Published:Updated:

`கண்ணாடி பாட்டிலில் செடி... மாஸ்க்..!’- காற்று மாசுபாடு விழிப்புணர்வில் அசத்தும் மதுரை இளைஞர்

கண்ணாடி பாட்டில் விழிப்புணர்வு
கண்ணாடி பாட்டில் விழிப்புணர்வு

``மாணவர்கள்தான் எதிர்காலம் அதுனாலதான் அங்க இருந்து தொடங்குனேன்" - காற்று மாசுபாட்டைக் கலைக்க முற்படும் தனிஒருவன்.

நம் நாட்டின் முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னைகளை பல்வேறு தடு மாற்றங்களோடு எதிர்கொள்கின்றன. இதனால் நிறம் இல்லாத காற்றைக் கூட பாட்டிலில் விற்க ஆரம்பித்துவிட்டனர். அசுத்தமான காற்றுகளுக்கு மத்தியில் ஆக்சிஜனை விற்பனை செய்யும் நிலைமை ஆகிவிட்டது. இந்நிலையில் காற்று மாசுபாடு குறித்த வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் மதுரையைச் சேர்ந்த அசோக் குமார். மாணவர்களை தேடிச் சென்று ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிய செடி வளர்த்து, அதோடு ஒரு மாஸ்க்கையும் இணைத்து சுவாசிக்க வைக்கிறார்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு
மாணவர்களிடம் விழிப்புணர்வு

அப்படி என்னதான் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கிறார் என விரிவாகத் தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்துப் பேசினோம்.., ``அடிப்படையிலேயே நான் ஒரு சமூக ஆர்வலர். உடனே லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து சமூகப் பணிகள் மேற்கொள்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் வீடு, கடைகளுக்குத் தண்ணீர் சப்ளே செய்யும் தொழில் செய்துவருகிறேன். எனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் என்னால் முடிந்த உதவிகளை சுற்றுச் சூழலுக்கும் மாணவர்களும் அதிகளவு செலவு செய்கிறேன்.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக என்னால் சமூகம் சார்ந்து பயணிக்க முடிகிறது. தனியாக மட்டும் அல்ல மற்ற சமூக இயக்கங்கள் கூப்பிட்டால் அவர்களுடனும் இணைந்து பணி செய்வேன். இப்படியான விஷயங்களில் நான் அதிகமா முன்னெடுப்பது மரம் நடுறதுதான். பனை மரங்களை எல்லாரும் மறந்து போயிட்டோம். அதை மீட்டு எடுக்கணும்ங்கிறது என்னோட ஆசை. அதுனால பனை விதைகளைச் சேகரிச்சு நீர் நிலைகளில் நட்டு வெச்சிட்டு வருவோம், நானும் என் குழந்தைகளும். நாங்க விதைப் பந்துகளும் செய்வோம், ரொம்ப தூரம் பயணம் போறப்போ அதை எடுத்துட்டுப் போய் தூவி விடுவோம்.

பயணத்தில் விதைப் பந்துகள்.
பயணத்தில் விதைப் பந்துகள்.

இதுக்கு `விதை தூவும் பறவைகள்'ன்னு பேர் வச்சிருக்கோம். எங்களோடு நீங்க இணைந்தால் நீங்களும் ஒரு பறவைதான். நான் தனியாதான் இத எல்லாமே பண்றேன். யாராச்சும் மரம் நடுற பணியில ஈடுபட்டா தன்னார்வலரா சேர்த்துப்பேன். என்னை சமீபத்துல ரொம்ப பாதிச்ச விஷயம் ஆக்சிஜன விக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு பேப்பர்ல பார்த்தேன்.

இப்டியே போச்சுன்னா நம்ம புள்ளைங்களுக்குத் தண்ணி கேன் குடுத்து விடுற மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரும் குடுத்து விடுற நெலம வந்துரும்னு பயம் வந்துச்சு. இந்த மாற்றங்களை எல்லாம் பாத்தப்போ இப்படித்தான் நமக்கு முன்னாடி இருந்தவங்க நம்மகிட்ட பூமிய விட்டுட்டுப் போனாங்களான்னு தோணுச்சு. இதுக்கு ஏதாச்சும் பண்ணணும்னு உள்ளுக்குள்ள உறுத்திட்டே இருந்துச்சு, அப்போ தோணுனதுதான் இந்தக் கண்ணாடி பாட்டில் ஐடியா. இனி வருங்காலத்துல இப்படிதான் இருக்கப் போகுதுனு எல்லார்கிட்டையும் சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு நெனச்சேன்.

விழிப்புணர்வு
விழிப்புணர்வு

ஆனா எங்க இருந்து தொடங்குறதுனு ஒரு குழப்பம். இதையெல்லாம் போய் ஒரு நடுத்தர வயது ஆள்கிட்ட சொன்னா, எனக்கே ஆயிரம் பிரச்னை இருக்கு, இது தேவையான்னு கேப்பாங்க. இதுக்கு யாரு சரியா இருப்பான்னு யோசிச்சப்போ, மாணவர்கள்தான்னு தோணுச்சு. எங்க ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன். இராமநாதபுரம் மாவட்டம்தான் வறண்ட மாவட்டம். அங்க இருக்கவங்களுக்குத்தான் இதோட அருமை புரியும்னு ஆர்.எஸ்.மங்கலத்துல இருக்க பள்ளியில தொடங்கினேன். அங்க போய், அவங்ககிட்ட அந்த மாஸ்க்க போட்டு ஒரு பத்து நிமிஷம் இருக்கச் சொன்னேன். ``அண்ணே முடியலண்ணே, இதுக்கு மரமே வளர்த்துரலாம்னேனு" சொன்னாங்க. ரொம்ப சந்தோசமா இருந்துச்சு, நம்ம நெனச்சது நடந்துரும்னு தெம்பும் வந்துச்சு. இன்னும் நிறையப் பள்ளிகளில் அனுமதி வாங்கிவச்சிருக்கேன். எல்லாம் இடத்துலயும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவேன்” என்றார் நம்பிக்கையாக...!

அடுத்த கட்டுரைக்கு