Published:Updated:

பட்டுக்கோட்டை : `எல்லா வழியும் மூடிக்கிடக்கு!' உயிரிழந்த பெற்றோர்; கலங்கி நிற்கும் சிறுவன்!

பெற்றோரை இழந்த சிறுவன் பாட்டியுடன்...
பெற்றோரை இழந்த சிறுவன் பாட்டியுடன்...

"பசிச்ச வயித்துக்குத்தான் தெரியும் அதோட அருமைனு" நீலகண்டன் சொல்லிக்கிட்டே இருப்பார். இப்ப அவர் மகனை எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில விட்டுட்டுப் போயிட்டார். பெற்றோர் இல்லாத நிலையில் சிறுவன் தவிச்சு நிக்கிறான்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சபரிநாதன். இவரின் அம்மா ஈஸ்வரி, சபரிநாதன் ஒரு வயது குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார். அப்பா நீலகண்டன் மரத்தச்சு வேலைசெய்துவந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி கடந்த சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். தனது ஒரே ஆதரவான தந்தையும் கொரோனாவால் இறந்தநிலையில், வாழ வழியின்றி 60 வயதான தனது பாட்டி லெட்சுமியுடன் தவித்து நிற்கிறார் சபரிநாதன். மகன் இறந்த துக்கம், பேரன் சிறு வயதிலேயே அப்பா, அம்மா இரண்டு பேரையும் இழந்து நிற்கும் வேதனை இரண்டும் பாட்டி லெட்சுமியின் கண்களில் ஓயாமல் கண்ணீராகக் கரைகிறது.

பெற்றோர் இறப்பால் தவிக்கும் சிறுவன்
பெற்றோர் இறப்பால் தவிக்கும் சிறுவன்

லெட்சுமி பாட்டியிடம் பேசினோம். "என் மருமக, என் பேரன் ஒரு வயசுப் புள்ளையா இருக்கும்போதே என் கையில கொடுத்துட்டு மகராசியா போய்ச் சேர்ந்துட்டா. அதுக்குப் பெறவு என் மகன் நீலகண்டன் குடும்பத்தை கவனிக்கறதுக்காக அடிக்கடி வெளியூர் வேலைக்குப் போயிடுவான். நான்தான் சபரியை வளர்த்தேன். நீலகண்டன் தன் மகன் மேல உசுரையேவெச்சுருந்தான். அம்மா இல்லாத குறையே தெரியாம பார்த்துக்கிட்டான். அவன், `அம்மா இல்லாத புள்ளை... அவனை ஒரு வார்த்தைகூட திட்டிப் பேசிராதம்மா. அவனுக்காகத்தான் நான் வாழுறேன்’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான். அவனைப் படிக்கவெச்சு பெரிய ஆளாக்கி, நல்ல வேலையில சேர்க்கணும்னு ஆசைப்பட்டான். ஆனால் அதுக்குள்ள போய்ச் சேர்ந்துட்டான்.

தார்ப்பாய் சுவருடன் வீடு
தார்ப்பாய் சுவருடன் வீடு

எனக்கும் உடம்புக்கு முடியலை. இருக்குற இந்தச் சின்ன ஓட்டு வீடுதான் எங்களோட சொத்து. அதைச் சுற்றி சுவர் எடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டம் எங்களைப் பாடாப்படுத்துது. `காசு வரும்போது சுவர் எடுத்துக்கலாம்மா’னு தார்ப்பாயைச் சுவர்போல் கட்டித் தொங்கவிட்டிருக்கான். ராத்திரி நேரத்துல பூச்சி பொட்டெல்லாம் வீட்டுக்குள்ள வந்துடும். என் மகன் வேலைக்குப் போய் காசு கொண்டாந்து கொடுப்பான். எத்தனை குறை இருந்தாலும் சபரிக்காக அதை மறந்து நிம்மதியா கஞ்சி குடிச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருந்தோம். இப்ப அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை. பாதுகாப்பா இருக்க நல்ல வீடு இல்ல. இந்தச் சூழலுல என் பேரன் 11-ம் வகுப்புக்குப் போறான். வேலை செய்ய என் உடம்புலயும் தெம்பில்லை. இனி இவனை வளர்த்து ஆளாக்க நான் என்ன பண்ணப்போறேன்னு நெனச்சாலே ராவெல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது’’ எனக் கலங்குகிறார் லெட்சுமி பாட்டி.

சிறுவன் சபரிநாதன், பாட்டி லெட்சுமி
சிறுவன் சபரிநாதன், பாட்டி லெட்சுமி

சபரிநாதனிடம் பேசினோம். "அப்பா, அம்மா ரெண்டு பேருமா எனக்கு இப்ப எங்க பாட்டிதான் இருக்கு. என்னைய நெனச்சு பாட்டி அழுதுட்டே இருக்கு. `அழாத பாட்டி’ன்னாலும், `எப்படி அழாம இருக்குறது... இனி நாம என்ன பண்ணப்போறோம்?’னு கேட்குது. என்னால எதுவும் பேச முடியலை. அப்பா இருந்த வரைக்கும் எந்தக் குறையும் தெரியாம வளர்த்தார். அவர் இல்லாத இந்த சில நாளிலேயே பல சுமைகளைத் தாங்க வேண்டியிருக்கு. நல்லா படிக்கணும்கிற ஆசை இருக்கு. கடன் வேற இருக்கு. எல்லாத்தையும் சரி பண்ணணும். என்ன பண்றதுன்னு தெரியலை. எல்லா வழியும் அடைப்பட்டுக் கிடக்கு" என கண் கலங்கினார்.

களத்தூரைச் சேர்ந்த கார்த்தி என்பவரிடம் பேசினோம். "எங்க பகுதியில ஏ.பி.ஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், கொரோனா லாக்டெளனால் உணவின்றி தவிக்குறவங்களுக்கு தொடர்ந்து சாப்பாடு கொடுத்தாங்க. அதுல நான், சபரிநாதனோட அப்பா நீலகண்டன் எல்லாம் சேர்ந்து சர்வீஸ் செஞ்சோம். யாரும் பட்டினியாக இருக்கக் கூடாதுனு ஒரு நாள் கூட தவறாம சாப்பாடு கொடுக்க வருவார். பல இடங்களுக்குப் போய் சாப்பாடு கொடுத்துட்டு வருவோம். "பசிச்ச வயித்துக்குத்தான் தெரியும் அதோட அருமைனு" நீலகண்டன் சொல்லிக்கிட்டே இருப்பார். இப்போ அவர் மகனை எந்த ஒரு ஆதரவும் இல்லாத நிலையில விட்டுட்டுப் போயிட்டார். அவர் மறைவை எங்களாலேயே தாங்க முடியலை. அவரையே நம்பியிருந்த மகன், வயசான அம்மா இவங்க ரெண்டு பேரோட எதிர்காலம் கேள்விக்குறியாகிருச்சு. அரசு அவங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு