Published:Updated:

நீலகிரி: இடைவிடாத மழை; முகாம்களுக்கு மாற்றப்படும் மக்கள்! - தேசியப் பேரிடர் மீட்புப் படை வருகை

நீலகிரியில் இடைவிடாத மழை
நீலகிரியில் இடைவிடாத மழை

தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர்கொண்ட இரண்டு குழுக்கள், நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்களை மீட்பு முகாம்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தென்மேற்குப் பருவகாற்றின் தீவிரம் காரணமாக, கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக நீலகிரியில் தொடர்ந்து மழை பெய்துவந்தாலும், கடந்த 20-ம் தேதி முதல் மழை மேலும் தீவிரமடைந்தது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு உள்ளது. மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இடைவிடாத மழை
இடைவிடாத மழை

பலத்த காற்றுடன் பெய்துவரும் மழை காரணமாக, ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இவற்றை உடனுக்குடன் அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைத்துவருகின்றனர்.

பெரிய அளவிலான பேரிடர் பாதிப்புகள் ஏற்படவில்லையென்றாலும், மழை தொடர்வதால் நீலகிரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்திலிருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர்கொண்ட இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்துவருவதால், மக்களை மீட்பு முகாம்களுக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

நீலகிரி மழை
நீலகிரி மழை

குன்னூர் முகாமில் நான்கு குழந்தைகள் உட்பட 28 பேரும், கூடலூர் புத்தூர் வயல் முகாமில் 25 குழந்தைகள் உட்பட 71 பேரும் என மொத்தம் 99 நபர்களை மீட்பு முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்துப் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``தொடர் மழை காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மண்சரிவும், சில இடங்களில் மரங்கள் விழுதல் போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. இவற்றை உடனுக்குடன் சரிசெய்துவருகிறோம். நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் சிலரை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்கவைத்திருக்கிறோம்.

நீலகிரி மழை
நீலகிரி மழை

பழுதடைந்த நிலையிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க அறிவுறுத்திவருகின்றனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அந்தப் பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தயார்செய்யப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டுவருகிறது"என்றார்.

அடுத்த கட்டுரைக்கு