Published:Updated:

நாகை: ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த கிராமப் பஞ்சாயத்து; பாதிக்கப்பட்ட குடும்பம் தற்கொலை முயற்சி!

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை, சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் கலெக்டர் அலுவலகம் முன்பு  தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பழனியின் சகோதரர் முத்து. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். முத்து கேரளாவில் தங்கி மீன்பிடித் தொழில் செய்துவருவதால் விடுமுறைக் காலங்களில்தான் சாமந்தான்பேட்டைக்கு வந்து செல்வார். இதில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முத்து, மனைவி பிரியாவைவிட்டுப் பிரிந்து வாழ்ந்தார். இந்தநிலையில் சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார்கள் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பிரியாவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ரூ.16 லட்சம் அபராதத் தொகையை முத்து வழங்க வேண்டுமென பஞ்சாயத்தில்  தீர்ப்பளித்தனர். இந்தநிலையில் திடீரென முத்து தலைமறைவானார். கடந்த இரண்டு மாத காலமாக பல இடங்களில் அவரின் உறவினர்கள் தேடியும் முத்துவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பஞ்சாயத்தார்கள், முத்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர்.

இது பற்றி பழனியிடம் பேசினோம்.

``ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து 16 நாள்கள் ஆன நிலையில் எங்கேயும் வேலைக்குச் செல்ல முடியலை. இதனால நாங்க ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அஞ்சு நாள்களுக்கு முன்னாடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துல புகார் மனு கொடுத்தோம். ஆனா இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கலை. காணாமல்போன என் சகோதரர் முத்துவுக்கும் எங்க குடும்பத்தினருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது எங்க குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பது சரியில்ல. ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த காரணத்தால் வேலைக்குச் செல்ல முடியாம சாப்பிட வழியின்றி கஷ்டப்பட்டுட்டு வர்றோம். அந்த மன உளைச்சலில்தான் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளலாமென முடிவு பண்ணி, கலெக்டர் ஆபீஸ் முன்னால் எங்க குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றோம்.

நாகை: `3 குடும்பத்தாருக்கு முடி வெட்டக் கூடாது!' - அதிர்ச்சி கொடுத்த கிராமப் பஞ்சாயத்து
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி

அப்போது எங்களைத் தடுத்துவிட்டனர். எனவே எங்களை ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் நாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டும்" என்றார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு