Published:Updated:

கடித்துக் குதறிய நாய்கள்; உயிருக்குப் போராடும் 5 வயது பெண் குழந்தை, 12 வயது சிறுவன்!

நேற்று இரவு வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையையும், இன்று காலை 12 வயது சிறுவனையும் வெறி நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கருப்பூரில் வெறி நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களாக இந்தப் பகுதியில் வெறி நாய்கள் கடித்து, ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்துபோனாதால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த வேதனையிலும் பீதியிலும் இருக்கிறார்கள். நேற்று இரவு வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையையும், இன்று காலை 12 வயது சிறுவனையும் வெறி நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

வீர ராஜேந்திரன்
வீர ராஜேந்திரன்

கருப்பூர், காளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களான சதீஷ்- வினோதா தம்பதியரின் 5 வயது மகள் சஸ்மிதா நேற்று இரவு, தனது வீட்டின் வாசலருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, வெறி நாய் ஒன்று இந்தக் குழந்தையின் கழுத்து, இடுப்பு பகுதிகளில் கொடூரமாகக் கடித்துக் குதறியிருக்கிறது. இதனால் அந்தக் குழந்தை வலியாலும் பயத்தாலும் கதறி அழுதிருக்கிறது. குழந்தையை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சஸ்மிதா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தப் பகுதியிலுள்ள வெறி நாய்களை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இந்தப் பகுதி மக்கள் கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்தநிலையில், இன்று காலை, அரசு என்கிற 12 வயது சிறுவனை வெறி நாய் கடித்த சம்பவம் இந்தப் பகுதி மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சிறுவனின் தொடைப் பகுதியில் வெறி நாய் கடித்ததால் ஆழமான, பயங்கரமான காயம் ஏற்பட்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, இன்று மேலும் இருவரை வெறி நாய்கள் கடித்துள்ளன.

இது குறித்து நம்மிடம் பேசிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான வீர,ராஜேந்திரன் ``கருப்பூர்ல, தெரு நாய்களின் தாக்குதலால் ஏராளமான ஆடு, மாடு, கோழிகள் இறந்துபோய்க்கிட்டு இருக்கு. இதனால் இந்தப் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கணும்னு, கடந்த ஜூலை 31-ம் தேதி, தஞ்சை மாவட்ட விவசாயிகள் மற்றும் உயரதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டேன். அந்த குரூப்பில் ஆட்சியரும் இருக்கார். அவரோ அல்லது மற்ற அதிகாரிகளோ உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், இப்ப இந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாங்க’’ என ஆதங்கப்பட்டார்.

தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நாம் இது குறித்துப் பேசியபோது ``நேற்று நாய் கடித்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுல நான் சிறப்பு கவனம் செலுத்திவருகிறேன். கருப்பூர் பகுதியில் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, நான் ஏற்கெனவே உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அங்குள்ள நாய்களை அழிக்க, பிராணிகள் நல சட்டம் அனுமதிக்காது. மக்களைப் பாதுகாக்க சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை நல்ல முறையில் செய்துவருகிறேன்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு