Published:Updated:

ஆசியம்மாள்: யார் இவர்..? உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி-யான பின்னணி

உளவுத்துறை ஐ.ஜி ஆசியம்மாள்
News
உளவுத்துறை ஐ.ஜி ஆசியம்மாள்

கடந்த ஏழு மாதங்களாக, தமிழக உளவுத்துறையின் டி.ஜ.ஜி-யாகப் பதவியில் இருந்தார் ஆசியம்மாள். அவருக்கு ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு வரவே, அதே உளவுத்துறையில் காலியாக இருந்த ஐ.ஜி பதவிக்கு நியமிக்கப்பட்டார்

ஆசியம்மாள்... தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி-யாக நியமனம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்கு முன்பு, இதே உளவுத்துறையின் கூடுதல் எஸ்.பி-யாக இரண்டே முக்கால் வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர் ஆசியம்மாள்.

பொதுவாக, உளவுத்துறையில் இருப்பவர்கள் யாருடனும் அதிகம் பேச மாட்டார்கள். மௌனமாக இருப்பார்கள். அவர்களுக்கு சோர்ஸ்கள் தமிழகம் முழுக்க உண்டு. தமிழகத்துக்கு வெளியே, பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். இரவு பகல் எந்த நேரத்திலும் அவர்களிடமிருந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். அந்தத் தகவல்கள் உண்மைதானா என்று சீர்தூக்கிப் பார்த்து உயரதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டும். தமிழக அரசியல் பிரமுகர்களின் அன்றாட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை
Photo: Vikatan

ரௌடியிம், சாதி மத மோதல் வருவதற்கு முன்பே, அதை மோப்பம் பிடித்து போலீஸ் மேலிடத்துக்குச் சொல்லி கலவரம் வராமல் தடுப்பது உளவுத்துறையின் பணி. தீவிரவாதிகள் நடமாட்டங்களை நவீன டெக்னிக்குகளுடன் கண்காணித்துவருவார்கள். மத்திய அரசின் உள்துறை தரப்பிலிருந்து தினம் தினம் அலர்ட் மெஸ்சேஜ்கள் வந்தவண்ணம் இருக்கும். அவற்றை விசாரித்து உண்மை என்று தெரிந்தால், தமிழக போலீஸ் மேலிடத்துக்குத் தெரிவித்து உஷார்படுத்துவதும் உளவுத்துறையின் வேலை. தற்போது தமிழக உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி பதவியில் டேவிட்சன் ஆசீர்வாதம் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், ஐ.ஜி அந்தஸ்தில் ஆசியம்மாள் செயல்படுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த ஏழு மாதங்களாக, தமிழக உளவுத்துறையின் டி.ஜ.ஜி-யாகப் பதவியில் இருந்தார் ஆசியம்மாள். அவருக்கு ஐ.ஜி-யாகப் பதவி உயர்வு வரவே, அதே உளவுத்துறையில் காலியாக இருந்த ஐ.ஜி பதவிக்கு நியமிக்கப்பட்டார். தமிழக போலீஸ்துறையில் 25-வது வருடத்தில் காலடி எடுத்துவைத்திருக்கிறார்.

1997-ம் வருடம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, வரதட்சணை ஒழிப்புத்துறை டி.எஸ்.பி-களாக 16 பேர்களைத் தேர்தெடுத்து போலீஸ் துறையில் நியமித்தார். அவர்களில் ஒருவர்தான், ஆசியம்மாள். அப்போது வந்தவர்களில் ஒன்பது பேர் தற்போது ஐ.ஜி-யாக உள்ளனர். மற்ற ஆறு பேர் வெவ்வேறு போலீஸ் பதவிகளில் இருக்கிறார்கள் (ஒருவர் இறந்துவிட்டார்). 2004-ம் வருட ஐ.பி.எஸ் பேட்ஜைச் சேர்ந்தவர் ஆசியம்மாள். போலீஸின் பல்வேறு பதவிகளில் இருந்துவிட்டு, கடைசியாகத்தான் உளவுத்துறைக்கு வந்தார் ஆசியம்மாள்!

பெரும்பாலும், பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட மாட்டார். பொதுவாகவே, வெளி உலகுக்கு முகத்தைக் காட்ட விரும்ப மாட்டார். புகைப்படம் என்றால் தள்ளிப்போய்விடுவார். இப்படிப்பட்ட கேரக்டர் உடையவர் ஆசியம்மாள்.

ஆசியம்மாள்
ஆசியம்மாள்

அவரைப் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறும்போது, ''எந்த ஒரு சிக்கலான விவகாரமானாலும் தீர விசாரித்து உண்மையை மட்டுமே சொல்வார். தவறு நடந்திருந்தால், வெட்டு ஒன்று, துண்டு ஒன்று என்று படாரென்று பேசிவிடுவார்'' என்றார்.

வரதட்சணைப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருந்தபோது, குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் நிறைய வருமாம்! கணவன் - மனைவி, இரு தரப்பு குடும்பத்தினரை அழைத்து பிரச்னையைப் பேசித் தீர்த்து குடும்பம் பிரிந்து போகாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தினாராம்.

