Published:Updated:

தஞ்சை: `கொஞ்சம் அசந்துட்டேன் சார்!’ - மதுபோதையில் தென்னை மர உச்சியில் தூங்கிய தொழிலாளி

கீழே இறங்கும் தொழிலாளி
கீழே இறங்கும் தொழிலாளி

மூன்று மணி நேரத்துக்கு மேலாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது. அங்கிருந்த பெரியவர் ஒருவர், ``ஏண்டா, உனக்கு தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா... தூக்கத்துல கீழே விழுந்திருந்தா என்னவாகியிருக்கும்னு நெனச்சுப் பார்த்தியா?” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூரில் தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளி ஒருவர், மது போதையில் இருந்தபோது தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய நிலையில் போதை தலைக்கேற, மரத்தின் உச்சியிலே தூங்கிவிட்டார். மூன்று மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்க, நடிகர் வடிவேலு பாணியில் அசால்டாக, `அசந்து தூங்கிட்டேன் சார்' என அந்தத் தொழிலாளி தெரிவிக்க அந்த இடமே கலகலப்பாக மாறியது.

மரத்தின் உச்சியில் தூங்கும் தொழிலாளி
மரத்தின் உச்சியில் தூங்கும் தொழிலாளி

தஞ்சாவூர் அருகேயுள்ள கரந்தை, சருக்கைப் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (40). திருமணமாகாதவர். இவர் தென்னைமரத்தில் தேங்காய் பறித்துக் கொடுப்பதுடன், மரத்திலுள்ள தேவையற்றவற்றை களைகளை எடுத்துக் கொடுக்கும் கூலி வேலை செய்துவருகிறார். இந்தநிலையில் கரந்தை ஜெயின மூப்பதெரு பகுதியில் தமிழரசன் என்பவரது பராமரிப்பிலுள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறித்துக் கொடுக்கச் சென்றார்.

அப்போது அவர் ஒவ்வொரு தென்னை மரமாக ஏறி தேங்காய்களைப் பறித்துக் கீழே போட்டார். அதேபோல் சுமார் 55 அடி உயரம்கொண்ட தென்னை மரத்தில் ஏறினார். ஆனால், தேங்காய்களைப் பறித்துக் கீழே போடவில்லை. நீண்ட நேரமாகியும் அவரிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை; அவர் கீழேயும் இறங்கி வரவில்லை. மர உச்சிக்கு ஏறிச் சென்றவருக்கு என்னவானது எனத் தெரியாமல் அருகிலிருந்தவர்கள் பதற்றமடைந்தனர்.

தீயணைப்புத் துறையினர்
தீயணைப்புத் துறையினர்

மேலும் தென்னை மரத்தின் உச்சியைக் கீழே இருந்தபடி பார்த்தனர். அப்போது அவர் தேங்காய்க் குலைகளுக்கு மேலே உட்கார்ந்தபடி, மரத்தைப் பிடித்துக்கொண்டு சாய்ந்திருந்தது தெரிந்தது. கிட்டத்தட்ட உட்கார்ந்துகொண்டே படுத்திருப்பதுபோல் இருந்தார். உடனே அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டனர். அவர் பெயரைச் சொல்லி அழைத்தனர். அவரிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் மரத்திலேயே தூங்குகிறாரா அல்லது அவருக்கு வேறு ஏதேனும் பிரச்னையாக இருக்குமா எனத் தெரியாமல் அங்கிருந்தவர்கள் குழப்பமடைந்தனர். இதையடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கும், தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

தொழிலாளி லோகநாதன்
தொழிலாளி லோகநாதன்
ம.அரவிந்த்
நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

அவர்கள் வந்தும் சத்தம் போட்டனர். ஆனால் அவர் எழுந்திரிக்கவே இல்லை. அதன் பிறகு ஓர் இரும்பு ஏணி மூலம் தென்னை மரத்தில் ஒரு தீயணைப்பு வீரர் ஏறினார். இதைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதியினர் அந்த இடத்தில் கூடினர்.

தீயணைப்பு வீரர்கள் மரத்தின் உச்சிக்குச் சென்ற நிலையில் கூலி தொழிலாளி லோகநாதன் கண்விழித்தார். மேலும், அவர் போதையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் தீயணைப்பு வீரர் ஏணி வழியாகக் கீழே இறங்கி வருமாறு அவரிடம் கூறினார். ஆனால் கொஞ்சம் போதை தெளிந்த லோகநாதன், நடிகர் வடிவேலு பாணியில், `சார், நான் மரத்தின் வழியாகவே கீழே இறங்கி வருகிறேன். நீங்க ஏணியில் இறங்கி வாங்க’ எனக் கூறிவிட்டு இறங்கத் தொடங்கினார்.

கீழே இறங்கும் தொழிலாளி
கீழே இறங்கும் தொழிலாளி

ஏணியில் தீயணைப்பு வீரர்கள் கீழே இறங்குவதற்குள் மரத்தின் வழியாக சர சரவென்று லோகநாதன் கீழே இறங்கிவிட்டார். ஏராளமான பொதுமக்களும் தீயணைப்பு வீரர்கள் இருந்ததை பார்த்த அவர் சிரித்துக்கொண்டே வந்தார். கிட்டதட்ட மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு மரத்திலிருந்து கூலித் தொழிலாளி இறங்கி வந்ததால் அங்கிருந்த பலரும் நிம்மதியடைந்தனர்.

லோகநாதனிடம் போலீஸார் கேட்டதற்கு, `நான் கொஞ்சம் குடிச்சிருந்தேன். மரத்துல ஏறும்போது போதை தெரியவிலை. மரத்தின் உச்சிக்குச் சென்றதும் போதை தலைக்கேறிவிட்டது. அதனால் கொஞ்சம் அசந்து அப்படியே சாய்ந்து தூங்கிட்டேன் வேற ஒண்ணும் பிரச்னை இல்லை சார்” என வடிவேலுவைப்போல் அசால்டாகக் கூற போலீஸார் உட்பட அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

தென்னை மரம்
தென்னை மரம்

இதனால் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது. அங்கிருந்த பெரியவர் ஒருவர், `ஏண்டா உனக்கு தூங்குறதுக்கு வேற இடமே கிடைக்கலையா... தூக்கத்துல கீழே விழுந்திருந்தா என்னவாகியிருக்கும்னு நெனச்சுப் பார்த்தியா?” எனக் கேட்டார். பின்னர் போலீஸார், லோகநாதனை அழைத்துச் சென்றதுடன், `இனி இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன்’ என எழுதி வாங்கிக் கொண்டு எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு