கடலூர் மாவட்டம், நெய்வேலி மேலகுப்பத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் கோவிந்தன். என்.எல்.சி நிறுவனத்தின் இரண்டாம் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றிவரும் இவர், தன் மனைவி திலகவதியுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது என்.எல்.சி-யிலிருந்து ஜெயங்கொண்டத்தில் இருக்கும் சிமென்ட் தொழிற்சாலைக்கு சாம்பலை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று குப்புசாமி-திலகவதி தம்பதியர் மீது மோதியது.

அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கினார்கள். அதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த அவர் மனைவி திலகவதி சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
விபத்து குறித்து கேள்விப்பட்டு அங்கு திரண்ட அந்தப் பகுதி மக்கள் அங்கு சாம்பல் ஏற்றுவதற்காக நின்றிருந்த ஐந்து லாரிகளுக்கு தீ வைத்து எரித்தனர். அத்துடன் வரிசையாக நின்றிருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதேபோல தீயணைப்புத்துறையினரும் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த லாரிகளை அணைத்தனர்.

அதேசமயம் உயிரிழந்த கோவிந்தனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப காவல்துறையினர் முயன்றனர். ஆனால் கோவிந்தனின் உடலை எடுக்க அனுமதிக்காத அவருடைய உறவினர்களும் ஊர் மக்களும், என்.எல்.சி நிர்வாகம் அவருடைய குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.