திருவொற்றியூரில் உதவி கமிஷனராக பணியாற்றியபோது, `கேட்’ என்கிற அடைமொழியுடன்கூடிய ரௌடி ஒருவரைத் தெறிக்கவிட்டு பிடித்து உள்ளே தள்ளினாராம். அந்தக் காலகட்டத்தில், வடசென்னையில் மாணவர்கள் தவறான பழக்க வழக்கங்களில் சிக்கி திசைமாறிப்போவதை அறிந்த போலீஸ் கமிஷனர், `பாய்ஸ் கிளப்’ என்கிற அமைப்பை உருவாக்கினாராம். திருவொற்றியூர் ஏரியாவில் அந்த கிளப்பை முதன்முதலில் ஆரம்பித்து, திறம்பட நடத்தியவர் ஆசியம்மாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு, மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி-யாகப் பணியாற்றினார். அப்போது, வெளிநாட்டு பிரமுகர் ஒருவர் அநாதை இல்லம் என்கிற பெயரில் ஒன்றை ஆரம்பித்து சிறார் பாலியல் வன்முறை செய்துவந்தார். அவரிடமிருந்து தப்பிய ஒரு சிறுவன் கொடுத்த தகவலின் பேரில், அந்தப் பிரமுகரைக் கைதுசெய்தவர் ஆசியம்மாள். அந்தக் காலகட்டத்தில், அந்தப் பிரமுகரின் பாலியல் தொந்தரவுகள் பற்றி மீடியாக்களில் கதை கதையாக வெளியாகின. ஆசியம்மாளும் வேறு ஊருக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டார். சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டு வெளியே திரும்பிய அதே பிரமுகர், ஆபாசப் படங்களை எடுத்த விவகாரத்தில் மீண்டும் கைதாகி உள்ளே சென்றாராம்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், உணவுக் கடத்தல் தடுப்பு சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி-யாக நான்கரை வருடங்கள் பணியில் இருந்தார் ஆசியம்மாள். ரேஷன் பொருள்கள் கடத்தலில் கொடிகட்டப் பறந்த பிரபல புள்ளிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். உணவுப்பொருள் கிடங்கிலிருந்தே நேரிடையாகப் பொருள்களைக் கடத்திச் செல்வார்களாம். ஆங்காங்கே பொறிவைத்துப் பிடித்து, கடத்தல்புள்ளிகளை விரட்டிப் பிடித்ததாம் ஆசியம்மாள் டீம்.

ரேஷன் பொருள் கடத்தல்
ரேஷன் பொருள் கடத்தல்
மாதிரிப் படம்

கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ரேஷன் கடை ஊழியர்கள் பலரையும் கைதுசெய்தாராம். எட்டு டயர் டாரஸ் வண்டியில் ரேஷன் அரிசியைக் கடத்துவதில் `பவானிசாகர்’ என்கிற அடைமொழியைக்கொண்ட இரண்டு எழுத்து பிரமுகர் முக்கியமானவர். `திண்டிவனம்’ என்கிற பெயரை அடைமொழியாகக்கொண்ட இன்னொருவர். இப்படி பவர் சென்ட்டர்களாக நடமாடிய பலரையும் கைதுசெய்து உள்ளே தள்ளியவர் ஆசியம்மாள். அகில இந்திய அளவில் ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுப்பதில் நவீன டெக்னிக்குகளை இவர் கையாண்டவிதத்தைப் பார்த்த மத்திய அரசு, தொடர்ந்து பல வருடங்கள் முதலிடம் வழங்கி கௌரவித்தது. மற்ற வட மாநில காவல்துறையினர் இங்கே வந்து நவீன டெக்னிக்குகளை கற்றுக்கொண்டு போனார்களாம்.

தமிழக போலீஸின் லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி-யாக இரண்டே முக்கால் வருடம் பணிபுரிந்தவர். சி.பி.சி.ஐ.டி., டெக்னிக்கல் பிரிவு... என்று பல்வேறு போலீஸ் பிரிவுகளில் திறம்படப் பணியாற்றிய அனுபவம்மிக்கவர் ஆசியம்மாள்.

சக போலீஸ் அதிகாரிகளிடம் ஆசியம்மாள் பேசும்போது குறிப்பிடுகிற விஷயம் என்னவென்றால்...

``சட்டம், ஒழுங்குப் பிரச்னை என்று வந்தால், நாம் யாரென்று தெரியாத முகத்துடன் சென்றால்தான், நடுநிலையுடன் அணுக முடியும். முன்பே யாருக்காவது தெரிந்த முகமாக இருந்தால், நமது ஜட்ஜ்மென்ட் வித்தியாசப்படும். அதற்கு இடம் கொடுக்க மாட்டேன். மக்களுக்கும் போலீஸுக்கும் சற்று தூரம் இருந்தால்தான் நல்லது. அப்போதுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும். போலீஸார் காசு வாங்கினால் அங்கே நியாயம் செத்துப்போய்விடும். கடவுளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும். நம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. சைலன்ட்டாகக் கொடுத்த வேலையைப் பார்த்துவிட்டுப் போகணும். இதுதான் என்னோட பாணி...''

ஆசியம்மாள்
ஆசியம்மாள்

ஆசியம்மாளை உற்சாகப்படுத்தி போலீஸ் பணியில் சேர பின்னணியில் இருந்தவர் அவரின் கணவர் மரைக்காயர்! தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஒய்வுபெற்றுவிட்டாராம். கடினமான போலீஸ் பணியில் ஆசியம்மாள் இரவு, பகல் பாராது ஈடுபடும்போது பக்கபலமாக இருந்தாராம் அவரின் கணவர்.

இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பேரப்பிள்ளைகளுடன் பாசத்துடன் பொழுதைக் கழிக்க விரும்புவாராம் ஆசியம்மாள். தமிழக உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி ஆசியம்மாளுக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.