Published:Updated:

புதுக்கோட்டை: கடலுக்குள் மூழ்கி மாயமான மீனவர்! - சோகத்தில் மூழ்கிய கிராமம்

கடலுக்குள் மூழ்கி மாயமான மீனவர்
கடலுக்குள் மூழ்கி மாயமான மீனவர்

வசீகரன் படகின் இன்ஜின் பக்கம் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான் எதிர்பாராதவிதமாக நாட்டுப்படகிலிருந்து தவறி, கடலுக்குள் விழுந்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகேயுள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த தினமணி என்பவரின் நாட்டுப்படகில் தினமணி, அவரின் மகன் வசீகரன் (19), சக மீனவர்களான மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கரையிலிருந்து 16 கடல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வசீகரன் படகின் இன்ஜின் பக்கம் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், எதிர்பாராதவிதமாக நாட்டுப்படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்திருக்கிறார். உடனே அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்துத் தேடியிருக்கிறார்கள். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், உடனே கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

மீனவர்கள் - அமைச்சர்
மீனவர்கள் - அமைச்சர்

உடனே அங்கு வந்த கடலோர காவல் படையினர் சக மீனவர்களின் உதவியோடு, இரண்டு விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் தொடர்ந்து தேடிவருகின்றனர். மீனவர் கடலுக்கு விழுந்து மூழ்கிய சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடலில் மூழ்கிய வசீகரனின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் அளித்ததோடு, ரூ.50,000 நிவாரணமும் வழங்கினார். தொடர்ந்து இது குறித்துப் பேசிய அமைச்சர், ``கடலுக்குள் விழுந்து மாயமான மீனவரைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். கூடுதல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதோடு, தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் அனுப்பவும் அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு