Published:Updated:

`சம்பிரதாய ஆய்வு... அதே வாக்குறுதிகள்!' - முல்லைப் பெரியாறு அணை சோகங்கள்

ஆய்வு
ஆய்வு

வழக்கமாக, தென்மேற்கு பருவமழைக்கு முன்னர் நடக்கும் மூவர் குழுவின் ஆய்வானது, தற்போது முன்னரே நடந்தது. ஆனால், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தென் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையில், உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு இன்று தனது 13வது ஆய்வை நடத்தியது. இதில், மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்சன்ராஜ் தலைமை வகித்தார். தமிழக பொதுப்பணித்துறை செயலர் மணிவாசகன் மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை செயலர் அசோக் ஆகியோரும் தமிழக, கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஆய்வு
ஆய்வு

வழக்கமாக, தென்மேற்குப் பருவமழைக்கு முன்னர் நடக்கும் மூவர் குழுவின் ஆய்வானது, தற்போது முன்னரே நடந்தது. ஆனால், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு வந்த அதிகாரிகள், மெயின் அணை மற்றும் பேபி அணையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அணையில் இரண்டு மதகுகளை இயக்கி ஆய்வு செய்தனர். பின்னர், குமுளி ஒன்றாம் மைல் பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு அணை ஆய்வுக் குழுவின் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பத்திரிகையாளர்கள் சந்திப்பிலாவது அணையில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு தெரிவித்ததைப் போலவே, இந்த ஆண்டும், மத்திய நீர்வள ஆணைய முதன்மைப் பொறியாளர் குல்ஷன்ராஜ் பேசுகையில், "முல்லைப்பெரியாறு அணையில், ஆய்வு மேற்கொண்டோம். இரண்டு மதகுகளை இயக்கிப் பார்த்தோம். அவை, நல்ல நிலையில் இயங்கின.

ஆய்வு
ஆய்வு

கசிவு நீர் அளவை ஆய்வு செய்தோம். அது இயல்பான அளவிலேயே உள்ளது. இதனால், அணை பலமாகவே உள்ளது. இந்த ஆய்வு மூவர் குழுவின் 13-வது ஆய்வு. ஆய்வுக் கூட்டத்தில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள சில பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அணையின் பாதுகாப்பு, மின்இணைப்பு, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அணைக்கு மின் இணைப்பு பெறுவதற்கு தமிழக அரசு, கேரள மின் வாரியத்துக்கு ஏற்கெனவே பணம் செலுத்தியுள்ளது. சில துறைகளில் அனுமதி பெற வேண்டியுள்ளதால், விரைவில் அனுமதி கிடைக்கும். வல்லக்கடவு வழியான சாலை, மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையை சீரமைப்பதற்கு தமிழக அரசு ஒரு திட்டம் தயாரித்துள்ளது.

அதற்குக் கேரள வனத்துறையின் உரிய அனுமதியுடன், சாலை அமைக்கும் பணி விரைவில் நடைபெறும். தற்போது அணையில், 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். பேபி அணையை பலப்படுத்திய பின்னர்தான், 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முடியும். பேபி அணையைப் பலப்படுத்த சில மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதிக்காக தமிழக அரசு காத்திருக்கிறது. அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும். அணைப்பகுதியில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த மூவர் குழு பரிந்துரை செய்யும்" என்றார். தொடர்ந்து பேசியவர், "அணைக்கு, புதிய படகு இயக்குவது, சாலை மற்றும் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து இரு மாநில அரசும் பேசி தீர்த்தக்கொள்ள வேண்டும்" என்று கூறி முடித்துக்கொண்டார்.

ஆய்வு
ஆய்வு

சரி, தமிழக அதிகாரிகளை சந்தித்து தீர்க்கப்படாத பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கருத்துகளை முன்வைத்தீர்களா? எனக் கேட்கலாம் என்று பார்த்தால், ஆலோசனைக்கூட்டம் முடிந்த அடுத்த நொடியே தமிழக அதிகாரிகள் கிளம்பிவிட்டது தெரியவந்தது. அதிகாரிகள் சம்பிரதாயத்துக்காகவே ஆய்வு செய்வதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு