Published:Updated:

இறந்த குட்டியைப் பிரியாத யானைகள்; புதைக்க மக்கள் எதிர்ப்பு; துண்டு துண்டாக வெட்டி வனத்துறை அடக்கம்!

அதே பகுதியில் யானையின் உடலை அடக்கம் செய்ய அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், யானையின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு கி.மீ சுமந்து சென்ற வனத்துறையினர் வருவாய் நிலத்தில் புதைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகிலுள்ள ஒரு பாக்கு தோட்டத்துக்கு இரவு நேரத்தில் உணவு தேடி யானைக் கூட்டம் ஒன்று வந்திருக்கிறது. அங்கிருந்த ஒரு சதுப்பில் யானைக்குட்டி ஒன்று சிக்கியிருக்கிறது. மற்ற யானைகள் பல மணி நேரம் மீட்க முயன்றும் முடியாததால், அந்த யானைக்குட்டி இறந்திருக்கிறது. இறந்த குட்டியின் தாய் உட்பட மூன்று யானைகளும் இறந்த குட்டியின் உடலைவிட்டு நகராமல் கடந்த இரண்டு நாள்களாக பாசப் போராட்டம் நடத்தின. யானைக்குட்டியின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து மூன்று யானைகளும் உடலைவிட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றன.

இறந்த குட்டியின் அருகில் நிற்கும் யானைகள்
இறந்த குட்டியின் அருகில் நிற்கும் யானைகள்

யானைக்குட்டியின் உடலை மீட்டு கூறாய்வு செய்த வனத்துறையினர், உடலை அங்கேயே புதைக்கத் திட்டமிட்டனர். ஆனால் இதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியில்லாமல், யானைக்குட்டியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சுமந்து சென்று வருவாய் நிலத்தில் புதைத்தனர்.

இந்தத் துயரம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அலுவலர் ஒருவர், ``காட்டுக்குள் யானைகள் இறந்துவிட்டால் உடற்கூறாய்வு செய்துவிட்டு தந்தம் உள்ளிட்டவற்றை மட்டும் எடுத்துவிட்டு யானையின் உடலை அப்படியே விட்டுவிடுவோம். அது மற்ற சில உயிரினங்களுக்கு உணவாக மாறும். ஆனால் தனியார் நிலங்களில் யானைகள் இறந்தால் புதைக்கவேண்டியிருக்கிறது. இதற்கு சில இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படித்தான் இங்கும் நடந்தது. அந்த யானையின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அருகிலுள்ள வருவாய்த்துறை நிலத்துக்கு எடுத்துச் சென்று ஜே.சி.பி இயந்திர உதவியுடன் குழிதோண்டிப் புதைத்தோம். கொட்டும் மழையில் வேட்டைத்தடுப்பு ஊழியர்கள் படாத பாடுபட்டார்கள்" என்றார்.

மின்சாரம் தாக்கி இறந்த ஆண் யானை... ரகசியமாக புதைப்பு? ஊட்டியில் பகீர் சம்பவம்!
இறந்த குட்டியைப் பிரியாத யானைகள்; புதைக்க மக்கள் எதிர்ப்பு; துண்டு துண்டாக வெட்டி வனத்துறை அடக்கம்!

இது குறித்து அந்தப் பகுதி மக்கள், ``யானை இறந்த பகுதியில் குடிநீர்க் கிணறு உள்ளது. இங்கு புதைத்தால் குடிநீர் பிரச்னையாகிவிடும். ‌அதனால்தான் எதிர்ப்பு தெரிவித்தோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு