Published:Updated:

புதுக்கோட்டை:`தேர்தல் முடிந்ததும் ஆரம்பிக்கிறாங்க!’-அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கடும் எதிர்ப்பு

அடுக்குமாடிக் குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு
News
அடுக்குமாடிக் குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு

``புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் நரிமேட்டில் 2,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் கிடக்கின்றன. அவற்றில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம். ஆனால்...”

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனூர் ஊராட்சிக்குட்பட்ட வடசேரிப்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வடசேரிப்பட்டி கிராமத்துக்குட்பட்ட 11 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் இருக்கிறது. இங்கு கடந்த 2018-ல் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க திட்டம் தயார் செய்யப்பட்டது. இதற்காக, ரூ.44 கோடி செலவில் 528 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட தனியார் நிறுவனம் ஒப்பத்தம் எடுத்து ஏப்ரல் இறுதியில் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில், இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டக் கூடாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே கிராம மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையேதான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒப்பந்ததாரர் தரப்பு ஜேசிபி, லாரி இயந்திரங்களுடன் வந்து கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கினர். அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள், வாகனங்களைச் சிறைப்பிடித்தும், பள்ளங்களில் இறங்கியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து போலீஸாருக்குப் புகார் கொடுக்க, அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான போலீஸார் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்து அப்புறப்படுத்தினர்.

இதில், போலீஸாருக்கும் பொதுமக்களுக்குடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், தற்காலிகமாகக் கட்டட வேலை நிறுத்தப்பட்டது. ஆனாலும், பொதுமக்கள் பலரும் இரவு 10 மணி வரையிலும் அங்கேயே காத்திருந்தனர்.

புதுக்கோட்டை:`தேர்தல் முடிந்ததும் ஆரம்பிக்கிறாங்க!’-அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கடும் எதிர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு கிராம மக்களே ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் என்ன, மக்களின் கோரிக்கை என்னவாக இருக்கிறது என்பதை அறிய வடசேரிப்பட்டிக்குச் சென்றோம்.

மூதாட்டி பாப்பாத்தியிடம் பேசியபோது, ``ரொம்ப வருஷமா குடிக்க நல்ல தண்ணீர் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். அடிப்படை வசதிகள்கூட எங்க பகுதியில இந்த அரசாங்கம் செய்து கொடுக்கலை. ஆடு, மாடுகளுக்கு முடியாமல் போச்சுன்னா அதுக்கு வைத்தியம் பார்க்க ஒரு மாட்டு ஆஸ்பதிரி (கால்நடை மருத்துவமனை) இல்லை. படிக்கிற பிள்ளைங்களுக்கு சரியான பள்ளிக்கூடம் இல்லை. பத்துக்கு மேல படிக்கணும்னா 5 கி.மீ தூரம் இருக்குற பள்ளிக்கூடத்துக்கு பஸ்ல பிள்ளைங்க தொங்கிக்கிட்டு போக வேண்டிய நிலைமை இருக்கு. பன்னண்டாம் வகுப்பு வரை ஒரு பள்ளிக்கூடம் கட்டிக்கொடுங்கன்னு ரொம்ப வருஷமா கேட்கிறோம்.

இப்போ நூறு நாள் வேலைக்கு போறதால, நார்த்தாமலை பேங்குக்கு அடிக்கடி போயிட்டு வர்ற மாதிரி இருக்கு. இந்த இடத்துல ஒரு பேங்க் கட்டுக்கொடுக்கலாம். உடம்புக்கு முடியலைன்னா ஓடணும். ஒரு ஆஸ்பத்திரி கட்டலாம். இப்படி எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரலை. ஆனா, இங்கே வீடுகள் கட்டத் துடிக்கிறாங்க. எங்க உசுரே போனாலும், எங்களுக்கு எதுக்குமோ ஒதவாத இந்தக் கட்டடத்தை இங்கே கட்டவிட மாட்டோம்" என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வடசேரிப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் இது பற்றிக் கேட்டபோது, ``இங்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வந்தால், இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் நாங்கள் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். பல இடங்களில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட வனத்துறை எதிர்ப்பு தெரிவிக்கிறது. கழிவுநீர் வனத்துறை நடவு செய்துள்ள யூக்கலிப்டஸ் மரங்களுக்குள் பாய்ந்தால், அந்த மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று காரணம் கூறுகிறது. யூக்கலிப்டஸ் மரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும்போது, சாப்பாட்டுக்குத் தேவையான அரிசியை உருவாக்கும் நாங்கள் இதைத் தடுப்பது சரிதான்.

இப்போது உள்ள போஸ்ட் ஆபீஸ் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது. பேங்க், பள்ளி, கல்லூரி என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் 10 கி.மீ தூரம் செல்லணும். புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் நரிமேட்டில் இரண்டாயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் கிடக்கின்றன. அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி பணியை நிறுத்தி வைத்திருக்கின்றனர். பணி ஆரம்பித்தால் எங்கள் போராட்டம் கண்டிப்பாகத் தொடரும்" என்றார்.

புதுக்கோட்டை:`தேர்தல் முடிந்ததும் ஆரம்பிக்கிறாங்க!’-அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கடும் எதிர்ப்பு

இது பற்றிப் பேசிய கிராம மக்கள் சிலர், ``அமைச்சர் விஜயபாஸ்கர்தான் எங்கள் பகுதியில் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கொண்டுவரக் காரணம். அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்டு வந்து எங்கள் நிலங்களைப் பாழாக்கப் பார்க்கிறார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அவருடைய குவாரியிலிருந்துதான் அனைத்துக் கட்டுமானப் பொருள்களும் வரும். அவருடைய குவாரி தொழில் மேம்படும். ஆனால், எங்களின் நிலை கேள்விக்குறிதான். தேர்தலுக்கு முன்பு வரையிலும் இந்தத் திட்டம் இப்போதைக்கு செயல்படுத்தப்படாது என்று கூறியவர்கள், தேர்தல் முடிந்த சில தினங்களிலேயே வேலையை ஆரம்பித்துவிட்டனர். இங்கு அரசு மேல் நிலைப்பள்ளியோ, அரசு மருத்துவமனையோ அல்லது எங்கள் பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையிலான அரசுத் திட்டத்தையோ செயல்படுத்த விடுவோம். உயிரே போனாலும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டவிட மாட்டோம்" என்றனர்.

இலுப்பூர் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணியிடம் கேட்டபோது, " அரசு விதிமுறைகளின்படி டெண்டர் விடப்பட்டு பணி தொடங்க இருந்தது. ஆனால், கிராம மக்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராடியதால், பணிகள் நிறுத்தப்பட்டன. மக்களிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டிருக்கிறோம். தொடர்ந்து மறுபடியும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும். அதுவரையிலும் பணி ஆரம்பிக்கப்படாது" என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினரிடம் கேட்டபோது, ``கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அமைச்சர் செயல்பட்டுவருகிறார். ஆனால், அங்குள்ள ஒரு சிலர் தேவையில்லாமல் அமைச்சர் மீது அவதூறு பரப்புகின்றனர்" என்று முடித்துக்கொண்டனர்.