Published:Updated:

`அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை டார்கெட்!' -முடங்கிக் கிடக்கும் மேலூர் குவாரிகளில் மீண்டும் முறைகேடு?

தடை செய்யப்பட்ட இடத்தில் லாரி் செல்லும் தடம்
தடை செய்யப்பட்ட இடத்தில் லாரி் செல்லும் தடம்

மேலூர் பகுதியில் முடங்கிக் கிடக்கும் குவாரிகளில் மீண்டும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறந்தநாளுக்கு கேக் வெட்டுவது போல மலைகளை ராட்சத இயந்திரங்கள் கொண்டு துண்டு துண்டாக வெட்டி எடுத்தனர் கிரானைட் முதலைகள்.

கிரானைட் குவாரிகளில் மழை நீர்
கிரானைட் குவாரிகளில் மழை நீர்

இதற்காக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு மேலூர் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும் கற்களுடன் கணக்கு காட்டி மேலூர் கற்கள் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் எட்டிமங்கலம் ப.ஸ்டாலின், ``மதுரை மாவட்டத்தில் கடைசி நெற்களஞ்சியமாக விளங்கிய பல்வேறு பகுதி விவசாயம் கிரானைட் குவாரிகளால் சிதைந்து போயின. இயற்கையை சித்ரவதை செய்தது போல் மலை வளங்களை அழித்துவிட்டனர். எஞ்சியிருக்கும் இடங்களைக் காப்பாற்ற பல சமூக ஆர்வலர்கள் முயல்கின்றனர். ஆனால், சில முதலாளிகள் தங்கள் சுய லாபத்துக்காகத் தொடர்ந்து பல முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செங்கோடு, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பூவந்தி மற்றும் ஒசூருக்கு கற்கள் முறைகேடாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இரவு நேரத்தில்
இரவு நேரத்தில்

அதிகாலை 3 முதல் 6 மணி வரை மேலூர் பகுதியில் அதிகப்படியான கிரானைட் கற்கள் லாரிகளைப் பார்க்க முடிகிறது. இவை அனைத்து முறைகேடாக எடுத்து வரப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் வழக்குகள் உள்ள நிலையில் இங்கிருக்கும் கற்களும் வெளி மாவட்ட கற்கள் என திருடப்படுகிறது.

குறிப்பாக கீழவளவு பகுதியில் இருந்து கற்கள் கொண்டு செல்லப்படுகிறது. வெளி மாவட்டத்திலிருந்து கொண்டுவரப்படும் கற்களுக்குப் போலியான ஆவணங்கள் தயார் செய்யப்படுகிறது. அனுமதி அளிக்கும் நேரத்தைவிட பன்மடங்கு நேரம் அதிகப்படுத்தி லோடுகள் அடிக்கப்படுகிறது. ஒரு லாரிக்கு அனுமதி பெற்று 5 லாரிகளில் கற்களை கடத்துகின்றனர். அதற்காக லாரிகளின் நம்பர் பிளேட் மற்றும் கற்கள் எடுக்கும் ஆவணங்களும் அடிக்கடி மாற்றப்படுகிறது. இந்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தால் அரசுக்கு இழப்பீடுகளை தடுக்கலாம். மேலூர் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வைத்துள்ள 2 முக்கிய முதலாளிகள் இந்த முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

லாரிகள் வந்து செல்லும் பாதை
லாரிகள் வந்து செல்லும் பாதை

இந்த நிலையில், தற்போதும் அதே தவறுகளைச் செய்து வருகின்றனர். இதில் சில அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதற்காக முறைகேடாக ஈடுபடும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் கனிம வளத்துறைக்கு மட்டும் இவர்கள் 2 பேர் 6 லட்சம் வரை வழங்குவதாக கூறப்படுகிறது. எனவே, கற்களை முறைகேடாகக் கொண்டு செல்லும் லாரி உரிமையாளர்கள் மீதும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக விசாரிக்க மதுரை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். ஆனால் அவர்களிடம் பேச முடியவில்லை. பின்னர் மதுரை சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவை தொடர்புகொண்டோம், ``இது தொடர்பாக உடனே விசாரணை செய்கிறேன்" என்று நம்மிடம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு