Published:Updated:

தொழிற்சங்கம் மாறியதால் மகளைப் பழிவாங்கிவிட்டார்கள்; தலையில் மனுவைச் சுமந்த அஞ்சல் ஊழியரின் தந்தை!

தலையில் கோரிக்கை மனுவைச் சுமந்து வந்த இரத்தினசுவாமி
தலையில் கோரிக்கை மனுவைச் சுமந்து வந்த இரத்தினசுவாமி

சாமிதோப்பிலிருந்து நாகர்கோவில் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்தச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், மேலகிருஷ்ணன் புதூரைச் சேர்ந்தவர் இரத்தினசுவாமி. இவர் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக இருந்து பணி ஓய்வுபெற்றவர். இவருடைய மகள் கௌதமி இந்திய அரசின் தபால்துறையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டிவிஷன் கட்டுப்பாட்டிலுள்ள நெய்யூர் தபால் அலுவலகத்தில் போஸ்டல் அசிஸ்டென்ட்டாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். எட்டு ஆண்டுகள் வேலை பார்த்துவந்த அவர் பணிபுரிந்த காலத்தில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கு விடுமுறை கேட்டதற்கு அதிகாரிகள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உயரதிகாரிகளுக்கு முறையீடு செய்ததால் அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர். அதே சமயம் ஏற்கெனவே முதல் குழந்தை பேறுகாலத்துக்கு எடுத்த விடுமுறையை ரத்து செய்துள்ளனர். மேலும், முதல் பேறுகால விடுமுறை சமயத்தில் பெற்ற சம்பளத்தைத் திருப்பிச் செலுத்துமாறு கெளதமியை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும், கெளதமி வயிற்றிலிருந்த ஒரு கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக மருத்துவ விடுமுறை கேட்டபோதுகூட அதிகாரிகள் மறுத்திருக்கிறார்களாம்.

2 பெண் குழந்தைகளுடன் கலங்கி நின்ற பெண்; உடனடி உதவி கிடைக்கச் செய்த கலெக்டர்!
கோரிக்கை மனுவுடன் நடந்துவரும் அஞ்சல்துறை பெண் ஊழியரின் தந்தை இரத்தினசுவாமி
கோரிக்கை மனுவுடன் நடந்துவரும் அஞ்சல்துறை பெண் ஊழியரின் தந்தை இரத்தினசுவாமி

இதையடுத்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று அனுமதி பெற்று கட்டியை அறுவை சிகிச்சை செய்யச் சென்றிருக்கிறார். அப்போதும் மாவட்ட அளவிலுள்ள தபால்துறை அதிகாரிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர் பிரச்னை காரணமாக தனது போஸ்டல் அசிஸ்டென்ட் பணியை ராஜினாமா செய்திருக்கிறார் கௌதமி. ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், கெளதமியைப் பணி நீக்கம் செய்திருப்பதாக இப்போது நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால் கெளதமி மனம் உடைந்து போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கெளதமியின் தந்தை இரத்தினசுவாமி இன்று சாமிதோப்பில் அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதி அடிகளாரிடம் ஆசிபெற்றிருக்கிறார். பின்னர் ஒரு கோரிக்கை மனுவைத் தலையில் சுமந்தவாறு சாமிதோப்பிலிருந்து நாகர்கோவில் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இந்தச் சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனுவைச் சுமந்துவரும் இரத்தினசுவாமி
மனுவைச் சுமந்துவரும் இரத்தினசுவாமி

இது குறித்து இரத்தினசுவாமி கூறுகையில், ``என் மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். என் மகள் எல்லா விடுப்பையும் உயரதிகாரிகளிடம் கேட்டுத்தான் பெற்றார். கட்டி அறுவை சிகிச்சைக்காக எடுத்த விடுமுறைக்கான சம்பளத்தை இன்னும் கொடுக்கவில்லை. என் மகளை இவ்வளவு கொடுமை செய்வதற்குக் காரணம், அவர் ஒரு தொழிற்சங்கத்திலிருந்து மற்றொரு தொழிற்சங்கத்துக்கு மாறியதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கொடுமை தாங்க முடியாமல் ஓராண்டுக்கு முன் என் மகள் வேலையை ராஜினாமா செய்தார். ஆனால் அவர்கள் ஒரு வாரத்துக்கு முன் என் மகளுக்கு அளித்த நோட்டீஸில் டெர்மினேட் செய்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னை காரணமாக உடல்நலம் குன்றி மருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன். எனவே டெர்மினேட் நோட்டீஸை ரத்து செய்து விடுப்புக்கான ஊதியத்தை வழங்கி என் மகளைக் காப்பாற்ற வேண்டும். இது குறித்து பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு