊழல் முறைகேட்டை மறைக்க 5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட அவலம்... கரூர் அய்யம்பாளையத்தில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் மாவட்டத்தின் தெற்கு எல்லையாகவும், கடைசி ஊராகவும் இருக்கிறது, தெற்கு அய்யம்பாளையம். இங்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையால் தொடங்கப்பட்டதுதான் இந்த மரக்கன்றுகளை உருவாக்கும் நர்சரி. கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகளில் மரங்களை வளர்ப்பதற்காக, இந்த நர்சரியை ஊரக வளர்ச்சித் துறை அமைத்தது.

திட்ட மதிப்பீடு
திட்ட மதிப்பீடு
நா.ராஜமுருகன்

கடந்த 2018 - 19 ஆம் ஆண்டில் மட்டும் இந்த நர்சரி பராமரிப்புக்காக ரூ. 17.68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதோடு, அந்த திட்டத்தையே கொரோனா ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி இல்லாமல் செய்யப் பார்ப்பதாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

அந்த நர்சரியில் இருந்த 5,000 மரக்கன்றுகளையும் கருகவிட்டு, அதன்மூலம் இந்தத் திட்டத்துக்கு `சுபம்' எழுத, அங்குள்ள சில ஊழியர்கள் முயல்வதாக கடவூர் பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்தார்கள். இதுபற்றி, கடந்த மாதம் 12 ஆம் தேதி விகடன் இணையதளத்தில், 'ஊழல் முறைகேட்டை மறைக்க 5,000 மரக்கன்றுகளை கருகவிட்ட அவலம்...கரூர் அய்யம்பாளையத்தில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

5,000 மரக்கன்றுகளை காப்பாற்றும் பணி
5,000 மரக்கன்றுகளை காப்பாற்றும் பணி
நா.ராஜமுருகன்

இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து பரபரப்பான கரூர் மாவட்ட நிர்வாகம் ஊரக வளர்ச்சித் துறையை முடுக்கிவிட, அவர்கள் கருகிப்போய் முற்றிலும் அழியும் தறுவாயில் இருந்த 5,000 மரக்கன்றுகளை உயிரூட்டி, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இது குறித்து, நம்மிடம் பேசிய, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி, ``ஊரக வளர்ச்சித் துறையில் கடவூர் ஒன்றிய அளவில் உள்ள சில அதிகாரிகளும், கடவூர் ஊராட்சியில் உள்ள ஓர் ஊழியரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டைச் செஞ்சாங்க. தாங்கள் செய்த முறைகேட்டை மறைக்க, `வறட்சி; தண்ணீர் பற்றாக்குறை' என்று காரணம் காட்டி, 5,000 மரக்கன்றுகளையும் கருகவிட்டாங்க. ஆனால், தண்ணீர் பிரச்னையெல்லாம் இல்லை. கொரோனா ஊரடங்கில் எல்லோரது கவனமும் இருந்ததால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு அய்யம்பாளையத்தில் உள்ள இந்த நர்சரியை காலி பண்ண நினைச்சாங்க. ஆனா விகடனில் செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவனத்துக்குச் செல்ல , ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பரபரப்பானாங்க.

பாலசுப்ரமணி
பாலசுப்ரமணி
நா.ராஜமுருகன்

கடவூர் ஊராட்சி க்ளெர்க் பழனி மூலம், அந்த 5,000 மரக்கன்றுகளையும் காப்பாற்றும் முயற்சியைச் செய்தார்கள். பயன்படுத்தும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை முதலில் பிரித்து எடுத்து, அவற்றை வாகனங்கள் மூலம் எடுத்துக்கொண்டு போய், பல்வேறு ஊராட்சிகளில் நட்டார்கள். 90 சதவிகிதம் கருகிப்போன மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சி, அவற்றையும் உயிர்ப்பித்து, நடுவதற்கு உரிய வேலைகளும் நடக்கிறது. கருகி, பட்டுப்போக இருந்த 5,000 மரக்கன்றுகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. விகடனுக்கு கடவூர் மாகாணத்தில் உள்ள 34 குக்கிராம மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு