Published:Updated:

புதுக்கோட்டை : "என் மனைவி இறந்து இன்னையோட 19 நாள் ஆகுது !"- எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு.

எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு
எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு

கொரோனாவால என் மனைவி இறந்து இன்னையோட 19 நாள் ஆகுது.ஒரு உயிர் போனபோது தான் அந்த நோயோட கொடுமை தெரிஞ்சது. நான் இழந்த மாதிரி வேறு யாரையும் யாரும் இழக்கக்கூடாது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர ஜூன் 7ம் தேதி வரையிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும், விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள் பலரும் டூவிலரில் காரணமின்றி வலம்வருவதோடு, ஊரடங்கை மீறி ஒன்றாகச் சேர்ந்து கிரிக்கெட், சூதாட்டம் ஆடுவது போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் போலீஸார் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பினாலும் இளைஞர்கள் பலரும் தொடர்ந்து விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து வைத்த கீரனூர் எஸ்.ஐ இளையராஜா அவர்களிடம் சுமார் 5 நிமிடங்களுக்கும் மேலாக, மிகவும் பொறுமையாகவும், விவரமாகவும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். கொரோனாவிற்கு என் மனைவியைப் பறிகொடுத்துவிட்டேன், உங்கள் யாருக்கும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்று பேசி அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார். எஸ்.ஐ பேசியதை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். எஸ்.ஐயின் விழிப்புணர்வு வீடியோவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அப்போது இளைஞர்களிடம் பேசிய எஸ்.ஐ, "கொரோனா விளையாட்டு வீரர், வசதியானவர், எளிமையானவன், நல்லவன் என்று எல்லாம் பார்க்காது. எல்லாரையும் பாதிக்கும். கிராமத்துல எல்லாம் பார்த்திருப்பீங்க, 10வருஷத்துக்கு முன்னாடி எல்லாம், யாரையாவது வெறிநாய் கடிக்கும், வெறி ஏறி சாவாங்க. இறந்தவரின் உடலை யாரும் தொடமா குச்சியால் அப்படியே தூக்கி எடுத்துக்கிட்டு போய், ஒதுக்குப்புறமா அடக்கம் பண்ணுவாங்க. அதற்கப்புறம் கொடுமையானது இந்த கொரோனா. மற்ற வியாதி வந்து இறந்தால், கூட எல்லா சடங்குகளையும் அந்தக் குடும்பத்தினர் செய்யமுடியும்.

எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு
எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு

கொரோனா வந்து இறந்தால் அந்த சடங்குகளைக்கூட ஏன் கடைசியாக முகத்தையே பார்க்க முடியாத சூழல்தான் இருக்கு. அப்படி எல்லாம் நடக்கக் கூடாதுங்கிறதுக்காகத் தான் நாங்க இதை சொல்லிக்கிட்டு இருக்கோம். இளைஞர்கள் நீங்க எல்லாருமே எங்களுக்கு ரொம்ப முக்கியம். எல்லாரை மாதிரியும் ஏதோ அட்வைஸ் பண்ணறதுக்காக சொல்லலை. என்னோட அனுபவத்துல, நான் இழந்ததால சொல்றேன். கொரோனாவால என் மனைவி இறந்து இன்னையோட 19 நாள் ஆகுது. ஒரு உயிர் போனபின் தான் அந்த நோயோட கொடுமை தெரிஞ்சது. நான் இழந்த மாதிரி வேறு யாரையும் யாரும் இழக்கக்கூடாது. குறிப்பா நீங்க யாரும் உங்க குடும்பத்தினரை இழக்கக்கூடாது. அதனால தான் விரட்டி, விரட்டி இளைஞர்கள் உங்ககிட்ட பேசிக்கிட்டு வர்றேன்.

ஒரு குடும்பத்துல ஒரு உயிர் போச்சுன்னா, 20வருஷம் பின் தங்கிப் போயிடும். உங்க குடும்பத்துக்கு, உங்க நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு எங்களுக்கு முக்கியம். பணம் காசு சம்பாதிச்சி வீட்டுக்கு கொடுக்கலாம். ஆனால், நோயைக் கொண்டுபோய் கொடுக்கலாமா, அதனால தான் சொல்றேன், விளையாட்டை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு பாதுகாப்பாக இருக்கண்ணும் " என எஸ்.ஐ பேசுகிறார். சமூக இடைவெளிவிட்டு அப்படியே அசையாமல் எஸ்.ஐயின் பேச்சை கேட்டுக்கொள்ளும் இளைஞர்கள் அங்கேயே இனி விளையாட மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.

எஸ்.ஐ இளையராஜா
எஸ்.ஐ இளையராஜா

எஸ்.ஐ இளையராஜாவிடம் பேசினோம்,

"கொரோனா நம் குடும்பத்துக்குள் வந்த பிறகுதான் பலரும் விழிப்புணர்வு அடைகிறோம். இப்போது உள்ள சூழலில் நோய்த் தொற்று குடும்ப உறுப்பினர்களுக்கு வருவதற்கு முன்னதாகவே விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய நேரம் இது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. உடலை எரிக்கும் இடங்கள் நிரம்பி வழிகிறது. தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, பழைய நிலைக்கு வரமுடியும். என்னால் முடிந்த விழிப்புணர்வுகளை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறேன். மக்களும் ரொம்ப ஆர்வமாகவே என் பேச்சைக் கேட்டு நடக்கின்றனர்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு