Published:Updated:

தென்காசி: கொரோனா பாசிட்டிவ்... மூன்று நாளில் டிஸ்சார்ஜ்; பறிபோன உயிர்! - அதிர்ச்சி சம்பவம்

கொரோனா காரணமாக உயிரிழந்த ராஜா சுப்பிரமணியன்
கொரோனா காரணமாக உயிரிழந்த ராஜா சுப்பிரமணியன்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சொந்த ஊராகக் கொண்டவர் ராஜா சுப்பிரமணியன். 49 வயதான இவர் ஆழ்வார்குறிச்சியில் ஸ்வீட்ஸ் கடை நடத்திவந்தார். அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்துவந்ததால், தென்காசியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார்.

தென்காசி அரசு மருத்துவமனை ரிப்போர்ட்
தென்காசி அரசு மருத்துவமனை ரிப்போர்ட்

அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் 3-ம் தேதி மதியம் 3:30 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், திடீரென 6-ம் தேதி இரவு 7 மணிக்கு, `உங்களுக்கு நோய் குணமாகிவிட்டது. வீட்டுக்குச் செல்லலாம்’ என்று சொல்லி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Vikatan

மூன்று நாள் சிகிச்சையில் கொரோனா நோய் குணமடைந்தது குறித்து அவருக்குச் சந்தேகம் இருந்தபோதிலும் வீட்டுக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சலும் மூச்சுத்திணறலும் இருந்திருக்கின்றன. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஆர்வலரான முத்துராமன் என்பவர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியதும் வைரலானது.

ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ராஜா சுப்பிரமணியனின் உடல்
ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ராஜா சுப்பிரமணியனின் உடல்

அதனால், ராஜா சுப்பிரமணியனை தென்காசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 8-ம் தேதி மீண்டும் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனுப்பபட்ட அவர் அன்று இரவு 11:30 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார்.

இது குறித்து சமூக ஆர்வலரான முத்துராமன் கூறுகையில், ``கொரோனா `பாசிட்டிவ்’ என ரிசல்ட் வந்த ராஜா சுப்பிரமணியனை தென்காசி அரசு மருத்துவர்கள் எதற்காக வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதே சந்தேகமாக இருக்கிறது. கடுமையாக மூச்சுத்திணறல் இருந்தபோதிலும் அவரை டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள்.

சமூக ஆர்வலர் முத்துராமன்
சமூக ஆர்வலர் முத்துராமன்

இது பற்றி நான் கேள்வி எழுப்பியதும் 8-ம் தேதி மறுபடியும் வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், காய்ச்சலுக்கான வார்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜா சுப்பிரமணியனுக்கு சர்க்கரைநோய் இருந்திருக்கிறது. அவருக்கு கொரோனா இருந்தது உண்மையாக இருக்குமானால் தென்காசி மருத்துவர்கள் மூன்று நாளில் டிஸ்சார்ஜ் செய்தது எப்படி? அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கிறார்.

இறந்த பின்னர் அளிக்கப்பட்ட சான்று
இறந்த பின்னர் அளிக்கப்பட்ட சான்று

அவர் உயிரிழந்ததும், உதவிக்காக மருத்துவமனையிலிருந்த அவரின் 9-வது படிக்கும் மகனிடம் அவசரமாகக் கையெழுத்துகளை வாங்கியிருக்கிறார்கள். அவரது மருத்துவச் சீட்டில் கொரோனா சந்தேகம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால், இன்று வந்திருக்கும் கொரோனா பாசிட்டிவ் லிஸ்ட்டில் அவர் பெயர் இல்லை.

கொரோனா இல்லாதவரை கணக்குக் காட்டுவதற்காக கொரோனா இருப்பதாகச் சொல்லியதுடன், உரிய சிகிச்சை கொடுக்காததால் இறந்திருக்கிறார். மருத்துவர்களின் அலட்சியத்தால் ராஜா சுப்பிரமணியன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவருடைய குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டிருக்கிறேன்” என்றார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் நடந்த இந்தப் பிரச்னை குறித்து சுகாதாரத்துறை சார்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்கள் இந்த விவகாரம் குறித்துப் பேச மறுத்துவிட்ட நிலையில் நம்மிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவத்துறையை சேர்ந்த ஒருவர், ``கொரோனா வார்டில் அட்மிட் ஆகியிருந்த ராஜா சுப்பிரமணியன் நன்கு ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு மூச்சுத்திணறல், காய்ச்சல் ஆகியவை குணமடைந்துவிட்டதால், மூன்று நாள்களில் டிஸ்சார்ஜ் செய்து வீட்டில் தனிமையில் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்கள்.

நெல்லை: சொந்தச் சித்தப்பாவைக் கைது செய்த எஸ்.ஐ... மருத்துவமனையிலிருந்து தப்பிய சிறைக்கைதி!

வீட்டுக்குச் சென்ற மறுநாளே அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியிருக்கிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரை அழைத்து வந்து மீண்டும் சிகிச்சை அளித்ததுடன், உயர் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். அவர் உயிரிழந்த தகவல் எங்களுக்கும் வருத்தத்தை அளிக்கிறது" என்று முடித்துக் கொண்டார். மருத்துவமனை தரப்பிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தரும் பட்சத்தில் அதைப் பரிசீலனைக்கு பின் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு