Published:Updated:

மயிலாடுதுறை : `மூத்த குடிமக்களைக் குறிவைக்கும் ஆன்லைன் மோசடிகள்' - எச்சரிக்கை விடுத்த போலீஸார்!

ஆன்லைன் மோசடிகள்
ஆன்லைன் மோசடிகள்

மூத்த குடிமக்களைக் குறிவைக்கும் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூத்த குடிமக்களையும், ஓய்வூதியம் வாங்குபவர்களையும்  குறிவைத்தே அதிக அளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதாக மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைன் மோசடிகள்
ஆன்லைன் மோசடிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின்பேரில், ஆன்லைன் மோசடிகளைத்  தடுப்பது குறித்து சைபர் க்ரைம் விழிப்புணர்வுக் கூட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மகளிர் திட்ட மாவட்ட அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களில் கிராமங்களில் பணியாற்றுகின்ற மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை: யூடியூப் பார்த்து கற்ற ஃபார்முலா; சைபர் க்ரைம் கும்பல் சிக்கியது எப்படி?
ஆன்லைன் மோசடிகள்
ஆன்லைன் மோசடிகள்

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளாராகப் பங்கேற்ற மயிலாடுதுறை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன்  பேசினார்.

``இந்த  மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ள குறும்படங்கள் விரைவில் வெளியிடப்படவிருக்கின்றன.

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும், ஓய்வூதியம் பெறுபவர்களையும் குறிவைத்தே அதிக அளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதாகப் புகார்கள் வருகின்றன. வங்கி மேலாளர்கள் தங்கள் வங்கிக்குக் கணக்கு தொடங்க வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் அட்டைகளை வழங்கும்போதே அவர்களுக்குத்  தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆன்லைன் மோசடியில் ஓ.டி.பி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு புகார் தெரிவிப்பதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்ட பணத்தை எடுப்பதைத் தடுக்க முடியும். மேலும், சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வராமலேயே www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.

ஸ்கிரீன்ஷாட் எடுத்தும், ரிக்கார்டு செய்தும் அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் மோடிகளில் ஈடுபடுபவர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

சைபர் குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், வில்லேஜ் போலீஸ் சைபர் க்ரைம் கிளப் (வி.பி.சி) திட்டத்தில் ஒரு கிராமத்துக்கு ஒரு காவலர், ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் அடங்கிய குழுவை உருவாக்கி அந்தக் குழுவின் மூலம் மூத்த குடிமக்களை அணுகி ஏ.டி.எம்., ஓ.டி.பி., முகநூல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் நிகழ்த்தப்படும்  குற்றங்கள் குறித்து தேவையான எச்சரிக்கைகளை அவ்வப்போது அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு