Published:Updated:

புதுக்கோட்டை: கல்குவாரியில் மின்னல் தாக்கி விபத்து; மழைக்கு ஒதுங்கி நின்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!

 மின்னல் தாக்கி சிறுவன் பலி!
மின்னல் தாக்கி சிறுவன் பலி!

வெடி பொருள்கள் வைத்திருந்த குடோனில் மின்னல் தாக்கியதில் அங்கு இருந்த வெடி பொருள்கள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சீத்தப்பட்டியைச் சேர்ந்தவர் சபாபதி. முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் மேட்டுப்பட்டி என்ற இடத்தில் இவருக்குச் சொந்தமான கல் குவாரி ஒன்று செயல்பட்டுவருகிறது. அங்கு பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் வெடிபொருள்கள் வைக்கும் குடோனும் உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கூலித் தொழிலாளர்கள் இந்த கல்குவாரியில் வேலை பார்த்துவருகின்றனர். இந்தநிலையில், அந்தப் பகுதியில் நேற்றிரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் வெடி பொருள்கள் வைக்கும் குடோன் அருகே மழைக்கு ஒதுங்கி நின்றனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக வெடி பொருள்கள் வைத்திருந்த குடோனில் மின்னல் தாக்கியதில் அங்கிருந்த வெடி பொருள்கள் அனைத்தும் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் மழைக்கு ஒதுங்கி நின்ற தொழிலாளர்கள் அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். சிறிது நேரத்தில் அங்கிருந்த கொட்டகை, மரங்களெல்லாம் தீப்பிடித்து எரிந்தன. தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஒவ்வொருவரையாக மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வெடி விபத்தில் காயம்பட்டவர்கள்
வெடி விபத்தில் காயம்பட்டவர்கள்

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த இலுப்பூர் தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீஸார், தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின்னல் தாக்கி வெடி பொருள்கள் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் வீரப்பட்டி, தெற்கு களத்தைச் சேர்ந்த மணிகண்டன் (17) என்ற சிறுவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேரனூரைச் சேர்ந்த கருப்பையா, ஆண்டிச்சாமி, சுரேஷ் உட்பட 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அன்னவாசல் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``வெடிபொருள்கள் வைத்திருந்த குடோனில் மின்னல் தாக்கியதால்தான் வெடிபொருள்கள் வெடித்து தொழிலாளர்கள் காயமடைந்திருக்கின்றனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு