Published:Updated:

`800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி!’ -கூட்டத்தை தவிர்க்க வீடுகளுக்கே கொண்டு சேர்த்த தம்பதி

ஒக்கூர் கிராமத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பி வைத்தபோது
ஒக்கூர் கிராமத்திற்கு அரிசி மூடைகள் அனுப்பி வைத்தபோது

எல்லா இடங்களுக்கும் எங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் எங்களுடைய கிராமத்திற்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் அதிர்ந்துபோய்க் கிடக்கின்றன. வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சீனாவில் தொடங்கிய பாதிப்பு தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது.

சேக்கப்பன் ஐயா - மனைவி நாகம்மை ஆச்சியுடன்
சேக்கப்பன் ஐயா - மனைவி நாகம்மை ஆச்சியுடன்

இந்தியாவிலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல கிராமங்கள் கொரோனாக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் '144' தடை உத்தரவால் வேலைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் உணவுக்கு தவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கிராமத்தில் உள்ள 800 குடும்பத்தாரின் பசியை போக்கும் வகையில் ஒவ்வொரு ரேசன் கார்டு அட்டைக்கும் தலா 10 கிலோ அரிசி வழங்கி பலரது பசியை போக்கிவருகிறார் ஒக்கூர் சேக்கப்பன் என்பவர்.

இது குறித்து சேக்கப்பன் அவர்களிடம் பேசினோம், ``சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமம் தான் எங்கள் சொந்த கிராமம். பெட்ரோல் பங்க் உள்ளிட்ட தொழில் காரணமாக மதுரையில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறேன். என்னுடைய பிள்ளைகள் அமெரிக்காவில் பணி செய்கின்றனர். எங்கள் குடும்பத்தினர் பொது சேவைக்கு துணை நிற்பார்கள்.

பூஜை அறையில் அரிசி மூடை
பூஜை அறையில் அரிசி மூடை

இந்நிலையில் நாட்டில் கொரோனோவின் தாண்டவம் எல்லை மீறி நடக்கிறது. இதற்கு நோயில் இருந்து பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஆனாலும் ஏழை, எளிய மக்கள் நடுத்தர குடும்பத்தினர் உணவுக்கு வழியில்லாமல் பட்டினி, பசியுடன் இருந்து வருகின்றனர். எங்களுடைய கிராமத்திலும் பல குடும்பத்தின் நிலை இது தான். எல்லா இடங்களுக்கும் எங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் எங்களுடைய கிராமத்திற்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் அரிசி வழங்கலாம் என்று திட்டம் போட்டோம். அதற்காக அரிசி ஏற்பாடு செய்து அதிகாரிகளிடமும் அனுமதி பெற்றோம். இதன் அடிப்படையில் இன்று எங்கள் கிராமத்தில் 600 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி கொண்ட பையை வழங்கினோம். மீதம் வழங்கப்படாத சுமார் 200 குடும்பத்திற்கு நாளை அரசி பைகள் வழங்க உள்ளோம். கூட்டம் கூடிவிடக்கூடாது என்று நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கினோம். இதில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து களப்பணி செய்தனர். இந்த பணி நாளையும் தொடர உள்ளது. மூடைகளில் தனித்திரு, விழித்திரு, வீட்டில் இரு கொரோனோவை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு வசனங்களையும் வைத்துள்ளோம்.

சேக்கப்பன் - நாகம்மை ஆச்சிக்கு பாராட்டு
சேக்கப்பன் - நாகம்மை ஆச்சிக்கு பாராட்டு

இந்த திட்டம் நல்ல படியாக முடிந்த பின் எண்ணெய் மற்றும் பருப்புகள் வழங்கலாம் என்ற திட்டம் யோசனையும் உள்ளது. இந்த இக்கட்டான சமயத்தில் நாங்கள் செய்யும் சிறிய உதவி எங்கள் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கலாம். சாதி, மத பாகுபாடின்றி இந்த செயலை செய்கிறோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு