Published:Updated:

`மாசி மாத விழாவை முன்னிட்டு மாநில அளவிலான PUBG; லட்சத்தில் பரிசுத் தொகை!' - சிவகங்கை சர்ச்சை

பப்ஜி
பப்ஜி

பப்ஜி விளையாட்டு’ திருவிழாவின் ஒரு பகுதியாக மாறி ரூ.1,70,000 பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி என்ற மொபைல் விளையாட்டுதான் தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் டிரெண்ட். இதில் சிலர் அளவைக் கடந்து மூழ்கி வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்கும் வந்துள்ளனர்.

 பப்ஜி
பப்ஜி

இந்த நிலையில், இந்த செல்போன் விளையாட்டுப் போட்டியை ஊக்குவிக்கும் விதமாகத் திருவிழாவில் பப்ஜி கேம் விளையாடி வெற்றிபெறும் நபருக்கு முதல் பரிசு ஒரு லட்ச ரூபாயும் 2-வது பரிசாக 50,000 ரூபாயும், 3-வது பரிசு பெறும் நபருக்கு 20,000 ரூபாயும் வழங்க உள்ளதாக போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் கல்லலில் உள்ள தனியார் மொபைல் கடை இப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாசி மாத தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஒவ்வொரு போட்டி இங்கு நடைபெறும்.

விதிமுறைகள்
விதிமுறைகள்

இந்த வருடம் வித்தியாசமாக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவர வேண்டும் என பப்ஜி கேம் மாநில அளவில் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தகவல் இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் சமூக ஆர்வலர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பப்ஜி கேம் விளையாட முன்பதிவு செய்து வருகின்றனர். வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி, மருது சகோதரர்கள் உள்ளிட்ட பல்வேறு வீரம் சார்ந்த நபர்கள் களமாடிய ஊரில் இப்படி ஒரு விளையாட்டுப் போட்டியை அறிவித்தது கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து காரைக்குடி பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..., ``இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் காலம் மோசமாக மாறிவருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமற்ற போட்டியைத் தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பொதுமக்களும், திருவிழா என்றால் பாரம்பர்ய விளையாட்டுப் போட்டிகளைக் காணலாம் என்ற எண்ணம் இருக்கும். இனி வரும் காலங்களில் திருவிழா காலங்களில் கூட அது போன்ற விளையாட்டுகளைக் காண்பது அரிதாகி விடும்போல என வேதனை தெரிவித்தனர்.

பப்ஜி போட்டி
பப்ஜி போட்டி

போஸ்டரில் குறிப்பிட்டிருந்த போன் நம்பர் ஒன்றுக்குத் தொடர்புகொண்டு பேசினோம்,``என் பெயர் ராஜா. இது ஒரு குழு விளையாட்டுப் போட்டி ஒவ்வோர் அணிக்கும் 4 நபர்கள் கலந்துகொள்வார்கள். மொத்தம் 25 லீக் நடைபெறும். இதில் 2 லீக்கிற்கு மட்டும்தான் ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. சுமார் 200 நபர்கள் ரிஜிஸ்டர் செய்துள்ளனர். சென்னை, ஆந்திரா, கேரளா, மதுரை, சிவகங்கை என்று எல்லா இடங்களிலும் இருந்து தொடர்ந்து ரிஜிஸ்டர் செய்து வருகின்றனர். எங்கள் ஊரில் இந்த பப்ஜி போட்டி மட்டுமல்ல மற்ற வீர விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. விழிப்புணர்வு நிகழ்ச்சியாகத்தான் இந்த போட்டியைக் கருதுகிறோம்.

ஆன்லைனில் பப்ஜி விளையாடும் நபர்கள்தான் அதிகளவு ஆன்லைனில் பொருள்கள் வாங்குகின்றனர். அவர்களிடம் போட்டி ஆரம்பிக்கும்போது சில்லறை வணிகம் செய்யும் நேரடி விற்பனையாளர்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று அறிவுறுத்த உள்ளோம். இதனால் சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறுவார்கள். இதன் முக்கிய சாராம்சமே இதுதான். இது நல்ல நோக்கத்துக்காக செய்யப்படுகிறது" என்றார்.

பின் செல்ல