Published:Updated:

சங்கரன்கோவில்: மது போதையில் போலீஸைத் தாக்கிவிட்டுத் தப்பிய நபர்; வைரலான வீடியோவால் பரபரப்பு!

விசாரணை நடத்தும் போலீஸ்
விசாரணை நடத்தும் போலீஸ்

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்து, போலீஸ் ஒருவர் விசாரணைக்காகச் சென்ற இடத்தில் போதை நபரால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.

விவசாயிகள் நிறைந்த இந்தப் பகுதியில், இரு தினங்களுக்கு முன்பு அசோகன் என்பவர் மது போதையில் சாலையில் சென்றவர்களை அவதூறாகப் பேசி தொல்லை கொடுத்திருக்கிறார். அத்துடன் கையில் கிடைத்த பொருள்களால் பொதுமக்களைத் தாக்க வந்திருக்கிறார்.

காவலருடன் மல்லுக்கட்டும் அசோகன்
காவலருடன் மல்லுக்கட்டும் அசோகன்

மது போதை நபரால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சிய நிலைமை ஏற்பட்டதால், அந்த கிராமத்தைச் சேர்ந்த அப்பாத்துரை என்பவர் இது குறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்திருக்கிறார். இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகப் புகார் அளித்தவரிடம் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த சீலாத்திகுளம் கிராமம், சின்ன கோவிலான்குளம் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், அங்கிருந்து சென்ற பாலகிருஷ்ணன் என்ற தலைமைக் காவலர், புகார் அளித்த அப்பாத்துரையை அழைத்து நடந்த சம்பவம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்.

போலீஸ் விசாரணையின்போது அசோகன்
போலீஸ் விசாரணையின்போது அசோகன்

அப்போது மது போதையில் அங்கு வந்த அசோகன், தன்மீது புகார் அளித்தவர்களை ஆபாசமாகப் பேசினார். அத்துடன் விசாரணை நடத்த வந்திருந்த காவலர் பாலகிருஷ்ணனைக் காது கூசும் அளவுக்கு ஆபாச வார்த்தையால் பேசியதுடன், சாக்கடையை அள்ளி அவர்மீது வீசினார்.

காவலர் என்றும் பாராமல் அசோகன் திடீரெனத் தாக்குதல் நடத்தியதுடன், கற்களையும் எடுத்து வீசினார். பின்னர் காவலர் பாலகிருஷ்ணனின் ஹெல்மெட்டை எடுத்து அவரைத் தாக்கினார். ஹெல்மெட்டைத் தரையில் அடித்து உடைத்ததுடன், செல்போனையும் பறித்து தரையில் வீசி உடைத்தார்.

ஹெல்மெட்டுடன் அசோகன்
ஹெல்மெட்டுடன் அசோகன்

மது போதையில் அசோகனின் இந்தச் செயல்களால் அச்சமடைந்த காவலர் பாலகிருஷ்ணன், இது பற்றி உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். இது தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பாதுரை அளித்த புகாரில், அசோகன்மீது அவதூறாகப் பேசுதல் (294), தாக்குதல் நடத்துதல் (352) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தலைமைக் காவலர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், அசோகன் மீது கொடுங்காயம் ஏற்படும் அளவுக்குத் தாக்குதல் நடத்துதல் (506/(1)), அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (353) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போலீஸ் மீது தாக்குதல்
போலீஸ் மீது தாக்குதல்

மது போதை காரணமாக தலைமைக் காவலரைத் தாக்கிய அசோகனைப் பிடிக்க முயன்றபோது, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அதனால் அவர்மீது வழக்கு பதிவு செய்த சின்ன கோவிலான்குளம் போலீஸார், அவரைத் தேடிவருகிறார்கள். இதற்கிடையே, காவலரை அசோகன் தாக்கிய சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாகப் பதிவு செய்தனர். அது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு