Published:Updated:

கோவில்பட்டி: பெட்ரோலுக்கு மனைவி பணம் தராததால் விபரீத முடிவெடுத்தாரா கணவர்?! - போலீஸ் விசாரணை

கோவில்பட்டி மேற்குக் காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்குக் காவல் நிலையம்

கோவில்பட்டியில் டூ வீலருக்கு பெட்ரோல் போட மனைவி பணம் தரவில்லை என்பதற்காக வீட்டில் மனைவியின் சேலையில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு, பெரியார் நகரில் வசித்துவந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இவரின் மனைவி நந்தினி பிரபா. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு ஒன்றரை வயதில் மனோஜ்குமார் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. கிருஷ்ணசாமி தற்காலிகப் பணியாளர் என்பதால், அவருக்குக் கிடைக்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை.

தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ண்சாமி
தற்கொலை செய்துகொண்ட கிருஷ்ண்சாமி

அவர் வசித்துவந்த மந்தித்தோப்பு வீட்டிலிருந்து தினமும் நகராட்சி அலுவலகத்திற்கு பைக்கில்தான் சென்று வருவாராம். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐத் தாண்டிய நிலையில், கிடைக்கும் சம்பளத்தில் பாதியளவு பெட்ரோலுக்கே போய் விடுகிறதாம். இதனால், கையில் பணம் இல்லாத நேரங்களில் மனைவி நந்தினி பிரபாவிடம் பணம் கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்.

இந்தநிலையில், இன்றும் கிருஷ்ணசாமி, மனைவியிடம் பெட்ரோல் போடுவதற்குப் பணம் கேட்டிருக்கிறார். அவர், தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது. மாமனாரிடம் (கிருஷ்ணசாமியின் தந்தை) பணம் வாங்கித்தருவதாக அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து, ``வாங்குற சம்பளம் குடும்பம் நடத்தவே போதலை. இந்த நிலைமையில, அதுல பெட்ரோலுக்கே பாதித்தொகை போயிடுது. நாளுக்கு நாள் விலைவாசியும் கூடிக்கிட்டே போகுது. பெட்ரோல் செலவுக்குக்கூட ஒவ்வொருத்தர்கிட்டயா பணம் கேட்க வேண்டியிருக்கு” எனப் புலம்பிக்கொண்டே இருந்தாராம் கிருஷ்ணசாமி. அப்போது அவரின் மனைவி நந்தினி பிரபா, பாத்ரூமுக்குள் குளிக்கச் சென்றபோது, தீடீரென வீட்டில் மனைவியின் சேலையை எடுத்து, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மும்பை: இறந்த தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு
தூக்கிட்ட சேலை
தூக்கிட்ட சேலை

பாத்ரூமிலிருந்து அவரின் மனைவி வெளியே வந்தபோது கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதிருக்கிறார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், பெட்ரோல் போடுவதற்குப் பணம் தர மறுத்த காரணத்தால்தான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு