Published:Updated:

`வீதி முழுக்க ஒலி பெருக்கிகள்... வீடியோவில் பார்த்து எச்சரிக்கை!’ - சேலம் காவல்துறையின் லாக் டெளன்

ஒலிப் பெருக்கி
ஒலிப் பெருக்கி ( எம். விஜயகுமார் )

`காவல்துறையினர் தண்டித்திருந்தால்கூட இந்தக் கட்டுப்பாட்டை பின்பற்றி இருக்க மாட்டோம். ஆனால், விழிப்புணர்வு செய்ததால் வெளியே செல்லாமல் தனித்திருக்கிறோம். ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.' - பொதுமக்கள்

வீதி முழுக்க கூம்பு ஒலி பெருக்கிகள் கட்டப்பட்டிருக்கின்றன. இது ஏதோ பங்குனி மாத மாரியம்மன் திருவிழாவில் எல்.ஆர். ஈஸ்வரின் கந்தர்வக் குரலில் பரவச மூட்டும் பக்தி பாடல் கேட்பதற்காகக் கட்டப்பட்டவை அல்ல. கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதைத் தடுக்க சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல்துறையினரால் கட்டப்பட்டவை.

காவல்நிலையம்
காவல்நிலையம்

இந்த ஆடியோ மூலம் தினமும் பகல் நேரத்தில் கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தகவல்களைக் கொடுப்பதும், இந்த லாக் டெளன் காலத்தில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், தெருக்களில் தேவையில்லாமல் மக்கள் கூடுவதை வீடியோவில் பார்த்து எச்சரிக்கை செய்தும் வருகிறார்கள். மொத்தத்தில் ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் லாக் டவுனை 100 சதவிகிதம் முறையாகவும் திறம்படவும் செயல்படுத்தி வருவதாக அனைத்து தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள்.

இதுபற்றி அப்பகுதியைச் சேர்ந்த விஜய்பாரதி, ''ஆட்டையாம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் தறித் தொழிலாளிகள், அமைப்புச்சாரா தினக்கூலித் தொழிலாளர்கள், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கிறோம். எங்களுக்கு கொரோனா நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு ஆரம்பத்தில் சுத்தமாக இல்லாமல் இருந்தது. முதல் ஓரிரு நாள்கள் அசாதாரண சூழ்நிலையை அறிந்துகொள்ளாமல் சாதாரணமாகக் கடைகளுக்கு வெளியே சென்று வந்தோம்.

விஜய்பாரதி
விஜய்பாரதி

ஆனால், ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் பஸ் நிலையம், மார்க்கெட், கோயில்கள், தெருக்களில் திருவிழாவைப்போல ரேடியோகளைக் கட்டி அதில் பகல் முழுவதும் கொரோனா எப்படிப் பரவுகிறது. அதைத் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். வெளியே சுற்றினால் வரும் ஆபத்துகளையும் சொல்லி எங்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.

இதன் மூலம் கொரோனா வைரஸின் கொடூரத்தையும் ஊரடங்கின் பயன்களையும், நம்மை அல்லும் பகலும் அயராது பாதுகாத்து வரும் காவல்துறையின் சேவைகளையும் உணர்ந்தோம். வீட்டில் தனித்து இருப்பதோடு அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி வருகிறோம். காவல்துறையினர் தண்டித்திருந்தால்கூட இந்தக் கட்டுப்பாட்டை பின்பற்றி இருக்க மாட்டோம். ஆனால், விழிப்புணர்வு செய்ததால் வெளியே செல்லாமல் தனித்திருக்கிறோம். ஆட்டையாம்பட்டி காவல்துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.

இன்ஸ்பெக்டர் குலசேகரன்
இன்ஸ்பெக்டர் குலசேகரன்

இதுபற்றி ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் குலசேகரனிடம் கேட்டதற்கு, ''அரசின் உத்தரவுப்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதல்படியும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்க காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலும் தொழிலாளர்களே இருக்கிறார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமான காரியம். அதனால் மக்களை அச்சுறுத்துவதைவிட விழிப்புணர்வு ஏற்படுத்தினால் 90 விழுக்காடு ஊரடங்கைச் சிறப்பாக நடைமுறைப்படுத்த முடியும் என்று தீர்மானித்தோம்.

அதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலி பெருக்கிகளைக் கட்டி கொரோனா பற்றிய விழிப்புணர்வுகளைச் செய்தோம். மக்கள் தாங்களாகவே உணர்ந்து வெளியே வருவதைக் குறைத்துக் கொண்டார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக வரும் மக்களும் சமூக இளைவெளியைப் பின்பற்றி எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு