Published:Updated:

`தேவைக்கு இருமடங்கு அதிகமாகவே தயாரிக்கிறோம்!’ -மதுரையில் இரவு பகலாக நடக்கும் கிருமி நாசினி தயாரிப்பு

கிருமி நாசினி
கிருமி நாசினி

தேவைகள் என்பது சுமார் 100 பாட்டில்கள் என்ற நிலையில் நாள் ஒன்றிற்கு 200 பாட்டில்கள் வரை தயாரிக்கிறோம். தேவையை விட அதிகமாக தயாரித்து வருவதால் அரசு அலுவலகங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிருமி நாசினிக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை.

உலகளவில் தற்போது மிகப்பெரும் பேசுபொருளாகியுள்ள கோவிட் - 19 கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் பாதிப்புகள் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தினர் ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். தற்போது பிற நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனா வலையில் சிக்கியுள்ளது.

Representational Image
Representational Image

இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் தளங்களிலும் பகிரப்பட்டுவருகிறது. மேலும் பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல் தியேட்டர், மால்கள் உள்ளிட்ட கேளிக்கை இடங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கிருமி நாசினிகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதனால் கிருமி நாசினியின் விலை கடுமையாக உயர்ந்தது. கிருமி நாசினி அடிப்படை தேவை போல் மாறியதால், இவற்றின் தேவைக்கு ஏற்ப அந்தந்தப் பகுதிகளிலுள்ள சுகாதாரத் துறை ஆய்வகங்கள் மருத்துவக் கல்லூரிகளில் வைத்து கிருமி நாசினிகள் தயாரிக்கும் பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிருமி நாசினி
கிருமி நாசினி

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்துத் துறை அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான கிருமி நாசினிகள் தயாரிக்கும் பணியில் மருந்தாளுநர், ஆய்வக நிபுணர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் கொண்ட குழு இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் வகையில் 500 ml பாட்டிலும், மருத்துவமனைகளில் பயன்படுத்த 200 ml பாட்டில்களிலும் நிரப்பப்பட்டு வருகிறது.

10 லிட்டர் கிருமிநாசினி தயார் செய்ய 99.5 சதவிகிதம் கொண்ட ஐசோப் ப்ரொப்யில் ஆல்ஹகால் 7.515 லிட்டரும், தோல் பாதுகாப்பிற்காக கிலிசரால் 145 மில்லி லிட்டரும், ஹைட்ரஜன் பெராக்சைடு 42 மில்லி லிட்டரும், டிஸ்டல் வட்டர் 2.298 லிட்டரும் லேமேஜெண்ட் 3 மில்லி லிட்டரும் கலந்து ஒருசேர குலுக்கி தயார் செய்து ஹைட்ரோ மீட்டர் மூலம் பரிசோதனை செய்து பின்னர் பாட்டில்களில் அடைக்கப்படுவதாகக் கூறும் மருந்தாளுநர்கள் இதில் 83 முதல் 84 சதவிகிதம் வரை தரம் உள்ளதாகவும் கூறுகின்றனர். 70 சதவிகித தரம் இருந்தாலே பயன்படுத்த தகுதியானதாக நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு தரம் நிறைந்த வகையில் தயாரிப்பதாகக் கூறுகின்றனர்.

கிருமி நாசினி
கிருமி நாசினி

மேலும் இந்தக் கிருமி நாசினி கொரோனா மட்டுமல்லாமல் அனைத்து வகை கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது எனவும் கூறுகின்றனர்.

ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் 25 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தயாரிக்கப்படுவதாகக் கூறும் மாநகராட்சியின் சுகாதார அலுவலர் மருத்துவர் வினோத், ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் மட்டுமே செலவாவதால் அரசுக்கு எந்த வித நஷ்டமும் இல்லாமல் குறைந்த செலவில் நிறைந்த அளவு தயாரிக்க முடிகிறது எனத் தெரிவிக்கிறார்.

தேவைகள் என்பது சுமார் 100 பாட்டில்கள் என்ற நிலையில் நாள் ஒன்றிற்கு 200 பாட்டில்கள் வரை தயாரிக்கிறோம். தேவையை விட அதிகமாகத் தயாரித்து வருவதால் அரசு அலுவலகங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் கிருமி நாசினிக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை எனவும் 99 சதவிகிதம் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கும் தன்மை கொண்டவையாக

கிருமி நாசினி
கிருமி நாசினி

தரமான முறையில் தயாரிக்கபட்டு வருவதாகவும் 20 நிமிடத்திற்கு ஒரு முறை அனைவரும் தங்களது கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் அளவிற்குத் தேவையான கிருமி நாசினிகள் இருப்பு உள்ளதாகவும் கூறுகிறார். தேவை மற்றும் தட்டுப்பாடுகளை உணர்ந்து அரசு செயல்படுவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு