Published:Updated:

குமரி: முடிதிருத்தும் பணி; ஒதுக்கப்பட்ட குடும்பம்?! - பாதைப் பிரச்னையில் நடந்தது என்ன?

பிரச்னைக்குரிய இடம்
பிரச்னைக்குரிய இடம்

நெசவு தொழில் செய்த ஒரு குடும்பம் முடிதிருத்தும் தொழிலுக்கு மாறியதால், அவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சேரமங்கலம் அருகே அமைந்திருக்கிறது குன்னங்காடு கிராமம். இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் நெசவுத் தொழிலை பிரதானமாகச் செய்துவந்தனர். பாவு ஆற்றுவதற்காகவும், நூல் இழைப்பதற்காகவும் சிறிது நிலம் இந்த மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நெசவுத் தொழில் நலிவடைந்ததால் வறுமை காரணமாக சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வேறு தொழில்களுக்கு மாறினர். பலர் இப்போதும் நெசவுத் தொழிலைச் செய்துவருகின்றனர். இதற்கிடையில் ஒரு குடும்பத்தினர் நெசவுத் தொழிலைக் கைவிட்டுவிட்டு முடிதிருத்துதல், மயானங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்ய குழி வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் நெசவுத் தொழில் செய்துவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், முடிதிருத்தும் தொழிலுக்குச் சென்ற குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நெசவுத் தொழிலுக்காக வழங்கப்பட்டிருக்கும் நிலத்தை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

மேலும், அந்தக் குடும்பத்தினர் செல்லும் பாதையை காம்பவுண்ட் கட்டி அடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் காமராஜர் நகரைச் சேர்ந்த மற்ற மக்களும் அந்த வழியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், தங்களுக்குப் பாதை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு காமராஜர் நகர் மக்கள் மனு அளித்தனர். அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் சேர்ந்து அரசு நிலத்தில் சாலை அமைப்பதற்காக மினி டெம்போக்களில் கான்கிரீட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையைக் கட்டியது ஆங்கிலேயர்களா?! - சபாநாயகர் பேச்சால் வருத்தத்தில் குமரி மக்கள்

இதை நெசவுத் தொழில் செய்யும் மக்கள் தடுத்திருக்கிறார்கள். அது நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான இடம் என்றும், அறுபது ஆண்டுகளாக அதை நெசவுத் தொழில் செய்பவர்கள் பயன்படுத்திவருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு திடீரென சாலை அமைக்க சிலர் முயன்றதால், நெசவுத் தொழில் செய்யும் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சாலை அமைக்கப் பொருள்கள் கொண்டு சென்ற இரண்டு வாகனங்களைக் கைப்பற்றினர். மேலும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அது அரசு நிலம் என இரு சாராரும், நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது என மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். மேலும் இது குறித்து இரு தரப்பினரும் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மண்டைக்காடு காவல் நிலையம்
மண்டைக்காடு காவல் நிலையம்

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், ``அரசு நெசவுத் தொழில் செய்வதற்காக அந்த இடத்தைக் கொடுத்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர், அது அரசு புறம்போக்கு நிலம் என்பதால் தங்களுக்கு வழிப்பாதை வேண்டும் எனக் கேட்கிறார்கள். அரசு அங்கு சாலை அமைத்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், சிலர் தனியாகச் சாலை அமைக்க முயன்றது பிரச்னையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல பாதை என்பதும் மக்களுக்கு முக்கியமானதுதான். இது பற்றி இரு தரப்பிடமும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு