Published:Updated:

தென்காசி: மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த கொடூரம்; குடிநீர் தொட்டியில் ஏறி போராடிய மகள்!

போராட்டம் நடத்திய அபிதா
போராட்டம் நடத்திய அபிதா

மாற்றுத்திறனாளியான தந்தையைக் கொடூரமாகத் தாக்கி, பொய் வழக்கு பதிவுசெய்த போலீஸாரைக் கண்டித்து, இளம்பெண் ஒருவர் குடிநீர் தொட்டியில் ஏறிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள புளியரையில் தாட்கோ நகரில் குடியிருப்பவர், ஃபிரான்சிஸ் அந்தோணி. மாற்றுத்திறனாளியான இவர், ரேஷனில் வாங்கிய அரிசியை சைக்கிளில் எடுத்துக்கொண்டு தன் சகோதரரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

விசாரணை நடத்தும் அதிகாரி
விசாரணை நடத்தும் அதிகாரி

சாலையில் அவரை வழிமறித்த செங்கோட்டை காவல்துறையினர், அவரிடம் ‘சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்துகிறாயா?’ எனக் கேட்டுள்ளனர். அவர் ரேஷனில் சொந்த உபயோகத்துக்காக வாங்கிய அரிசி என எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக அடித்ததுடன், ரேஷன் அரிசி கடத்தியதாகப் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீஸாரின் தாக்குதலில் காயமடைந்த ஃபிரான்சிஸ் அந்தோணி, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் அபிதா புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம்
செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம்

அத்துடன், மருத்துவமனையிலிருந்து ஃபிரான்சிஸ் அந்தோணியை வெளியேற்றும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த அபிதா, 21-ம் தேதி அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம் நடத்தினார். அவரிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதால் டவரிலிருந்து கீழே இறங்கினார்.

தவறு செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, நேற்று (22-ம் தேதி) மாலை அரசு மருத்துவமனையின் மீதுள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி அபிதா போராட்டம் நடத்தினார். அவருடைய சகோதரி மற்றும் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து போராடினார்கள். பின்னர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் அபிதா போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.

தென்காசி அரசு மருத்துவமனை
தென்காசி அரசு மருத்துவமனை

இது குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட செங்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமைக் காவலர் மஜீத் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் செல்போன் டவர் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு